

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பவளக்கனிவாய் பெருமாள் வீற்றிருந்து அருள்பாலிப்பது, வேறு எந்த தலத்துக்கும் இல்லாத தனிச்சிறப்பாகும்.
பாண்டிய நாட்டில் பதினான்கு சைவத்தலங்களுள் திருப்பரங்குன்றம் ஒன்றாகத் திகழ்கிறது. திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மூர்த்தி பரங்கிரிநாதர், தலம் திருப்பரங்குன்றம், தீர்த்தம் சரவணப்பொய்கை ஆகிய சிறப்புகளை பெற்றது. திருப்பரங்குன்றம் என்னும் இயற்கை எழில்சூழ் ஊரில் 300 மீட்டர் உயரமுடையது மலை. மலையின் அடிவாரத்தில் ஊரின் நடுவே குன்றே கோயிலாக திருப்பரங்குன்றம் கோயில் எழுந்துள்ளது.
முருகப்பெருமானின் முதற்படைவீடு: முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதற்படை வீடான சுப்பிரமணிய சுவாமி கோயில் 274 தேவாரத்தலங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது. முருகனுக்குரிய படை வீடுகள் ஆறு. படைவீடு என்பது பகைவரோடு போர் புரிதல் பொருட்டு, ஒருவன் தன் படைகளுடன் தங்கியிருக்கும் இடத்துக்குப் பெயராகும். முருகப்பெருமான், சூரபத்மனோடு போர் புரியச் செல்லும் முன் தங்கியிருந்த படைவீடுகள் பல உள்ளன.
பொருள் பெற்ற ஒருவன், வறியவன் ஒருவனைக் கண்டு, பல பெருமைகளை உடைய இன்னாரிடம்சென்றால் போதும் பொருள் பெறலாம் என்று ‘ஆற்றுப்படுத்துவதை’ (வழிப்படுத்துவதை) ஆற்றுப்படை என்பர்.
ருளைப் பெறுவதுபோல் அருளைப் பெறவும் நம் முன்னோர் ஆற்றுப்படுத்தினர். நக்கீரர் பாடிய திருமுருகாற்றுப்படை இதற்குச் சான்றாகும். சில தலங்களை குறிப்பிட்டு, அங்கெல்லாம் எழுந் தருளியுள்ள முருகன் ஆற்றுப்படுத்துவதாகத் திரு முருகாற்றுப்படை அமைந்துள்ளது. ஆற்றுப்படை வீடுகள் என்பதுதான் பின்னாளில் மருவி அறுபடை வீடுகள் என்றாயின. அவை திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை ஆகிய ஆறுபடை வீடுகளாகும்.
திருப்பரங்குன்றம் என அழைக்கப்படும் இத்தலம் திருப்பரங்கிரி, சுமந்தவனம், பராசலதலம், குமாரபுரி விட்டணு துருவம், கந்தமாதனம், கந்தமலை, சத்தியகிரி, தென்பரங்குன்றம், தண்பரங்குன்றம், சுவாமிநாதபுரம், முதற்படைவீடு பல பெயர்களால் அழைக்கப்படுகிறது.
குடவரைக் கோயிலான இங்கு, சிவபெருமானுக்காகவே தோற்றுவிக்கப்பட்டதெனினும் பிற்காலத்தில் இது முருகப்பெருமானின் சிறப்புத்தலமாக விளங்கி வருகிறது. தென்-தெற்கு, பரன்-கைலாயம், குன்று-மலை, தெற்கு கைலாய மலை என்றும் சிறப்பித்துக் கூறலாம். இத்தலம் சிவபெருமான் கோயிலும், முருகப்பெருமான் கோயிலுமாக இரண்டினையும் பெற்ற தனிச்சிறப்பு வாய்ந்ததாகும்.
| அழகன் முருகன்... முருகு என்றால் அழகு என்று பொருள். அதனால் முருகன் என்றால் அழகன் எனப் பொருள்படுகிறது. முருகப்பெருமான் பக்தர்களால் முருகன், கந்தன், சண்முகன், சுப்பிரமணியன், கார்த்திகேயன் உள்ளிட்ட பல்வேறு பெயர்களாலும் வழிபடப்படுகிறான். அன்னை பார்வதிதேவி சக்திமிக்க வேல் ஒன்றை முருகனுக்கு அளிக்கிறார். இதனால், அன்னையிடம் வேல் பெற்ற முருகன் வேல்முருகன் என்றும் அழைக்கப்படுகிறான். இந்த வேலால் சூரபத்மனை போரில் முருகன் வதம் செய்கிறான். அதில் சூரபத்மன் இரண்டாகப் பிளந்து விழுகிறான். அப்போது தனது தவறை உணர்ந்த சூரபத்மன், முருகப்பெருமானுடனே எப்போதும் இருக்குமாறு அருள்புரிய மன்றாடுகிறான். அதன்பின்னர், இரண்டாகப் பிளந்து விழுந்த சூரபத்மனின் ஒரு பாகம் சேவலாகவும், மற்றொரு பாகம் மயிலாகவும் மாறின. சேவல் முருகனின் கொடியில் இடம்பிடித்தது. மயில் முருகனின் ஊர்தியாக மாறியது. |
முருகப்பெருமான் கருவறைக்குள் அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார். முருகப்பெருமான் கருவறைக்கு மேற்கில் இடப்பக்கம் தெய்வானையும், வலப்பக்கம் நாரதரும் வீற்றிருக்கின்றனர். முருகப்பெருமான் திருவுருவத்தின் மேற்குப் பகுதியில் சூரியன், சந்திரன், காயத்திரி, சாவித்திரி, சித்தவித்தியாதரர், கலைமகள், நான்முகன், இந்திரன் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். கீழே, யானை, மயில், ஆடு, சேவல் ஆகியவற்றுடன் பூதகணங்கள் எழுந்தருளியுள்ளன. முருகப்பெருமான் கருவறைக்கு மேற்கில் துர்க்கையம்மன் (கொற்றவை), கற்பகவிநாயகர், பவளக்கனிவாய் பெருமாள், சத்தியகீரிஸ்வரர் அருள்பாலிக்கின்றனர்.
மேற்குப் பகுதியில் சத்தியகிரீஸ்வரர் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். சோமாஸ்கந்தர் உருவமும் உள்ளது. ஆறுபடை வீடுகளில் இத்தலத்தில்தான் முருகப்பெருமான் அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார். மேலும், முருகப்பெருமானின் கையிலுள்ள வேலுக்கே பால் அபிஷேகமும், மஞ்சன நீராட்டுகளும் நடைபெறுகின்றன.
பவளக்கனிவாய் பெருமாள்: கருவறைக்கு கிழக்குப் பகுதியில் பவளக்கனிவாய் பெருமாள் மேற்கு திசை நோக்கி வீற்றிருக்கிறார். அவருக்கு இருபுறமும் மகாலட்சுமி மற்றும் மதங்கமாமுனிவர் திருவுருவங்களும் உள்ளன. சிவபெருமானுக்கு எதிரே நந்தி இருக்கவேண்டிய இடத்தில் பெருமாள் இருப்பதால், இவருக்கு ‘மால் விடை’ எனும் சிறப்பு பெயரும் உண்டு. இத்தகைய அமைப்பு வேறு எந்த தலத்திலும் இல்லை.
முருகப்பெருமானின் திருத்தலத்திலேயே வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறப்பு நடைபெறுவது திருப் பரங்குன்றத்தில் மட்டும்தான் என்பதும் சிறப்புக்குரியது.