

சாயல்குடி அருகே மாரியூர் கிராமத்தில் அமைந்துள்ள பூவேந்தியநாதர் கோயிலில் தரிசனம் செய்தால், முன்னோர்களால் செய்யப்பட்ட பாவங்கள், சனிதோஷம் அகலும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே உள்ளது கடற்கரை கிராமமான மாரியூர். இங்கு பூவேந்தியநாதர் (சிவன்) உடனுறை பவளநிற வள்ளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இது ராமாயணம் இதிகாசத்தில் ராவணன் பூஜித்த தலமாக விளங்குகிறது.
காடுகள் நிறைந்த இப்பகுதியில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு முனிவர் ஒருவர் கடும் தவம் புரிந்துள்ளார். ஆண்டுக்கு ஒருமுறை கண்விழித்து பூவேந்தியநாதரை வழிபட்டு வந்துள்ளார். இவர் அங்குள்ள மரத்தின் ஒரே ஒரு பழத்தை மட்டும் சாப்பிட்டு விட்டு, மீண்டும் தவத்தை தொடர்வது வழக்கம். ஒருமுறை அப்பழம் அங்கிருந்த தெப்பகுளத்துக்குள் விழுந்து விட்டது. அக்குளத்தில் தண்ணீர் எடுத்த பெண் ஒருவரின் பாத்திரத்துக்குள் அப்பழம் சென்று விட்டது.
பழத்தை சாப்பிட கண்விழித்த முனிவர், பழம் பெண்ணின் பாத்திரத்துக்குள் சென்றதை அறிந்து சாபம் விடுகிறார். இதனால் அப்பெண்ணின் உடல் பாகங்கள் அழுகி வருகின்றன. இதனால், தனக்கு சாபவிமோசனம் கிடைக்க வேண்டி சிவனை வேண்டிக்கொள்கிறாள். அப்போது, பலத்த சூறைக்காற்றில் கடல் மணல் பறந்து மழையாக பொழிந்து கோயில் மூடப்படுகிறது. மணல் மாரியாக பெய்த ஊர் என்பதால் மாரியூர் எனப்படுகிறது.
அதன்பின்னர், இப்பகுதிக்கு வேட்டைக்கு வந்த பாண்டிய மன்னனின் குதிரை கல் இடறிவிட்டு கீழே விழுகிறது. இதனால் கீழே விழுந்த மன்னன், அங்கிருந்த சிவலிங்கத்தின் ஒரு பாகத்தை பார்க்கிறான். அங்கு தோண்டி பார்க்கையில், சிவலிங்கம் தலையில் பூ ஒன்று பூஜித்த நிலையில் உள்ளது. இதனால் சிவலிங்கத்துக்கு பூவேந்தியநாதர் என பெயர் சூட்டியும், அங்கிருந்த அம்மனுக்கு பவளநிற வள்ளியம்மன் என பெயர்சூட்டியும் ஆலயம் எழுப்பி வழிபட்டு வந்துள்ளார்.
நாளடைவில் பாண்டிய மன்னர் வழிவந்த ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களும் வழிபட்டு வந்துள்ளனர். இதற்கு சான்றாக இக்கோயிலில் இருந்து சுரங்கப் பாதை ஒன்று செல்கிறது. இதன் வழியாகச் சென்றால், திருஉத்தரகோச மங்கை சிவன் ஆலயத்துக்கு செல்லலாம் எனக் கூறுகின்றனர். மேலும், இக்கோயிலில் பாறைகள் கொண்டு பூதங்கள் கட்டிய கிணறு ஒன்று இருக்கிறது. அதில் எலுமிச்சை பழம் போட்டால், அருகிலிருக்கும் மேலச்செல்வனூர் சிவன் ஆலய கிணற்றில் பார்க்கலாம் என்கின்றனர்.
இக்கோயிலில் மின்னை மரம் தலவிருட்சமாக உள்ளது. இதனைச் சுற்றி வந்தால் முன்னோர்களால் செய்த பாவங்கள், சனிதோஷம் அகலும் எனவும், நாள்பட்ட நோய்கள் தீரும் எனவும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் எனவும் நம்பப்படுகிறது. இக்கோயில் அருகே கடல் இருப்பதால், ராமேசுவரம், சேதுக்கரைக்கு அடுத்தபடியாக, அமாவாசை தினங்களில் பக்தர்கள் இக்கடலில் புனித நீராடுகின்றனர்.
ஆண்டுதோறும் மார்கழி மாதம் பவுர்ணமியில் திருவிழா கொண்டாடப்படுகிறது. இதுதவிர, திருவிளையாடல் புராணத்தில் வரும் வலைவீசும் படலம் இங்கு நடைபெற்றதாகக் கூறி, அந்த விழாவும், திருக்கல்யாண விழாவும் ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பிரதோஷ காலங்களில் சிறப்பு வழிபாடு, தினந்தோறும் நான்குகால பூஜைகள் நடைபெறுகின்றன.
விரத காலங்களில் பக்தர்கள் கடலில் குளித்து, இக்கோயிலில் மாலையணிந்து விரதத்தை தொடர்கின்றனர். சனிக்கிழமைகளில் பித்துரு தோஷம் சடங்குகள் கடலில் நடக்கும். இக்கோயில் ராமநாதபுரம் சமஸ்தானம், தேவஸ்தானம் கட்டுப் பாட்டில் உள்ளது. சாயல்குடியிலிருந்து மாரியூருக்கு 5 வேளைகளில் பேருந்தும், கடலாடி மலட்டாறு முக்கு ரோட்டிலி ருந்து ஆட்டோ வசதியும் உள்ளது. கடலாடி பகுதி பிரதோஷ கமிட்டி, கோயில் வளாகங்களை பராமரித்தும், விசேஷ காலங்களில் அன்னதானம், தண்ணீர் பந்தல் போன்ற உதவிகளையும் செய்து வருகிறது.