சுயம்பு வீரப்ப அய்யனார் சுவாமி
 சுயம்பு வீரப்ப அய்யனார் சுவாமி

வளர்ந்து கொண்டே வரும் சுயம்பு அய்யனார்!

Published on

தேனி அல்லிநகரத்தில் இருந்து 3 கி.மீ.தொலைவில் அமைந்துள்ளது வீரப்ப அய்யனார் கோயில். மேற்கு தொடர்ச்சி மலையடி வாரத்தில் அமைந்துள்ள இத்திருத்தலத்தில் அய்யனார் சுயம்புவாக எழுந்தருளி உள்ளார்.

பொதுவாக, சுயம்புவாக எழுந்தருளியிருக்கும் சுவாமிகளுக்கு ஆகாயத் தீர்த்தமே சிறந்தது என்பதால், இங்குள்ள மூலஸ்தானத்தில் கான்கிரீட் மேல்தளம் அமைக்கவில்லை. ஆகாயமே அய்ய னாருக்கு மழைநீரால் அபிஷேகம் செய்துகொண்டு இருக்கிறது. சிவனின் அம்சமாகவே இவர் உள்ளார். அசைவ படையல்கள் இங்கு ஏற்றுக் கொள்ளப் படுவதில்லை. இருப்பினும், முன்புறம் உள்ள கருப்பசுவாமிக்கு ஆடு,கோழிகள் படையலிடப்பட்டு அன்னதானம் வழங்கப்படுகிறது. இங்கு பவுர்ணமி, பிரதோஷம், தைப்பூசம், திருக்கார்த்திகை, மாசிமகம், பங்குனி உத்திரம் காலங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். சித்திரை முதல் நாளன்று திருவிழா கொண்டாடப்படுகிறது.

ஸ்தல வரலாறு: பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, இப்பகுதி அடர்வனமாக இருந்தது. மேய்ச்சலுக்கு வரும் மாடுகள் வீடுகளுக்கு வந்து பால் தராததால் உரிமையாளர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, மாடுகளை ஒருநாள் பின்தொடர்ந்து வந்துள்ளனர். அப்போது, கோயில் உள்ள இப்பகுதியில் மாடுகளின் மடியில் இருந்து தானாக பால் சுரந்துள்ளது. இதனால் குழப்பம் அடைந்த உரிமையாளர்கள், கோடாரியால் அப்பகுதியை வெட்டினர்.

அப்போது, ரத்தம் பீறிட்டு கிளம்பியது. அதிர்ச்சி அடைந்த அவர்கள், இது இறைவன் செயல் என்பதை புரிந்துகொண்டனர். உடனடியாக அப்பகுதியில் திருத்தலம் எழுப்பப்பட்டது. பல ஆண்டுகளுக்கு முன்பு செய்த கிரீடம், ஒட்டியாணம் போன்றவற்றை தற்போது அணிவிக்க முடியாத அளவுக்கு சுயம்பு உருவம் வளர்ந்து வருவதாக பூசாரிகள் கூறுகின்றனர். சித்திரை திருவிழாவின் முதல்நாள் அய்யனார் மலர் அலங்காரத்துடன் குதிரை வாகனத்தில் தேனி அல்லிநகரம் நகர்ப் பகுதிகளில் வலம் வருவது வழக்கம்.

சர்க்கரை பொங்கல் உகந்த நைவேத்தியமாகும். தங்கள் குடும்பங்களில் குழந்தைகளுக்கு முதல் முடிகாணிக்கையை அய்யனாருக்கு வழங்கி, பொங்கல் வைத்து வழிபாடு செய்கின்றனர். குடும்பத்தில் எந்த நல்ல விஷயம் என்றாலும், அய்யனாரின் உத்தரவும், அனுமதியும் பெற்று செய்யும் பழக்கம் இப்பகுதியில் அதிகம் உள்ளது. அந்த அளவுக்கு குடும்பத்தில் ஒருவராகவே இவரை பாவித்து வருகின்றனர்.

உருக வேண்டுவோரின் வேண்டுகோள் உண்மையாகும் என்பது பக்தர்களின் அனுபவம். திருமண தடை, கடன் தீர்வு, குழந்தைப்பேறு, தொழில் விருத்தி, குடும்பப் பிரச்சினைகள் போன்றவற்றை அய்யனார் தீர்த்து வைப்பதாக இப்பகுதி மக்கள் நம்புகின்றனர்.

மலையடிவாரம் என்பதால் பொதுப் போக்குவரத்து வசதி இல்லை. ஆட்டோ உள்ளிட்ட வாடகை அல்லது சொந்த வாகனத்திலேயே இத்தலத்துக்கு செல்ல முடியும். மலைசார்ந்த சூழ்நிலை, அமைதி போன்றவை இத்தலத்தின் கூடுதல் சிறப்பு. தினமும் காலை 6 முதல் மாலை 5 மணி வரை அய்யனாரை தரிசனம் செய்யலாம்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in