

இப்பிறவியில் செய்த பாவங்களை போக்கி நன்மை அளிக்கிறார், இம்மையில் நன்மை தருவார். மதுரையில் உள்ள பஞ்சபூத தலங்களில் மண் (பிருத்வி) தலம் இம்மையில் நன்மை தருவார் கோயிலாகும். சிவபெருமானின் 64 திருவிளையாடல்களில் ஒன்றான வளையல் விற்ற திருவிளையாடல் நிகழ்ந்ததும், அதன் திருக்கண் மண்டபமாகவும் இக்கோயில் விளங்குகிறது. எல்லா கோயில்களுக்கும் சித்தர்களே ஆதாரம். அதேபோல், இந்த கோயிலிலும் வல்லப சித்தரே ஆதாரமாக இருக்கிறார்.
பிரம்மனும், திருமாலும், சக்தியும், தேவர்களும் சிவனை பூஜித்து நலம் பெற்றிருப்பதை புராணங்கள் சொல்கின்றன. ஆனால், சிவனே, சிவமாகிய லிங்கத்தை வழிபட்ட பெருமையுடைய தலம் இது. இத்தலத்தில் சிவன் தன்னையே இங்கு லிங்கமாக பிரதிஷ்டை செய்து, அதை தானே வழிபட்டதாக புராணம் உள்ளது. இவரை வணங்கினால் இப்பிறப்பில் நாம் செய்த பாவமெல்லாம் நீக்கி, முக்தி எனும் சுகத்தை இந்த பிறவியிலேயே அளிக்கிறார். அதனால்தான் ‘இம்மையிலும் நன்மை தருவார்’ என அழைக்கப்படுகிறார். இங்கு மூலவராக உள்ள லிங்கத்தின் பின்னால் சிவனே அம்மனுடன் சிவபூஜை செய்வதுபோல் உருவ அமைப்பு உள்ளது தனிச்சிறப்பு. இங்கு, நடுவூர் நாயகி என்ற பெயரில் மத்தியபுரி அம்மனும் அருள்பாலிக்கிறார்.
மதுரையை ஆண்ட மீனாட்சி திக்குவிஜயம் செய்து மூன்று உலகங்களையும் வென்றார். முடிவில், கயிலாயத்துக்குச் செல்கிறார். அங்கு உலகின் நாயகனான சிவனை சந்தித்த உடனேயே சக்தியின் கோபம் தணிகிறது. ஏற்கெனவே நிச்சயித்தபடி, சுந்தரேசுவரருக்கும், மீனாட்சிக்கும் திருமணம் நடக்கிறது. இதனால், மதுரை சுந்தரேசுவரர் எட்டு மாதம், மீனாட்சி நான்கு மாதம் ஆட்சி செய்ய வேண்டும் என தீர்மானிக்கப்படுகிறது. நாடாளும் மன்னன் முதல் ஈசன் வரை ஆட்சி பொறுப்பேற்கும் முன் சிவபூஜை செய்ய வேண்டும் என்பது மரபு. அந்த மரபைத் தானே கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காகவே, சுந்தரேசுவரர் தனது ஆத்மாவையே லிங்கமாகப் பிரதிஷ்டை செய்து, அதற்குத் தானே பூஜை செய்து பின்பு ஆட்சி பொறுப்பேற்றுக்கொண்டார்.
இவ்வாறு சுந்தரேசுவரரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதும், சுந்தரபாண்டிய மன்னனான அவருக்கே வரம் அருளிய லிங்கமே இம்மையிலும் நன்மை தருவார் என அழைக்கப்படுகிறது. சிறப்புக்குரிய இத்தலத்து இறைவனை வணங்கினால், இம்மை (இப்பிறவி), மறுமை (வரும் பிறவி), பிணி (பிறவி எனும் நோய்) இவற்றையெல்லாம் நீக்கி முக்தி கிடைக்கும். மேற்கு நோக்கிய சிவாலயம் என்பதால், பக்தர்களின் பிரார்த்தனை உடனுக்குடன் நிறைவேறுகிறது. பதஞ்சலி முனிவர் இங்கு வந்து வழிபட்டதாகவும் தகவல் உண்டு.
சுவாமிக்கு வஸ்திரம் வழங்கினால் பெரும் புண்ணியமும், நெய் தீபம் ஏற்றினால் பசுதானம் செய்த பலனும், இளநீர் அபிஷேகம் செய்தால் அசுவமேத யாகம் செய்த பலனும் கிடைக்கும். அன்னாபிஷேகம் செய்தால் கயிலாய வாழ்வு கிட்டும், பஞ்சாமிர்த அபிஷேகம் செய்தால் ஆலய கும்பாபிஷேகம் செய்த பலன் கிட்டும், அம்பாளையும், இறைவனையும் வலம் வந்து வணங்கினால் வீடுபேறு கிடைக்கும். இத்தலத்து அம்பாளை வழிபட்டால், திருமண வரம், குழந்தை வரம் கிட்டும். கல்வி வரம், எடுத்த காரியம் நடைபெற இத்தலத்தில் வழிபடலாம்.
நேர்த்திக்கடன்: சுவாமிக்கு இத்தலத்தில் பால் அபிஷேகம் செய்தல் சிறப்பு. தேன், எண்ணெய், இளநீர், சந்தனம், பன்னீர், நல்லெண்ணெய் ஆகியவற்றால் சுவாமிக்கு அபிஷேகம் செய்து நேர்த்திக்கடனை செய்கின்றனர். அம்பாளுக்கு புடவை சாத்துகின்றனர்.
மதுரையின் மையப் பகுதியில், அதாவது பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் உள்ள இத்தகைய சிறப்புமிக்க தலம், சிவகங்கை தேவஸ்தானம் சமஸ்தான நிர்வாகத்தின் கீழ் உள்ளது.