

கோதா ஸ்துதி என்ற நூல் ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வாருக்குச் செல்வத் திருமகளாய் அவதரித்த கோதையின் பெருமைகள் தொடர்பாக ஸ்வாமி தேசிகன் அருளிச் செய்த ஒரு ஸ்தோத்திர நூலாகும். இந்த நூலில் 29 ஸ்லோகங்கள் அமைந்துள்ளன. ஸ்வாமி தேசிகன் ஸ்ரீவில்லிபுத்தூரில் எழுந்தருளியிருந்த காலத்தில் ஒரு நாள் மௌன விரதம் இருந்து வந்தார்.
அன்று எதிர்பாராதவிதமாக ஸ்வாமி எழுந்தருளியிருந்த திருமாளிகை முன்பு ஆண்டாளும் ஸ்ரீரங்கமன்னாரும் புறப்பாடு கண்டருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். உடனே ஸ்வாமி வெளியே வந்து பக்திப் பெருக்கால் இந்த ஸ்துதி நூலை இயற்றியதாக கூறப்படுகிறது. அன்று முதல் ஸ்ரீவில்லிபுத்தூரில், ஆண்டாள் நியமனமாக வஸந்த உத்ஸவ திருநாளை, கோதா ஸ்துதி அவதாரத் திருநாளாகக் கொண்டாடப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.