

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே தேவதானப்பட்டியில் இருந்து 7கி.மீ. தொலைவில் மூங்கிலணை காமாட்சி அம்மன் திருத்தலம் அமைந்துள்ளது.
மகா சிவராத்திரி முதல் 8 நாட்களுக்கு இங்கு திருவிழா களைகட்டும். மேலும், ஆடி மாதம் முதல் 3 நாட்கள் ஆடிப்பள்ளயத் திருவிழாவும் இத்தலத்தின் சிறப்பு. தொடர்ந்து, சித்திரை வருடப்பிறப்பு, விஜயதசமி, தைப்பொங்கல், கார்த்திகை திருநாள் உள்ளிட்ட நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். மதிய நேரத்தில் இக்கோயிலில் நடை சாத்தப்படுவதில்லை. இதனால், காலை 6 முதல் இரவு 8 மணி வரை தொடர்ந்து தரிசனம் செய்யலாம். குலதெய்வம் குறித்த விவரம் தெரியாதவர்கள் பலரும் இந்த அம்மனையே குலதெய்வமாக ஏற்று வழிபட்டு வருகின்றனர்.
தல வரலாறு: அசுரனை அழித்த அன்னை தனது ஆக்ரோஷத்தையும், தகிப்பையும் தணிக்கும் விதமாக வனத்தில் தவம் மேற்கொண்டார். அப்போது, மாடு மேய்க்கும் சிறுவன் அன்னையை எதிர்பாராதவிதமாக பார்க்க நேரிட்டது. ஒளிப்பிழம்பாய் ஜொலித்த அன்னையின் ஜோதி அவனது கண் பார்வையை பறித்தது. இதை அறிந்த அப்பகுதி மலையடிவார மக்கள் அச்சமடைந்தனர். அப்போது, அசிரிரீ ஒலித்தது. அதில், அசுரனை அழித்த ஆக்ரோஷம் நீங்க தவமிருக்கிறேன்.
எனவே, என்னை நேரிடையாக வழிபட வேண்டாம். சில நாட்களில் மஞ்சளாற்று வெள்ளத்தில் பெட்டி ஒன்று மிதந்து வரும். அதை கைகளால் தொடாமல் மூங்கில் புதர்கொண்டு அணையிட்டு, புற்களால் ஏந்திச்சென்று வழிபடுங்கள். சிறுவனின் கண்பார்வையும் திரும்பும் என்று குரல் ஒலித்தது.
அதன்படி, குச்சிவீடு அமைத்து பெட்டியை கர்ப்பக்கிரகத்தில் வைத்து பூட்டினர். அம்மன் தவ விரத தகிப்பு நிலையில் உள்ளதால், மூலவரின் நேரடி வழிபாடு இங்கு கிடையாது. கதவின் முன்பாக நாகபீடம் அமைத்து, சூலாயுதத்தையே அம்மனாக பாவித்து மாலையிட்டு பூஜை செய்யப்படுகிறது. இதனால், இக்கோயில் ‘கதவு கோயில்’ என்றும் அழைக்கப்படுகிறது.
ஆண்டுக்கு ஒருமுறை கர்ப்பக்கிரக கூரையை புதுப்பிக்கும்போதுகூட, தொழிலாளர்கள் கண்ணைக் கட்டிக்கொண்டே வேய்கின்றனர். நெய்யால் நைவேத்தியம் மட்டுமே இங்கு படைக்கப்படுகிறது. அசுரனை அழித்து நீதி காத்த இத்தலம் நல்லோருக்கு நம்பிக்கை தரும் ஆலயமாக விளங்கி வருகிறது. இதனால் ஏராளமான பக்தர்கள் அம்மனுக்கு வேண்டிக்கொண்டு அருள்பெற்று வருகின்றனர்.