

பெருமாளுக்கு உகந்த நாளாக சனிக்கிழமை கருதப்படுகிறது. ஆனால், வெள்ளிக்கிழமையில் வரும் சுக்கிர ஓரையில் ரங்கநாதருக்கு சிறப்பு பூஜை, எழுத்தாணிக்காரத் தெருவில் எழுந்தருளியுள்ள வீரராகவப் பெருமாள் கோயிலில் நடைபெறுவது தனிச்சிறப்பாகும்.
சித்திரை மாதம் பவுர்ணமியன்று மண்டூக முனிவருக்கு மோட்சம் அளிக்க அழகர்மலையிலிருந்து புறப்பட்டு, மதுரை வைகை ஆற்றில் தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளும் கள்ளழகரை, வெள்ளிக்குதிரை வாகனத்தில் எதிர்கொண்டு வரவேற்பது எழுத்தாணிக்காரத் தெருவிலுள்ள வீரராகவப் பெருமாள்தான். சிறப்புக்குரிய வீரராகவப் பெருமாள் கோயிலில் மூலவராக வீரராகவப் பெருமாளும், கனகவல்லி தாயாரும் அருள்பாலிக்கின்றனர்.
இத்தலத்தில் நின்ற கோலத்தில் வீரராகவப் பெருமாள், அமர்ந்த கோலத்தில் யோகநரசிம்மர், கிடந்த கோலத்தில் ரங்கநாதர் ஆகிய 3 நிலைகளில் பெருமாள் அருள்பாலிக்கின்றார். தாயார் கனகவல்லி, ஆண்டாள், ஸ்ரீ தேவி, பூதேவியுடன் பள்ளிகொண்ட ரங்கநாதர், சக்கரத்தாழ்வார், ஆஞ்சநேயர், மணவாள மாமுனிகள், நவக்கிரகங்களுக்கு தனித்தனி சந்நிதிகள் உள்ளன.
இக்கோயிலில் வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில் இரவு 8 மணியளவில் ரங்கநாதருக்கு சிறப்பு பூஜை நடைபெறுவது சிறப்புக்குரியதாகும். இப்பூஜையில் கலந்துகொண்டால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை. மேலும், பவுர்ணமியன்று வீரராகவப் பெருமாளுக்கும், அமாவாசையன்று பள்ளிகொண்ட ரங்கநாதருக்கும் திருமஞ்சனம் நடைபெறுவது வழக்கம்.