பொன்னிறமா, செந்நிறமா? | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் - 12

பொன்னிறமா, செந்நிறமா? | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் - 12
Updated on
2 min read

அரங்கநாதனின் அரவிந்தத் தாள்களை ஆராதித்து முடித்த பின்னும் திருப்பாணாழ்வாரின் பசி தீரவில்லை. தன் கண்களாலும் பண்களாலும் இன்னும் இன்னும் பெருமாளைத் துய்க்க வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார்.

உவந்த உள்ளத்தனாய் உலகம் அளந்து அண்டம் உற
நிவந்த நீள் முடியன் அன்று நேர்ந்த நிசாசரரைக்
கவர்ந்த வெங்கணைக் காகுத்தன் கடியார்பொழில் அரங்கத்து அம்மான் அரைச்
சிவந்த ஆடையின் மேல் சென்றது ஆம் என சிந்தனையே

வாமனாவதாரத்தையும் இராமாவதாரத்தையும் பாடும் திருப்பாணாழ்வாரின் மனம், பெருமாளின் இடையில் இருக்கும் பீதாம்பரத்தில் போய் ஒன்றி விடுகிறது.

“அமலனாதிபிரான்” என்று தொடங்கும் முதல் பாசுரத்தில் திருமாலின் கமலபாதங்கள் திருப்பாணாழ்வாரின் கண்களோடு கலந்து விடுகின்றன. இந்தப் பாசுரத்தில் ஆழ்வாரின் அகம் போய் அரங்கனின் அரையாடையில் அமிழ்கிறது.

இறைவனே வந்து ஆட்கொண்ட பிறகு தான் நாம் அவனைப் பார்க்கத் தொடங்குகிறோம். அவன் சொல்லச் சொல்லத் தான் அவனைப் புரிந்து கொள்கிறோம். மொத்தத்தில் அவன் அருளால் தான் அவனையே அறிகிறோம். இங்கே திருப்பாணாழ்வாருக்கும் அதே தான் நேர்கிறது. இறைவனே மனமிரங்கி தன்னை வெளிப்படுத்திய பின்பு தான் காணும் யாவும் அவருக்கு ‘அவனாக’த் தெரிகிறது. திருமாலின் பேரருளையும் பெரும் மாட்சியையும் ஒருங்கே உணர்ந்து அவர் திகைத்து நிற்கிறார்.

உலகளத்தல் என்னும் செயல்பாட்டைச் சாக்காகக் கொண்டு உயிர்கள் அனைத்தின் மீதும் பேதா பேதமின்றி தன் திருவடியைப் பதித்த அந்த வாமனனைக் காட்டிலும் ஒரு பேரருளாளன் இருக்க முடியுமா? அகம் நிறைந்து மகிழ்ந்திருந்தால் அல்லவா அவன் இங்ஙனம் அருள் புரிய முடியும்?

அவன் ஓங்கி வளர்ந்து பெரிதாகிக் கொண்டே இருக்கிறான் . அவன் உறுப்புகளும் பெரிதாகின்றன. அதனால் அவன் தலை மீது உள்ள மணிமுடியும் பெரிதாகி அண்டத்தின் விளிம்பைப் போய் இடிக்கிறது. ஏனெனில் அவன் தான் உண்மையான, நிரந்தரமான மன்னன். இந்த அண்டங்களுக்கெல்லாம் அதிபதி.

அந்த மாமன்னனுக்கு இருட்டில் மறைந்து தவறு செய்யும் நிசாசரர்களைத் தெரியாமல் இருக்குமா? நாம் செய்யும் தவறை அவன் அறியான் என்று நினைப்பதைப் போன்றதொரு முட்டாள்தனம் உண்டா? அவன் ஒருவன் தானே அனைத்தும் அறிந்த சர்வஞ்ஞன்!

இந்த உணர்தல் அனைத்தும் ரங்கேஸ்வரனைச் சந்தித்த அடுத்த நொடியே திருப்பாணாழ்வாருக்குச் சித்திக்கிறது. அவரின் மனம் “அரைச் சிவந்த ஆடையின் மேல் சென்றது என சிந்தனையே” என்று பாடுகிறது.

வாசுதேவனின் இடையில் இருக்கும் ஆடையைப் பீதாம்பரம் என்பர். பீதம் என்றால் மஞ்சள் அல்லது பொன்னிறம். அம்பரம் என்றால் ஆடை. ஆனால் அது சிவந்த நிறத்தில் இருப்பதாகத் திருப்பாணாழ்வார் பாடுகிறார். இதற்கு ஆசாரியர்கள் பல விளக்கங்களைத் தந்துள்ளனர்.

“ஹயக்ரீவ அவதாரத்தின் போது மது, கைடபன் ஆகிய அசுரர்களை மூட்டைப்பூச்சிகளை நசுக்கி அழித்தற்போல தன் தொடையில் நசுக்கி பெருமாள் அழித்துவிட்டார். அப்போது அவரது இடுப்பில் இருந்த அரையாடையில் ரத்தக்கறை படிந்துவிட்டது. அதனால் பீதாம்பர ஆடை சிவந்த நிறத்தில் காட்சியளிக்கிறது. ஆக, சிவப்பு நிறம் என்பது பெருமாள் நம்மைக் காப்பார் என்பதற்கான அடையாளம்” - இது சுவாமி வேதாந்த தேசிகர் தனது முனிவாகன போகம் என்னும் நூலில் அளித்துள்ள விளக்கம்.

“மாயை என்பது பொய்த்தோற்றம் என்றாலும் வைணவ தத்துவத்தைப் பொறுத்தவரை அதுவும் பிரம்மத்தின் (விஷ்ணுவின்) வடிவமே. இந்த உலகம் ஒரு மாயை என்று வைத்துக் கொண்டாலும் அதன் மூலமாகத்தான் நாம் திருமாலை அறிகிறோம். அந்த மாயையின் குறியீடே சிவந்த நிறம்” - இது மற்றொரு விளக்கம்.

இவையிரண்டும் அல்லாது சிவந்த என்பதற்கு செம்மையான என்று பொருள் கொண்டு, சிவந்த பட்டாடை என்பதை உயர் ரக மஞ்சள் பட்டாடை என்றும் புரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு திருமாலின் வடிவழகைப் பார்த்து பார்த்து அனுபவித்த திருப்பாணாழ்வார் ஒரு சோலையில் புகுந்த வண்டென மாறுகிறார். எப்படி ஒரு வண்டுக்கு ஒரு மலரில் உள்ள தேன் மட்டும் போதாதோ, திருப்பாணாழ்வாருக்கு, திருவடிகளும் திருப்பீதாம்பரமும் நிறைவளிக்கவில்லை.

அவர் அடுத்து என்ன பாடுகிறார் தெரியுமா?

| தொடரும்...|

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in