

தமிழகத்தின் தொன்மை மற்றும் பாரம்பரிய நகரம் மதுரை. சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மாநகரம். புராணச் சிறப்புகள் நிறைந்த தலம். இறைவனே இஷ்டமுடன் தோன்றி 64 திருவிளையாடல்கள் புரிந்த தலம். உலகப் புகழ்பெற்ற சித்திரைப் பெருந்திருவிழா நடைபெறும் சீர்மிகு நகரம். இத்தகு சிறப்புமிக்க மதுரை மாநகரில் உள்ள கோயில்கள் அனைத்தும் புராணச் சிறப்புமிக்கவை.
மதுரையின் சிறப்புகளில் முக்கியமான அழகர்மலை இயற்கை எழில் கொஞ்சும் பிரதேசம். மலையும் வளமும், மூலிகை மணமும் நிறைந்த வனப்பகுதி. இங்குதான் மலையடிவாரத்தில் பெருமாள் சுந்தரராஜனாக கோயில் கொண்டுள்ளார். மலையின் நடுப்பகுதியில் அவர் மருமகன் முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் கடைசி வீடான பழமுதிர்சோலை அமைந்துள்ளது. உச்சியில் புனித நதியான நிறைந்த நூபுர கங்கையும், ராக்காயி அம்மன் கோயிலும் அமைந்துள்ளன. அழகர்கோயில் அடிவாரத்திலிருந்து 4 கி.மீ. தொலைவில் கடல் மட்டத்திலிருந்து 1,400 அடி உயரத்தில் அமைந்துள்ளது இந்த நூபுரகங்கை. இதன் அதிதேவதையாக இருந்து அருள்பாலித்து காக்கிறாள் ராக்காயி அம்மன்.
நூபுர கங்கையானது, மண்ணில் பாயும் புனித நதிகளில் எல்லாம் முதன்மையானது என்கிறது தலபுராணம். காரணம், இது மகாவிஷ்ணுவின் திருப்பாதத்தில் இருந்து தோன்றியது. மகாவிஷ்ணு திரிவிக்ரமனாக அவதாரம் எடுத்தபோது, வானளந்த அவர் பாதத்துக்குப் பிரம்மா திருமஞ்சனம் செய்தார். மகாவிஷ்ணுவின் பாதத்தை அலங்கரிக்கும் சிலம்புக்கு ‘நூபுரம்' என்று பெயர். அந்தச் சிலம்பில் பட்டுத் தெறித்த தீர்த்தம் மண்ணுலகில் ஜீவநதியாகப் பாயத் தொடங்கியது. சிலம்பிலிருந்து பிறந்ததால், அதற்கு ‘சிலம்பாறு' என்ற பெயரும் ஏற்பட்டது. அந்தப் புனித நதியே, நூபுர கங்கையாக அழகர்மலையின் உச்சியில் பாய்கிறது.
நூபுர கங்கைத் தீர்த்தம் எங்கே உற்பத்தியாகிறது என்பது யாருக்கும் தெரியாது. அத்தீர்த்தம் மலையிலிருந்து மாதவி மண்டபத்துக்கு வருவதைத்தான் நம்மால் பார்க்க முடியும். நோய்களை தீர்க்கும் உலோகச் சத்துகள் உள்ள அற்புதமான இந்த நதி, சிலம்பாறாக மாறி கீழே வயல்களுக்கும் பாய்கிறது. சுந்தரராஜப் பெருமாளான கள்ளழகரின் திருமஞ்சனத்துக்கான தீர்த்தம் தினமும் நூபுர கங்கையிலிருந்துதான் கொண்டு செல்லப்படுகிறது. சித்திரைத் திருவிழாவின்போது மதுரையிலும், வண்டியூரிலும் அழகர் தங்கியிருந்தாலும், இங்கிருந்து செல்லும் தீர்த்தத்தில்தான் அவருக்கு அபிஷேகம் நடைபெறும். வேறு தீர்த்தத்தில் நீராட்டினால் கள்ளழகரின் திருமேனி கருத்துவிடும் என்று சொல்கின்றனர்.
ராக்காயி அம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் நீராடி பின் அம்மனை வழிபடுகின்றனர். ராக்காயி அம்மன் ஆங்கிரச முனிவரின் மகள், பதினெட்டாம்படி கருப்பண்ண சுவாமி மற்றும் திருமாலின் தங்கை எனப் போற்றப்படுகிறாள். ராக்காயி அம்மன், காஷ்யப முனிவருக்கும் அதிதிக்கும் பிறந்த 12 பிள்ளைகளில் ஒருவரைத் திருமணம் செய்தவள் என்கிறது திருமாலிருஞ்சோலை புராணம். ராக்காயி அம்மன், மலையையும், காட்டையும் காக்கும் வனதேவதை. நூபுரகங்கையை காக்கும் காவல் தெய்வம் அவள்.
நூபுரகங்கையில் பல அரிய மூலிகைகள் கலந்திருக்கின்றன. உடல் மற்றும் மனநோயைத் தீர்க்கும் அருமருந்து அது.
அதனால்தான் பக்தர்கள் இங்கு நீராடுவதோடு, அதை எடுத்துச்சென்று புனித நீராகவும் பயன்படுத்துகின்றனர். இங்கு நீராடி ராக்காயி அம்மனை வேண்டினால், பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேறுகின்றன. குறிப்பாக, திருமண வரம், குழந்தை பாக்கியம் வேண்டுவோர் நூபுரகங்கையில் நீராடி வழிபட, அவர்களின் வேண்டுதல் நிறைவேறுகிறது.
அம்மனுக்கு புடவை சாத்தி வேண்டிக்கொண்டால், சகல காரியங்களும் நிறைவேறும். ஆடி மாதத்தில் 10 நாட்கள் இங்கு மிகவும் விசேஷம். இங்கு உற்சவம் கிடையாது. ஆனாலும், ஆடி மாதத்தில் வெள்ளிக்கிழமைதோறும் சிறப்பு நைவேத்தியமும், பலவித கூழும் அம்மனுக்கு படைக்கப்படுகிறது. ராக்காயி அம்மனை குலதெய்வமாகக் கும்பிடுவோர், மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாழ்கின்றனர். அவர்கள் இங்கிருந்து பிடிமண்ணை எடுத்துச் சென்று, தாங்கள் வாழும் ஊரில் ராக்காயி அம்மனுக்கு கோயில் கட்டி வழிபடுகின்றனர்.
அழகர்கோயிலுக்கு வரும் பக்தர்கள் பலர், சோலைமலை வந்து முருகனையும் தரிசனம் செய்துவிட்டு திரும்பிச் செல்கின்றனர். ஆனால் அப்படிச் செல்லக் கூடாது. மேலே கோயில் கொண்டிருக்கும் ராக்காயி அம்மனையும் வழிபட்டுச் செல்லவேண்டும். பக்தர்கள் தவறாமல் மலைக்கு மேல் வந்து, புனிதமான நூபுர கங்கையில் நீராடி ஈர உடையுடன் ராக்காயி அம்மனையும் வணங்கிச் செல்லவேண்டும். அப்படிச் செய்தால், அவர்களின் யாத்திரை பூரணமாகும். மேலும், இது சித்தர்கள் பூமி. இங்கு வந்து இறைவனை வழிபட்டாலே சித்தர்களின் ஆசீர்வாதமும் கிடைக்கும்.