

எது உலகினில் பெரியது என்று மதுரகவியாழ்வாரைப் பார்த்து ஓர் அன்பர் கேட்டார். அவருக்குத் தனது எட்டாம் பாசுரத்தைப் பதிலாகத் தந்தார் மதுரகவியார்.
அருள்கொண்டாடும் அடியவர் இன்புற
அருளினான் அவ்வருமறையின் பொருள்
அருள் கொண்டு ஆயிரம் இன்தமிழ் பாடினான்
அருள்கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே
“முப்பொழுதும் திருமாலின் அருள் வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கிற அருளாளர்கள் மகிழ்வுறும் வண்ணம், நான்கு வேதங்களின் சாரத்தை எளிமைப்படுத்தி, அதை இனிமையான தமிழ்ப்பாசுரங்கள் ஆக்கித் தந்த நம்மாழ்வாரின் அருள்மனம் தான் எனக்கு உலகிலேயே பெரியது” என்பது மதுரகவியாழ்வாரின் பதில்.
இங்கே 'அடியவர்' என்பது மற்றைய பதினோரு ஆழ்வார்களைக் குறிக்கும் என்பது பெரியவாச்சான் பிள்ளை அவர்களின் விளக்கம். ஆனால், நடப்பவை யாவும் அந்த நாராயணனின் அருளே என்று வாழ்பவர்கள் கூட அந்த 'அடியவர்கள்' தாம். எல்லோரையும் எல்லாவற்றையும் அரியாக அறியும் அவர்கள் 'அவன்' அருளைக் கொண்டாடுபவர்கள். அந்த ஆழ்வார்களுக்கு நிகரானவர்கள்.
இந்தப் பாசுரத்தில் 'அருள் கொண்டாடும்', 'அருளினான்', 'அருள் கொண்டு ஆயிரம்' , 'அருள் கண்டீர்' என்று 'அருளால்' விளையாடியிருக்கிறார் நம்மாழ்வார். நாராயணனின் அருள் கூட விளையாட்டு தான். அவன் திருவிளையாடல் கூட ஒரு விதத்தில் அருள் பாலித்தல் தான்.
வேதமுதல்வனான வேங்கடவனின் பெருமைகளை மறைத்துச் சொல்வதனால் வேதங்களை 'மறை' என்கிறோம். ஆனால் அவற்றை வெளிப்படையாகச் சொன்னவர் நம்மாழ்வார். எல்லோராலும் எளிதில் புரிந்து கொள்ள முடியாததும் சமஸ்கிருத மொழியில் இருப்பதுமான வேதங்களைச் சாறு பிழிந்து தமிழில் ஆயிரம் பாசுரங்களாக அருளிச் செய்தவரும் நம்மாழ்வார் தான்.
எல்லோரும் வேதங்களைப் புரிந்து கொள்வதற்கும் பெருமாளின் பெருமையைச் சுவைத்து மகிழ்வதற்கும் இது ஒரு பெரும் வாய்ப்பாக அமைந்தது. தான் பெற்ற இன்பத்தை எல்லோருக்கும் பருகத் தந்த நம்மாழ்வாரின் தாயுள்ளம் மதுரகவியாழ்வாரைக் கொள்ளை கொண்டது. இந்தக் காரணங்களால் தான் 'வேதம் தமிழ் செய்த மாறன்' என்ற சிறப்புப் பெயரால் நம்மாழ்வார் அழைக்கப்படுகிறார். அவர் இந்தத் திருப்பெயரைப் பெறுவதற்குத் திருமாலின் பேரருளே காரணம்.
எனில், மதுரகவியாழ்வார் ஏன் நம்மாழ்வாரின் அருள் தான் உலகிலேயே பெரியது என்கிறார் என்ற கேள்வி எழுகிறது.
தன் பெருமைகளைத் தண்டமிழ் பாசுரங்களில் பாடிப் பெரும் புகழடைந்த நம்மாழ்வாரை நினைத்து பெரிய பெருமாளுக்குப் பெருமை. தன்னை மறந்து தன் அடியவனாகிய நம்மாழ்வாரின் சாதனையை எல்லோரும் கொண்டாடுவது தான் அவருக்கு ஆனந்தம். தன் பக்தனுக்காகத் தன்னை விட்டுக்கொடுப்பதில் அவருக்கு ஓர் அளப்பரிய சுகம்.
அருள் கொண்டு ஆயிரம் இன்தமிழ் பாடினான்
அருள்கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே
என்ற வரிகளை இரண்டு விதமாகப் புரிந்துகொள்ளலாம். நாரயணனின் அருள் கொண்டு இனிமையான ஆயிரம் தமிழ்ப் பாசுரங்களைப் பாடிய நம்மாழ்வாரின் அருள் தான் உலகினில் பெரியது என்பது ஒரு பொருள். மாலனின் கருணையால் ஆயிரம் இன்தமிழ் பாக்களை இயற்றினார் நம்மாழ்வார். (ஆஹா!) அருளன்றோ இவ்வுலகினில் பெரியது என்பது இன்னொரு பொருள்.
நம்மாழ்வாரின் அருள் தான் உலகில் பெரியது என்று சொல்வது ஓர் உபசாரம். நாராயணனின் அருளே உலகில் பெரியது என்று கூறுவது தான் உண்மை.
முந்தைய அத்தியாயம்: கண்டும் கொண்டும் அருளிய காரிமாறனார் | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் 26