தீட்சிதரின் பெருமை பாடும் ‘பிருந்தமுக்தி’! | முத்துசுவாமி தீட்சிதர் 250
வீணை தனம்மாளின் பாரம்பரியமான இசைக் குடும்பத்தின் வாரிசு, சுஷாந்த் பிரேம். இவர் வீணை தனம்மாளின் பேத்திகளான பிருந்தா, முக்தா சகோதரிகளில், முக்தாவின் கொள்ளுப்பேரன். சுஷாந்த், `பிருந்தமுக்தி' என்னும் யுடியூப் சமூகவலைத்தளத்தில், மிகவும் அரிதான (தியாகராஜ சுவாமிகளின் வாகதீஸ்வரி போன்ற அரிய கீர்த்தனைகளை) நிகழ்வுகளில் ஸ்ரீமதி பிருந்தா - ஸ்ரீமதி முக்தா பாடியிருக்கும் பாடல்களையும் முக்தாம்மா தனியாக பாடியிருக்கும் பாடல்களையும் `மியூஸிக்கலி முக்தாம்மா' என்னும் தலைப்பின்கீழ், அவரின் நினைவைப் போற்றும் வகையில் பதிவேற்றிவருகிறார்.
கர்னாடக இசை உலகில் பிரபலமானவர்களிடத்திலேயே மிகவும் பிரபலமாக விளங்கியவை வீணை தனம்மாளின் வீட்டில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை மாலை நடக்கும் கச்சேரிகள். அந்தக் கச்சேரிகளிலும் பிரபலமான பல மேடைகளிலும் முத்துசுவாமி தீட்சிதரின் சாகித்யங்கள் தவறாமல் இடம்பெறும்.
அனைத்திந்திய வானொலி நிலையத்தில் டி.பிருந்தா, முத்து சுவாமி தீட்சிதரின் 200-வது பிறந்த நாளையொட்டி, 50 ஆண்டுகளுக்கு முன் நிகழ்த்திய இசைக் கச்சேரியின் ஒலிப்பதிவை, தற்போது முத்துசுவாமி தீட்சிதரின் 250-வது பிறந்த நாளையொட்டி சுஷாந்த், அவரின் `பிருந்தமுக்தி' யுடியூப் சமூகவலைதளத்தில் அண்மையில் பதிவிட்டிருப்பது இசை உலகில் கவனத்தைப் பெற்றுள்ளது.
"வீணை தனம்மாள் பாரம்பரியத்தில் கர்னாடக இசை, மற்றும் பரதநாட்டியக் கலையை வளர்த்த என்னுடைய முன்னோரின் பங்களிப்பை ஓர் ஆவணமாக கலை உலகத்துக்கு சமூக வலைதளங்களின் வழியாக வெளிப்படுத்துவதை எனக்குக் கிடைத்த பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன். இதனைச் செய்வதற்கு வழிகாட்டியாகவும் முன்மாதிரியாகவும் எனக்கு இருப்பவர் என்னுடைய தாயாரும் முக்தாம்மாவின் பேத்தியுமான காலம்சென்ற வர்தினியே ஆவார்" என்றார் சுஷாந்த்.
