

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் கோட்டூரில் அமைந்துள்ள குருசாமி சித்தர் ஜீவசமாதி கோயிலும் ஒன்று. அருப்புக்கோட்டை- பாலவநத்தம் இடையே உள்ள கோட்டூரில் அமைந்துள்ள குருசாமி சித்தர் கோயிலுக்கு, விருதுநகர் மாவட்டம் மட்டுமின்றி, வெளி மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர்.
இங்கு செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாகக் காணப்படும். இக்கோயிலில் ஏராளமானோர் பொங்கல் வைத்தும், முடி காணிக்கை செலுத்தியும், மாவிளக்கு வைத்தும் நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். சித்தர்கள் ஜீவசமாதி அடைந்த இடத்தை வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது.
கோட்டூர் குருசாமி சித்தர் சதுரகிரி மலைக்குச் சென்று அங்குள்ள சித்தர்களுக்கு தொண்டு செய்து வந்துள்ளார். 40 ஆண்டுகள் கழித்து மலையை விட்டு இறங்கி வந்து சொந்த ஊரான கோட்டூரில் தங்கினார். குடிசை வீட்டில் தினந்தோறும் தவம் செய்து வந்தார். இவரிடம் குழந்தையின்மை, தீராத நோய்கள் உள்ளவர்கள் அருள்வாக்கு கேட்டு பயனடைந்து வந்துள்ளனர். அவர்களுக்கு மஞ்சள் கிழங்கு, ஆமணக்கு எண்ணெய் கொடுத்து அனுப்புவது இவர் வழக்கமாக இருந்துள்ளது.
பின்னர், கோட்டூர் குருசாமி சித்தர் ஜீவசமாதி அடைந்தார். ஒளி வடிவில் அருள்பாலிக்கும் குருசாமி சித்தருக்கு அவ்விடத்தில் கோயில் எழுப்பப்பட்டது. இந்த தீபம் அணையாமல் நாகப்பா குருசாமி குடும்பத்தினர் கடந்த 7 தலைமுறைகளாக பராமரித்து வருகின்றனர். இக்கோயிலின் ஸ்தல விருட்சம் பூவரச மரம். விருதுநகரிலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது.