

திண்டுக்கல் நகரில் மலைக்கோட்டை அடிவாரத்தில் அமைந்துள்ளது 100 ஆண்டுகளுக்கும் மேல் பழமைவாய்ந்த சீனிவாசப் பெருமாள் கோயில். இந்த கோயிலில் பெருமாள் சீனிவாசனாக பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
கோயிலில் நுழைந்தவுடன் சீனிவாசப்பெருமாள் சுவாமி உள்ள கருவறையை நோக்கி வணங்கியபடி உயரமான கருடாழ்வார் சிலை உள்ளது. இதையடுத்து, விநாயகர் சந்நிதி, கிருஷ்ணர் சந்நிதி, அலமேற்மங்கை சந்நிதி, சக்கரத்தாழ்வார் சந்நிதி, ராமானுஜர் சந்நிதி ஆகியவை அடுத்தடுத்து அமைந்துள்ளன. தொடர்ந்து, கருடாழ்வார் சந்நிதி, ஆழ்வார்கள் சந்நிதி என கோயில் பிரகாரத்தில் மொத்தம் 11 சந்நிதிகள் அமைந்துள்ளன. அனைத்து சந்நிதிகளுக்கும் நடுவே சீனிவாசப் பெருமாள் சந்நிதி உள்ளது. இங்கு தேவி - பூதேவி சமேத சீனிவாசப் பெருமாளாகக் காட்சியளிக்கிறார்.
கோயில் நடை திறப்பு: காலை 7 முதல் நண்பகல் 12 மணி வரையும், மாலையில் 5 முதல் இரவு 8 மணி வரையும் கோயில் நடை திறந்திருக்கும். மார்கழி மாதம் உள்ளிட்ட விசேஷ நாட்களில் முன்னதாகவே கோயில் நடை திறக்கப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி விழாவின்போது, சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்டத்தினர் மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் பங்கேற்று பெருமாளை வழிபடுகின்றனர்.