

பாரத தேசத்தில் வாழ்ந்த மகான்களுள் அருணகிரிநாதரும் ஒருவர். திருவண்ணாமலைத் திருத்தலத்தில் கிபி 15-ம் நூற்றாண்டில் வாழ்ந்து, முருகப் பெருமானின் அருளை பரிபூரணமாகப் பெற்ற இவர், ஆறுமுகப் பெருமானுக்கு திருப்புகழ், திருவகுப்பு, கந்தரந்தாதி, கந்தர் அநுபூதி, கந்தரலங்காரம், வேல் விருத்தம், மயில் விருத்தம் முதலிய 6 நூல்களை படைத்தருளினார்.
இவற்றில் மிகவும் சிறிய அளவில் கந்தர் அநுபூதி இருந்தாலும், பொருளில் பெரியது. கந்தன் என்ற சொல்லுக்கு பகைவர்களின் ஆற்றலை வற்றச் செய்பவர், ஆறுருவும் ஒன்றாய் இணைந்தவர், ஆன்மாக்களுக்கு பற்றுக் கோடாய்த் திகழ்பவர் என்று பொருள் கொள்ளலாம்.