

மகாகவி பாரதியாரை பன்மொழிப் புலமை வாய்ந்தவராக, பத்திரிகையாளராக, எழுத்தாளராக, கட்டுரையாளராக, தேசபக்தராக பல பரிமாணங்களில் தரிசித்திருக்கிறோம். ஆனால், பாரதியாரின் இத்தனைப் பரிமாணங்களுக்கும் `ஆதாரமாக இருப்பது எது?' என்னும் கேள்விக்கான பதிலைத் தருகிறது `சக்திதாசன்' என்னும் ஆவணப்படம்.
ஆன்மிகத்தின் துணை கொண்டு குறுக்குவெட்டாக பாரதியின் வாழ்க்கையை நமக்குத் தரிசனப்படுத்துவதுதான் இந்த ஆவணப்படத்தின் சிறப்பு. பாரதியார் 16 வயதிலேயே எட்டயபுரம் அஷ்டமூர்த்தீஸ்வரரின் பெயரில் `இளசை ஒரு பா; ஒரு பஃது' என்னும் அரிய இலக்கண வகைமையில் செறிவான வெண்பாவால் பிரபந்தம் பாடியிருப்பது, காசியில் முதன் முதலாக கோயிலில் ருத்ர வடிவில் காளியைக் கண்டது, அங்கு காளிதேவிக்கு பலியிடப்படும் எருமைகள், தாமசம் என்னும் குணத்தின் குறியீடு எருமை. எனில், தாமசம் குணத்தைத்தானே பலியிட வேண்டும் என்னும் பாரதியின் சிந்தனையும் இதில் பதிவாகியிருக்கிறது.
சகோதரி நிவேதிதை உடனான பாரதியின் சந்திப்பு எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது, அதனால் பாரதியின் எண்ணத்திலும் எழுத்திலும் எத்தகைய தாக்கம் விளைந்தன என்பதை அற்புதமாக பதிவு செய்திருக்கிறது இந்த ஆவணப்படம். `பெண் விடுதலை இன்றி மண் விடுதலை இல்லை' என்னும் பேருண்மையை பாரதிக்கு உணர்த்திய அந்தச் சந்திப்பின் அடர்த்தியை கவனமாகவும் நேர்த்தியாகவும் அழகியலுடனும் இந்தப் படத்தில் காணமுடிகிறது.
ராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர், சகோதரி நிவேதிதை மூவரும் சேர்ந்து பாரதிக்கு வழங்கிய கொடைதான், `சாக்தம்' எனப்படும் சக்திவழிபாட்டின் சாரம். அதைக்கைகொண்டுதான், "சந்திரன் ஒளியில் அவளை கண்டேன், சரணம் என்று புகுந்து கொண்டேன்" என்னும் வரிகளை பாரதி எழுதியதை உணர முடிகிறது.
ஆண்டாள், நம்மாழ்வாரின் சில பிரபந்தப்பாடல்களை பாரதியார் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருப்பது, ஆனந்தக் களிப்பாக தாயுமானவர் எழுதிய `சங்கர சங்கர சம்பு' பாடலின் வரிகளை அடியொட்டி, பாரதி எழுதிய `சொன்னசொல் ஏதென்று சொல்வேன்', பகவத்கீதைக்கு உரை, அரவிந்தரின் அறிமுகத்தால் ரிக் வேதத்தின் சில சூக்தங்கள், கேனோபநிஷத், ஈசாவாஸ்ய உபநிஷத் போன்றவற்றுக்கு உரை போன்றவை பாரதியார் ஆன்மிகத்துக்கு வழங்கிய கொடை! ரிக் வேதத்தில், `ஜாதவேதஸே' என அக்னி புகழப்படுகிறது.
ஆக்கவும் அழிக்கவும் வல்லது அக்னி. இதைப் படித்தபின்னே, `தீயே நின்னைப்போல என் உள்ளம் சுடர் விடுக' என்று எழுதும் பாரதி, ஞானத்தீயால் அகந்தை அகலும் என்கிறார். எல்லா படைப்புகளிலும் இறைவனைக் காணும் அத்வைத நிலைக்குச் சென்ற பாரதியார், அதன் வெளிப்பாடாக `காக்கை குருவி எங்கள் சாதி' என்று பாடியிருப்பதை பதிவு செய்கிறது இந்த ஆவணப்படம்.
யாதுமாகி நின்றாய் காளி, தேவி உன்னை சரணடைந்தேன் தேசமுத்துமாரி போன்ற பாடல்களை, பாரதியார் பாடிய திருத்தலங்களையும் சேர்த்து காட்சிப்படுத்தியிருப்பது சிறப்பு. சிக்கில் குருசரண், அபிஷேக் ரகுராம் சில பாடல்களை நெகிழ்ச்சியாகப் பாடியுள்ளனர். ஆங்காங்கே கதை சொல்லி, பின்னணி குரலையும் வழங்கியிருக்கிறார் இளங்கோ குமணன், இசைக்கவி ரமணன் பாரதியைப் பற்றிய பார்வையை வழங்கியிருக்கிறார்.
பாரதியாராக ஆவணப்படத்தில் தோன்றும் கார்த்திக் கோபிநாத் நல்ல தேர்வு. பாரதியாரின் கொள்ளுப்பேரன் ராஜ்குமார் பாரதி ஆவணப் படத்துக்கு இசையமைத்துள்ளார். எள்ளுப்பேரன் நிரஞ்சன் பாரதி வசனம் எழுதியுள்ளார். உஷா ராஜேஸ்வரியின் சீரான இயக்கத்தில், பாரதியின் சக்தியே பராசக்திதான் என்னும் நிதர்சனம், துலக்கமாக ஆவணமாகியிருக்கிறது. சிங்கப்பூர் சௌந்தர்யா சுகுமாரன் தயாரித்துள்ளார். (https://youtu.be/icSRo0sXMZM?si=WHXLzGuOcaJZHOVd)