சைவ - வைணவத்தின் ஒற்றுமையை நிலைநிறுத்தும் மீனாட்சி திருக்கல்யாண சிற்பங்கள்!

சைவ - வைணவத்தின் ஒற்றுமையை நிலைநிறுத்தும் மீனாட்சி திருக்கல்யாண சிற்பங்கள்!
Updated on
2 min read

மதுரையை ஆண்ட மன்னர் திருமலை நாயக்கர் தன்னுயிரை காப்பாற்றியவர் மீனாட்சி அம்மன்தான் என்பதால், புது மண்டபத்தை கலை நுணுக்கங்களுடன் உருவாக்கினார். அத்தகைய புதுமண்டபத்தில் மீனாட்சி திருக்கல்யாணத்தையும் சிற்பங்களாக உருவாக்கி வசந்த மண்டபமாக்கினார். இத் தகைய புதுமண்டபத்தில் பிரமிப்பை ஏற்படுத்தும் சிலைகள் உள்ளன.

கிழக்கு மற்றும் மேற்குத் திசைகளில் 6 நுழைவாயில்கள் கொண்ட வசந்த மண்டபம், கிழக்கு மேற்காக 322 அடி நீளமும், தெற்கு வடக்காக 90 அடி அகலமும் கொண்டு ஒரு செவ்வக வடிவத்துக்குள் மற்றொரு செவ்வக வடிவை உள்ளடக்கியதுபோல 25 அடி உயரமுள்ள அழகிய சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட 124 தூண்கள் மற்றும் 85 சிறுதூண்களுடனும் பிரம்மாண்டமாக அழகுடன் காட்சி தருகிறது.

இம்மண்டபத்தில் 22 தெய்வ உருவச்சிலைகள், 2 முனிவர்கள் சிலைகள், 4 சேடிப்பெண்கள் சிலைகள், 10 யாளிச் சிலைகள், 6 குதிரை வீரர்கள் சிலைகள், உட்கூரையில் 5 சக்கரங்கள், 10 அரசாண்ட நாயக்க வம்சத்தினர் சிலைகள் நேர்த்தியாய் செதுக்கப்பட்டுள்ளன. இவை தவிர, ஒவ்வொரு தூணிலும் ஏறக்குறைய 14 புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. இம்மண்டபத்தை நாயக்கர் சத்திரம் என்றும் அழைத்தனர்.

தென்மேற்கு மூலையில் அமைக்கப்பட்டுள்ள ஏகபாத மூர்த்தி சிலையின் வலது பக்கம் உயரமான யாளிச் சிலையும், அதற்கடுத்து கிழக்குத் திசை நோக்கிய குதிரை வீரர் சிலையும் அமைக்கப்பட்டுள்ளன. கிழக்கு நுழைவாயிலின் வழியாக உள்ளே நுழைந்து இடப்பக்கம் திரும்பியவுடன் ஆறடி உயரப் பீடத்தின் மேல் சிவபெருமானின் மான்குட்டிக்கு புலிப்பால் கொடுத்த திருவிளையாடல் (பெரும்பற்றப்புலியூர் நம்பி இயற்றியது) சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.

வலதுபுறத்தில் சூரிய பகவானின் உருவமும், அடுத்ததாகத் தென்கிழக்கு மூலையில் 4 அடி உயர பீடத்தின் மேல் 10 அடி உயர யாளிச் சிலையும், அடுத்து மீனாட்சி அம்மனின் திருமணத்துக்கு முந்தைய பருவமான தடாதகையின் திருவுருவமும் உள்ளன. இங்கிருந்து மேற்கு நோக்கிச் செல்லும்போது, உட்கூரையில் செதுக்கப்பட்டுள்ள ஸ்ரீ புவனேஸ்வரி சக்கரமானது மிகவும் சிதிலமடைந்துள்ளது.

இதேபோன்று வடக்குப் பகுதி உட்கூரையிலும் செதுக்கப்பட்டுள்ளது. தடாதகைப் பிராட்டியின் திருவுருவச் சிலை உள்ளே தூணிலிருந்து 28-வது தூணில் காளிதேவியின் ஆக்ரோஷமான நடன கோலத் திருவுருவச் சிலை வடக்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ளது. அதற்கடுத்தது தென்மேற்கு மூலையில் யாளிச் சிலையும் அதனை ஒட்டியுள்ள தூணில் வடக்கு நோக்கிய சேடிப்பெண் சிலையும், அதற்கு எதிரில் மற்றொரு சேடிப்பெண் சிலை தெற்கு நோக்கியும் உள்ளன. அடுத்து, மீனாட்சி -சுந்தரேசுவரர் திருமணக்கோலம் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

சைவ - வைணவத்தின் ஒற்றுமையை நிலை நிறுத்தும் முயற்சியாய் திருமலை மன்னரின் ஆலோசனைப்படி, திருமால் தன் தங்கையை சிவபெருமானுக்கு தாரை வார்த்துக்கொடுப்பது போல செதுக்கப்பட்டுள்ளது. கிழக்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ள இத்திருக்கல்யாணச் சிற்பத்துக்கு அடுத்தபடியாக பிரம்ம தேவரின் சிலையும், அதற்கடுத்துள்ள மேற்கு வாயிலின் இடதுபக்கம் திரும்பியவுடன் 2 குதிரை வீரர்கள் சிலைகள் மேற்கு நோக்கியும் பிரம்மாண்டமாக அடுத்தடுத்து அமைக் கப்பட்டுள்ளது கண்களைக் கவரும் வகையில் உள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in