

ஸ்ரீ ஆதிசங்கரர் நிறுவிய சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தில் அண்மைக் காலத்தில் பீடாதிபதியாக அருளாட்சி புரிந்தவர் ஸ்ரீ அபிநவ வித்யா தீர்த்த சுவாமிகள். குருவுக்கு உண்டான லட்சணத்துடன், சர்வகாலமும் பரமானந்தத்தில் திளைத்து உலக பற்றுகளை முற்றிலும் துறந்து, வேத நெறி வழுவாது, தமது 13-வது வயதிலேயே துறவறம் ஏற்று 35 ஆண்டு காலம் மடத்தை செவ்வனே வழிநடத்திய மகான் ஸ்ரீ அபிநவ வித்யா தீர்த்த சுவாமிகள் ஆவார்.
ஸ்ரீ அபிநவ வித்யா தீர்த்த சுவாமிகள் சிறந்த தவயோகி. வேத சாஸ்திரம் மட்டுமல்லாது, அறிவியல், தொழில் நுட்பத்தில் தனிப்பட்ட முறையில் சிறந்தவராகவும் திகழ்ந்தார். அன்றைய காலத்தில் உலகில் சிறந்த விஞ்ஞானி எனப் போற்றப்பட்ட தாமஸ் ஆல்வா எடிசனைப் போன்று தமிழகத்தில் சிறந்த விஞ்ஞானியாகவும், புதிய கண்டுபிடிப்பாளராகவும் திகழ்ந்தவர் ஜி.டி. நாயுடு (1893 - 1974). இவருக்கு இறை நம்பிக்கை இல்லாவிட்டாலும், ஸ்ரீ அபிநவ வித்யா தீர்த்த சுவாமிகளிடம் தனிப்பட்ட முறையில் மரியாதையும், பக்தியையும் வைத்திருந்தார்.