

பர்மாவிலிருந்து கடல் பயணத்தின்போது வழித்துணையாக கொண்டு வரப்பட்ட விநாயகருக்கு ராமநாதபுரம் அருகே 100 ஆண்டுகளுக்கு முன்னரே கோயில் கட்டி வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.
தமிழர்கள் கடல் கடந்து சென்று வியாபாரம் செய்யும் காலத்தில் தங்களின் வழித்துணையாக விநாயகர் உருவத்தை எடுத்துச் செல்வது வழக்கம். அவ்வாறு எடுத்துச்சென்ற விநாயகர் சிலைகளைக் கொண்டே அவர்கள் சென்ற நாடுகளில் கோயில் கட்டியுள்ளனர். இதனால் விநாயகர் வழிபாடு பரவலாக உலகம் முழுவதும் பல நாடுகளில் காணப்படுகிறது.
பர்மா தொடர்பு: சங்க காலம் முதல் தமிழர்கள் மியான்மருடன் (பர்மா) வணிகத்தொடர்பு கொண்டிருந்தனர். மியான்மரில் விநாயகரை மகாபைனி என்கிறார்கள். கி.பி.1800-களில் தான் அதிகளவில் தமிழ்நாட்டில் இருந்து கூலி வேலைக்காகவும் வணிகத்துக்காகவும் பர்மாவுக்கு தமிழர்கள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். பின்னர் பர்மாவில் கி.பி. 1860-ம் ஆண்டு முதல் கோயிலான சித்தி விநாயகர் கோயில் கட்டப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் முதுகுளத்தூர், கமுதியை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள் 200 ஆண்டுகளுக்கு முன்பு மியான்மர் நாட்டில் வணிகம் செய்யச் சென்றுள்ளனர். முதுகுளத்தூர் அருகே மேலகன்னிசேரி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் 70 ஆண்டுகளுக்கு முன்பு வரை பர்மா சென்று வணிகம் செய்துவிட்டு குறிப்பிட்ட காலத்துக்குப் பின் சொந்த ஊருக்கு திரும்பி வருவது வழக்கமாக இருந்துள்ளது. தற்போதும் இவ்வூரைச் சேர்ந்த 7 குடும்பத்தினர் மியான்மரில் வசிக்கிறார்கள்.
மேலகன்னிச்சேரியில் இருந்து வணிகம் செய்ய பர்மாவுக்குச் சென்ற பெருமாள் என்பவரின் குடும்பத்தினர் நூறு ஆண்டுகளுக்கு முன்பு பர்மாவில் இருந்து திரும்பி வந்தபோது கடல் பயணத்தில் வழித் துணையாக வெள்ளை பளிங்கால் வார்க்கப்பட்ட விநாயகர் சிலையை கப்பலில் கொண்டு வந்துள்ளனர். இவ்வூரில் கோயில் கட்டி இச்சிலையை பிரதிஷ்டை செய்துள்ளனர். நூறு ஆண்டுகள் பழமையான இக்கோயிலில் இன்றும் வழிபாடு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சிலை அமைப்பு: மூன்று அடி உயரத்தில் ஐந்து கரங்களுடன் இடது காலை மடக்கி அமர்ந்த நிலையில் உள்ளார் விநாயகர். அவரின் இடது பின் கையில் பாசக்கயிறும் வலது பின் கையில் அங்குசமும் உள்ளன. வலது முன்கையில் ஒடிந்த தந்தமும், இடது முன் கை, துதிக்கையை பிடித்தவாறும் உள்ளது. பிற்காலச் சோழர்களின் சிற்பக்கலை அமைப்பில் இச்சிலை அமைந்துள்ளது.