

ஆத்மஞானி ஸ்ரீ சிவன் சார், காஞ்சி மகாஸ்வாமியின் பூர்வாஸ்ரம சகோதரர். அவருக்கு சென்னை நங்கநல் லூரில் ஸ்ரீ சிவன் சார் யோக சபை என்ற பெயரில் கோயில் எழுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. காவிரி நதிக்கரையில் அமைந்துள்ள சரித்திரப் பிரசித்தி பெற்ற கர்ஜுராபுரி திருத்தலத்தில் (ஈச்சங்குடி கிராமம்) ஸ்ரீ சுப்பிரமணிய சாஸ்திரிகளுக்கும் மகாலட்சுமி அம்மையாருக்கும் நான்காவது மகனாக குரோதி ஆண்டில் புரட்டாசி மாதம் புஷ்ய நட்சத்திரத்தில் (1904-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 3-ம் நாள்) ஸ்ரீ சிவன் சார் அவதரித்தார்.
பிரம்மஸ்ரீ சதாசிவ சாஸ்திரிகள், குடும்பத்தினரால் சாச்சு என்று அழைக்கப்பட்டார். அவரது பக்தர்கள் சிவன் சார் என்றே அழைத்தனர். (SAR – Sivan Always Remain) சிவன் சாரின் அவதாரம் குறித்து, ‘சுடர்ஜோதி ஸ்வயம் பிரகாசமான ஆனபிரான் அருட் போராள் இவண் அகிலம் வந்தோன்’ என்று ஒரு பழந்தமிழ் ஓலைச் சுவடியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.