

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் இருந்து சங்கரன்கோவில் செல்லும் சாலையில் சுமார் 22 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது கழுகு மலை கழுகாசல மூர்த்தி கோயில். இந்த தலத்துக்கு புராணப் பெருமைகளும், சரித்திரச் சிறப்புகளும் ஏராளம். இந்த ஊரை தென்பழநி, உவணகிரி, கஜமுக பர்வதம், கழுகாசலம், சம்பாதி சேத்திரம் என்றும் அழைக்கின்றனர்.
தல புராணம்: திரேதா யுகத்தில் சீதாதேவியை கடத்திச் சென்ற ராவணனிடம் இருந்து அவளைக் காப்பாற்ற முயற்சித்து, மரணத்தைத் தழுவினார் ஜடாயு. அவருக்கு ஸ்ரீராமனே ஈமக்கிரியைகள் செய்து மோட்ச கதி அளித்தார். இந்தத் தகவல்களை எல்லாம் அறிந்த ஜடாயுவின் சகோதரன் சம்பாதி, 'என் உயிருக்குயிரான சகோதரருக்கு ஈமக்கிரியைகள் செய்ய இயலாத சண்டாளனாகிவிட்டேனே’ என்று வருந்தினார்.
தனது சண்டாளத்தன்மை நீங்க வழிதெரியாமல் கலங்கினார். பிறகு, ஸ்ரீ ராமனை தரிசித்து, அவரிடமே பாவம் நீங்குவதற்கான பிராயச்சித்தத்தை கூறும்படி வேண்டினார். சம்பாதிக்கு ஆறுதல் அளித்த ஸ்ரீராமன், 'நீ கஜமுக பர்வதத்தில் (யானை முகம் கொண்ட மலையில்) மயில் மீது அமர்ந்திருக்கும் அழகனான முருகப்பெருமானைத் தரிசித்து, அந்தத் தலத்தில் உள்ள ஆம்பல் நதிக்கரையில் நீராடி, அவரை பூஜித்து வா, ஆறுமுகனின் திருவருளால் உனது பாவம் நீங்கும், நீ மோட்சகதி அடைவாய்’ என அருள்புரிந்தார்.
ஸ்ரீ ராமனின் அறிவுரைப்படியே கஜமுக பர்வதத்தை அடைந்து, ஆம்பல் நதியில் நீராடி, முருகக் கடவுளை மனதார துதித்து வழிபட்டார். அதன்பலனாக ஆறுமுகனின் அனுக்கிரகமும், மோட்ச கதியும் சம்பாதிக்கு கிடைத்தது.
கழுகுமலையில் மலையடிவாரத்தில் அழகுற கோயில் கொண்டிருக்கும் முருகப்பெருமானுக்கு ஸ்ரீ கழுகாசல மூர்த்தி என்று பெயர். அருணகிரிநாதரால் பாடல்பெற்ற ஒப்பற்ற ஸ்தலம் இது. கோயிலின் கருவறையும், அர்த்த மண்டபமும் குடவரையாய் திகழ்கின்றன. வெளியே ருத்ராட்ச மண்டபமும், நவகோள் மண்டபமும் உள்ளன.
கருவறையில் இடப்புறம் நோக்கி நிற்கும் மயூர வாகனத்தின் (மயிலின்) மீது அமர்ந்து, இடது காலை மயூரத்தின் மீது பதித்து, வலது காலை தொங்கவிட்டபடி, ஒரு முகமும் ஆறு திருக்கரங்களுமாக, வெற்றிவேலுடன் அற்புதத் திருக்கோலம் காட்டுகிறார் முருகப்பெருமான். முருகனின் அருகிலேயே வள்ளி-தெய்வானை தேவியர் முறையே தெற்கு- வடக்கு நோக்கி ஒருவரையொருவர் பார்த்தபடி அருள்புரிகிறார்கள்.
உத்ஸவர் ஸ்ரீ ஆறுமுக நயினார் மிக்க அழகு, ஸ்ரீ ஜம்புலிங்கேஸ்வரர், ஸ்ரீ அகிலாண்டேஸ்வரியையும் இங்கே தரிசிக்கலாம். முருகனுக்கு ஒன்றும், சிவசக்தியருக்கு ஒன்றுமாக இரண்டு பள்ளியறைகள் இந்தக் கோயிலில் உள்ளன. சுமார் 7 அடி உயரத்தில் வடுக மூர்த்தியாகக் காட்சி தரும்ஸ்ரீ பைரவரும், ஸ்ரீ நடராஜ மூர்த்தியின் திருவடியில் இடப்புறம் தலைவைத்துப் படுத்திருக்கும் முயலகனும் கோயிலின் சிறப்பம்சங்கள்.
ஸ்ரீ கழுகாசல மூர்த்தி ஆயுதபாணியாய் அருள்வதால், கந்தசஷ்டியின்போது விரதம் இருந்து இவரை வழிபடுவது விசேஷம் என்கிறார்கள். சஷ்டி விழாவின் ஆறு நாட்களும் கோயிலின் ஓதுவார் கழுகாசல மூர்த்தியின் தூதராக சூரபதுமனிடம் தூது செல்வது, வேறெங்கும் காண்பதற்கரிய வைபவம். கழுகுமலை செவ்வாய் பரிகாரத் தலமாகவும் திகழ்கிறது. செவ்வாய் தோஷ ஜாதகக்காரர்கள் ஐந்து பவுர்ணமி தினங்கள் இந்தத் தலத்தில் கிரிவலம் வந்து, முருகனுக்கு நெய் தீபமேற்றி வழிபட, விரைவில் வரன் அமையும், வீட்டில் கெட்டி மேளம் கொட்டும் என்கிறார்கள்.
முருகனுக்கு தேய்பிறை நாட்களில் ஈச்சம்பழமும் (பேரீச்சை), தேனும் நைவேத்தியம் செய்து வழிபட, பில்லி, சூன்யம் போன்ற தீவினைகளும், தொழில் முடக்கம், கடன் போன்ற பிரச்சினைகளும் நிவர்த்தியாகும் என விவரிக்கிறார்கள் பக்தர்கள்.
ருத்ராட்ச பந்தல்: கழுகுமலை முருகன் கோயில் முகப்பு மண்டபத்தில் உள்ளது ருத்ராட்ச பந்தல். கழுகுமலை முருகன் கோயிலில் பிரசித்தி பெற்றது என்னவென்றால், இந்த ருத்ராட்ச பந்தல்தான். இந்த ருத்ராட்ச பந்தலுக்கு நேராக கீழே அமர்ந்து முருகனை நினைத்து வேண்டிக்கொள்வதால் ஆரோக்கியம் உண்டாகும்.
கழுகுமலை கோயில் சென்று ருத்ராட்ச பந்தல் கீழே அமர்ந்து 10 நிமிடம் முருகனை நினைத்து வேண்டிக்கொள்ள உடலில் ஒரு அதிர்வுகளை உணர முடியும். கிட்டத்தட்ட சங்கரன்கோவில் கோமதி அம்மன் சக்கர தியானத்தில் கிட்டும் அதிர்வு போன்ற உணர முடியும் எனக் கூறுகின்றனர் பக்தர்கள்.