

வைணவ சம்பிரதாயத்தின்படி பிரளய காலத்தில் உலகம் அனைத்தையும் உண்டு ஓர் ஆலிலை மேல் குழந்தைக் கண்ணனாகத் திருமால் படுத்திருப்பார். அவர் என்னென்ன உலகங்களை உண்பார் என்று தனது ஆறாம் பாசுரத்தில் திருப்பாணாழ்வார் சொல்கிறார்.
துண்ட வெண்பிறை யன்துயர் தீர்த்தவன் அஞ்சிறைய
வண்டுவாழ் பொழில்சூ ழரங்கநகர் மேயவப்பன்
அண்ட ரண்டபகி ரண்டத்தொரு மாநிலம் எழுமால்வரை முற்றும்
உண்ட கண்டங்கண் டீரடி யேனை யுய்யக்கொண்டதே!
அண்டம் என்றால் மொத்தம் பதினான்கு உலகங்கள். மேலே ஏழு. கீழே ஏழு.
வேதங்களின் கூற்றுப்படி பூலோகம், புவர்லோகம், சுவர்க்க லோகம், மகாலோகம், ஜனலோகம், தபோலோகம், சத்திய லோகம் ஆகியவை மேல் ஏழு உலகங்கள். அதல லோகம், விதல லோகம், சுதல லோகம், தலாதல லோகம், மகாதல லோகம், ரசாதல லோகம், பாதாள லோகம் ஆகியவை கீழ் ஏழு உலகங்கள்.
இந்த பதினான்கு உலகங்களில் வாழக்கூடிய உயிரினங்கள் தாம் அண்டர். மனிதர்கள், தேவர்கள், மிருகங்கள், தாவரங்கள் என இவை மொத்தம் நான்கு. தேவர்கள் என்றால் அதில் அசுரர்களும் அடக்கம். மிருகங்கள் என்றால் அதில் பறவைகளும், பூச்சிகளும் இன்ன பிற உயிரினங்களும் அடக்கம். அண்டம் என்பதை பிரம்மாண்டம் என்று கூறும் வழக்கும் உண்டு.
பஹி என்ற சமஸ்கிருதச் சொல் தமிழில் பகி என்று ஆகும். இதற்கு சுற்றி சூழ்ந்திருக்கிற என்று பொருள். இந்த அண்டத்தைச் சுற்றி இன்னும் ஏழு உலகங்கள் இருக்கின்றனவாம். அவை நிலம், நீர்,காற்று, நெருப்பு, ஆகாயம், அகங்காரம் , மகத் தத்துவம் (மூலப் பிரகிருதியின் மாறுபட்ட வடிவம்) என்று வைணவம் கூறுகிறது.
ஒரு மாநிலம் என்பது ஒப்பற்றதாகிய நம் பூமி . இதுவரை பல்வேறு உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்றதொரு கோளாக பூமி மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது. அதனால் பூமியை இரண்டு முறை திருப்பாணாழ்வார் குறிப்பிடுகிறார்.
எழு மால் வரை என்பது பூமியை நிலைநிறுத்தும் ஏழு பெரிய மலைகள். அவை மகேந்திர மலை, மால்ய மலை, சஹ்ய மலை, சுக்திமான் மலை, ரிக்ஷ மலை, விந்திய மலை, பாரியாத்ர மலை என விஷ்ணு புராணம் சொல்கிறது.
அண்டம், பகிரண்டம், எழு மால் வரை ஆகியவற்றை ஊழிக்காலத்தில் உட்கொள்ளும் பெரிய பெருமாள் பக்தர்களை உய்விப்பதற்காக திருவரங்கத்துக்கு மனமிரங்கி வந்திருக்கிறார். அதுவும் 'அஞ்சிறைய வண்டுவாழ் பொழில் சூழ் திருவரங்கம்'. இங்கே வண்டுகள் மெய்யுணர்வுள்ள ஞானாசிரியர்களின் குறியீடு.
வண்டு ரீங்காரம் செய்து கொண்டே இருக்கும். ஆசாரியர்கள் பெருமாளின் நாமத்தைச் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். வண்டு எல்லா இடங்களுக்கும் போகும். ஆசாரியர்கள் கூட ஓரிடத்தில் இருக்கமாட்டார்கள்.
பல வகை மலர்களில் சென்றமர்ந்து அவற்றின் சாறாகிய தேனை வண்டுகள் உண்ணும். அதே போல பல்வகை சாத்திரங்களை நன்கு பயின்று அவற்றின் சாரமான தத்துவ உட்பொருளை ரசித்து அனுபவிப்பவர்கள் ஆசாரியர்கள்.
'சிறகுகள் வண்டுகளின் கமனத்துக்கு சாதனமாவது போல் ஞான அனுஷ்டானங்கள் உன்னத கதிக்கு சாதனமாம் என்க' என்பது ஶ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியாரின் உரை விளக்கம். கமனம் என்றால் செல்லுகை (Journey).
இங்ஙனம் ஞானம் சூழ்ந்த ஆசாரியர்கள் வாழும் திருவரங்கத்தில் கோயில் கொண்டுள்ள பெரிய பெருமாள், மேற்சொன்ன உலகங்களை உண்ணும் போது அவை கழுத்து வழியாக தானே வயிற்றுக்குச் சென்றிருக்கும். அதனால் பெருமாள் திருக்கழுத்தை வழிபட்டு அதன் அழகை திருப்பாணாழ்வார் துய்த்து துய்த்து மகிழ்கிறார்.
மற்ற உலகங்களை ஊழிக்காலத்தில் உண்பார் எனினும் தன்னை மட்டும் உண்ணாமல் உய்வித்தது பரந்தாமனின் பெருங்கருணை என்பதையும் ஆழ்வார் அறிந்திருந்தார்.
அதனால்தான், 'உண்ணக்கொண்டதே ' என்று பாடாமல் 'உய்யக்கொண்டதே' என்று பாடுகிறார்.
(தொடரும்)
முந்தைய அத்தியாயம்: செல்வத்துள் செல்வம் அருட்செல்வம்? | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் - 15