

உறங்கிக்கொண்டிருக்கும் இறைவனை எழுப்புதல் தான் திருப்பள்ளியெழுச்சி என்பதன் நேரடிப் பொருள். ஆனால், இறைவனை எவ்வாறு எழுப்ப இயலும்? அவன் எப்போதும் அறிதுயில் எனப்படும் யோக நித்திரையில் இருப்பவன் அல்லவா?
எனில், திருப்பள்ளியெழுச்சி என்பதற்கு நமக்குள் உறங்கிக்கொண்டிருக்கும் இறையுணர்வைத் தட்டி எழுப்புதல் என்பதுதான் உண்மையான பொருள். நமக்குள் ஆணவம் என்னும் திரை விலகும்போது தான் இது சாத்தியமாகிறது. உள்ளே மறைந்திருக்கும் இறைவன் முதன்முதலாக வெளியே வருதல் மனித மனத்துக்கு ஒரு மாபெரும் கொண்டாட்டம். இறைவன் வெளிப்பட்ட அந்தப் பொற்கணத்தைத் தொண்டரடிப்பொடியாழ்வார் பாடிப் பாடி மகிழ்கிறார்.
கதிரவன் குணதிசைச் சிகரம்வந் தணைந்தான்
கனவிரு ளகன்றது காலையம்பொழுதாய்
மதுவிரிந் தொழுகின மாமல ரெல்லாம்
வானவ ரரசர்கள் வந்துவந் தீண்டி
எதிர்திசை நிறைந்தன ரிவரொடும் புகுந்த
இருங்களிற் றீட்டமும் பிடியொடு முரசும்
அதிர்தலி லலைகடல் போன்றுள தெங்கும்
அரங்கத்தம் மாபள்ளி யெழுந்தரு ளாயே
ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளியிருக்கும் ரங்கநாதப் பெருமானே!! கிழக்குத்திசையில் கதிரவனின் ஒளிக்கிரணங்கள் மலைச்சிகரத்தை தொட்டணைக்கும் அழகிய காலைப்பொழுது உதயமாகிவிட்டது. அதனால் அடர்ந்த இருள் விலகிவிட்டது. தேன் நிரம்பி வழியும் படி சோலை மலர்கள் அனைத்தும் பூத்துவிட்டன.
உன்னை தரிசிப்பதற்காக தேவர்களும் அரசர்களும் படை பரிவாரங்களோடு உன் கால்மாட்டில் காத்திருக்கிறார்கள். அவர்களின் வாகனங்களாகிய ஆண் யானைகளும் இணைகளாகிய பெண் யானைகளும் உடனிருக்கின்றன. இவர்களின் வருகையால் ஸ்ரீரங்கமே அலையோசை முழங்கும் பெருங்கடலெனக் காட்சியளிக்கிறது. நீ இன்னும் கண் விழிக்காமல் எம்மையெல்லாம் காக்க வைப்பது என்ன நியாயம்? (விரைவில் கண் விழித்து எங்களையெல்லாம் காத்தருள்வாயாக).
- இது இந்தப் பாசுரத்துக்கான நேரடிப் பொருள்.
ஆனால், இப்பாசுரத்துக்கு ஆன்மிக அகராதி தரும் பொருள் வேறு.
பலதரப்பட்ட அழுத்தங்களால் மனம் இறுகி ஒரு மலையாகிவிடுகிறது. சூரியனின் கதிர்கள் பூமியை மென்மையாக தொடுவது போல, இறை சிந்தனை அந்த மனத்தைத் தொடுகிறது. இறை சிந்தனை என்னும் ஒளி வந்ததும், உள்ளே இருள் போல் அடர்ந்திருந்த அறியாமை நீங்கத் தொடங்குகிறது. மலையாய் இருந்த மனம் மலராய் இளகுகிறது. அந்த மலரில் இருந்து பேரின்பம் என்னும் தேன் நிரம்பி வழிகிறது. அது ஒருபோதும் நிற்பதில்லை. ஒருபோதும் திகட்டுவதில்லை.
என்னதான் பக்தி இருந்தாலும் ஆணவம் நமக்குள் முற்றாக அழிந்துவிடுமா? காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாத்சரியம் ஆகிய ஆறு உட்பகைவர்கள் உண்டாக்கும் புலனின்ப விழைவு ஒழிந்துவிடுமா?
தாமே எல்லாவற்றுக்கும் தலைவன் என்ற தருக்கோடு வாழ்பவர்கள் அரசர்கள். எப்போதும் போகத்தில் மூழ்கித் திளைப்பவர்கள் வானவர்கள்.
இவர்களையும் அந்த ‘ஆறு’ உட்பகைவர்கள் சும்மா விடுவதில்லை. கடல் போல் கட்டுப்படுத்த முடியாத படி இருக்கும் அந்தப் பகைவர்கள் ஒரு முரசு போல் அதிர்ந்து உள்ளே தொல்லை செய்து கொண்டே இருக்கிறார்கள். அதனால் வானவர்களும் அரசர்களும் வேக வேகமாக பெருமாளின் முன் பணிந்து பகைவர்களைக் கொல்ல வேண்டும் என இறைஞ்சி நிற்கிறார்கள். எதற்கும் அடங்காத அறுவர், சூரிய நாராயணனின் அருளொளிக்கு
அஞ்சி அடங்கிவிடுகின்றனர்.
நமது மரபில் யானை போகத்தின் குறியீடாகும்.
திருவள்ளுவர் கூட,
உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து
என்று இன்ப நுகர்வில் வெறி கொள்ளும் ஐந்து புலன்களையும் யானையாக உருவகப்படுத்துகிறார்.
பேராற்றல் மிகுந்த இந்த ஐந்து யானைகளையும் அடக்கும் அங்குசம் பரமாத்மாவாகிய பரந்தாமன் தான் என்பதை வலியுறுத்தவே, ‘இருங்களிற் றீட்டமும் பிடியொடு’ என்று தொண்டரடிப்பொடியாழ்வார் பாடுகிறார்.
ஆழ்வார் அறிவுரைப்படி எம்பிரானை இடையறாது நினைத்துக்கொண்டிருந்தால் போதும். அந்த உறுதி தான் அவன் கையில் அங்குசமாக மாறும். அந்த அங்குசத்தைக் கண்டால், ‘ஐந்தும்’ தணிந்துவிடும். ‘ஆறும்’ பணிந்துவிடும்.
முந்தைய பகுதி: செல்வசித்தர் பெரியாழ்வார் | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் - 5