மேலக்கொடுமலூர் குமரையாவுக்கு பதிகம் பாடிய இசுலாமிய புலவர்!
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியிலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் மேலக்கொடுமலூர் குமரக்கடவுள் கோயில் அமைந்துள்ளது. மேலகொடுமலூர் என்றால் வலிமைமிக்க முழு ஆயுதம் தாங்கி மேற்கு திசை நோக்கி நிற்கின்றவனின் ஊர் என்று அர்த்தம். அதாவது, முருகப்பெருமான் அசுரனை மழு என்ற சக்திவாய்ந்த ஆயுதத்தால் அழித்துவிட்டு திரும்பும் வழியில் வனப்பகுதியில் வளர்ந்திருந்த உடை மரம் ஒன்றில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்.
அந்த வனத்தில் தவம் செய்து கொண்டிருந்த முனிவர்கள், முருகப்பெருமானைக் கண்டு வணங்கினர். அந்த இடத்திலேயே (மேற்கு திசையில்) முருகப்பெருமான் நின்று அருளாசி வழங்கினார் என்பது இந்த கோயிலின் ஸ்தல வரலாறு.
முருகப் பெருமான் அஸ்தமன வேளையில் முனிவர்களுக்குக் காட்சி தந்ததால், சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகே அபிஷேக, ஆராதனைகள் நடை பெறுகின்றன. திங்கள், வெள்ளி, கிருத்திகை ஆகிய நாட்களில் இரவு வேளைகளில் 33 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெறு கிறது. வைகாசி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையன்று மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளால் செய்யப்படும் முப்பழ பூஜை இங்கு மிகவும் பிரசித்திப் பெற்றது.
தீராத முழங்கால் வலி யால் அவதிப்படுபவர்கள், வயிற்று வலி, நெஞ்சு வலி ஆகிய பாதிப்புகளால் அவதிப்படும் பக்தர்கள் முருகப்பெருமானை வணங்கி வழிபட்டுச் சென்றால், விரைவில் நிவாரணம் கிடைக்கும் என்கிறார்கள். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் 48 நாட்கள் விரதமிருந்து, கோயிலின் தலவிருட்சமான உடை மரத்தின் இலைகளைப் பிரசாதமாகப் பெற்று உண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இந்த ஸ்தலத்தைப் பற்றி ஜவாது புலவர், பாம்பன் சுவாமிகள், திருவேகம்பத்தூர் கவிராஜ பண்டிதர் உள்ளிட்டோர் பாடியுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகில் உள்ள எமனேசுவரம் எனும் சிற்றூரில் 1745-ம் ஆண்டு பிறந்தவர் முஹம்மது மீர் ஜவாது புலவர். இவர், ‘முகையதீன் ஆண்டகை பிள்ளைத் தமிழ், நாகைக் கலம்பகம், மதீனத்தந்தாதி, ராஜராஜேஸ்வரி பஞ்சரத்ன மாலை,வண்ணக் கவிகள், சீட்டுக் கவிகள், சித்திரக கவிகள், மாலை மாற்றுகள், குமரையா பதிகங்களையும்’ பாடியுள்ளார். மேலும், ரகுநாத சேதுபதி, பிரம்பூர் ஆனந்த ரங்கதுரை, முத்துகிருஷ்ணன், கச்சி செல்லப்பன் உள்ளிட்ட வள்ளல்களையும் பாடி சிறப்பு செய்துள்ளார்.
ஜவாது புலவரின் முகையதீன் ஆண்டகை பிள்ளைத் தமிழ் இன்றளவும் தமிழக முஸ்லிம்களின் தாலாட்டுப் பாடல்களாக வாய்மொழியாகப் பாடப்படுகிறது. அதுபோல, மேலக்கொடுமலூரில் குமரக்கடவுள் கோயிலுக்கு ஜவாது புலவர் பல பதிகங்களை பாடியுள்ளளார்.
கடந்த 2004-ம் ஆண்டு கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தின்போது, ஜவாது புலவரை கவுரவிக்கும் விதமாக, அவர் பாடிய குமரையா பதிகம் கோயில் மதிலில் கல்வெட்டாகப் பதிக்கப்பட்டு, கோயிலின் விமானத்தின் தெற்குப் பகுதியில் ஜவாது புலவரின் உருவத்தை சுதை வடிவிலும் அமைக்கப்பட்டுள்ளது.
முருகன் கோயிலில் இசுலாமிய புலவருக்கு சிலை அமைக்கப்பட்டிருப்பதால், இந்த கோயில் சமய நல்லிணக் கத்துக்கு எடுத்துக்காட்டாகவும் திகழ்வது குறிப்பிடத்தக்கது.
