

வம்ச விருத்திக்கும், செல்வச் செழிப்புக்கும் அருள்புரிகின்றார் ஜெயங்கொண்டானில் வீற்றிருக்கும் ஜெயபால ஆனந்த கல்யாண சுப்பிரமணிய சுவாமி.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே ஜெயங்கொண்டானில் ஜெயபால ஆனந்த கல்யாண சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் மூலவரான ஜெயபால ஆனந்த கல்யாண சுப்பிரமணிய சுவாமி, வள்ளி - தெய்வானையுடன் மேற்கு திசை நோக்கி அருள்பாலிக்கின்றார். இவரிடம் வேண்டினால், பழனி முருகனை வழிபட்ட பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இக்கோயிலில் 12 நாட்கள் நடைபெறும் பங்குனி உத்திரத் திருவிழாவில் திருக்கல்யாணம், திருவிளக்கு பூஜை, ஊஞ்சல் உற்சவம், தெப்ப உற்சவம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் விமரிசையாக நடைபெறுகின்றன. பக்தர்கள் தீ மிதித்தும், பால்குடம், பறவைக்காவடி, வேல் காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர். இங்கிருந்து பழனிக்கு காவடி எடுத்து, பக்தர்கள் அதிகளவில் செல்கின்றனர். புரட்டாசி மாதத்தில் பள்ளத்தூரிலிருந்து நகரத்தார்கள் இக்கோயிலுக்கு பால்குடம், காவடி எடுத்து பாதயாத்திரையாக செல்கின்றனர்.
முருக பக்தர் வேலு பண்டாரத்தார் ஆண்டுதோறும் பழனி முருகனை தரிசிக்க பக்தர்களுடன் பாதயாத்திரை செல்வது வழக்கம். முதுமையால் பழனி யாத்திரைக்கு செல்ல முடியாததை எண்ணி வருந்தினார். அவரது கனவில் தோன்றிய முருகப்பெருமான், பழனி நவபாஷாண முருகனை ஸ்தாபித்த போகரின் குரு ஜெயமுனிவர். அவர் வணங்கிய முருகன் உருவச் சிலை உள்ளது என்றார்.
அதன்படி, குறித்த இடத்தில் தோண்டியபோது முருகனின் உருவச் சிலை கிடைத்தது. கிழக்கு நோக்கி பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அடுத்த நாள், சிலை மேற்கு நோக்கி திரும்பியிருந்தது கண்டு அதிசயத்தார். ஓலை குடிசை அமைத்து வழிபட்டனர். பின்னர், வள்ளி - தெய்வானை சிலைகள் பிரதிஷ்டை செய்து கோயில் கட்டினர். வேலு பண்டாரத்தாரின் வம்சாவளியினரே பூஜைகள் செய்து வருகின்றனர்.
அதன்பின்னர், முருக பக்தர் ராமசுவாமி அய்யர் மனமுருகி வழிபட்டதால், அவரது மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஐம்பொன் னால் உற்சவர் செய்து, 1898-ல் பங்குனி மாதம் வழிபாட்டுக்காக பிரதிஷ்டை செய்தார். மூலவருக்கு ஜெயபால ஆனந்த கல்யாண சுப்பிரமணிய சுவாமி என்ற பெயரும் உண்டானது. மூலவராக ஜெயபால ஆனந்த கல்யாண சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை சமேதமாக பழனி முருகனைப்போல் மேற்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கின்றார்.
இக்கோயிலில் இடும்பன், நவக்கிரகங்கள் சந்நிதிகளும் உள்ளன. பங்குனி உத்திரம், தைப்பூசம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம் உள்ளிட்ட விழாக்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. வம்ச விருத்தி, செல்வ செழிப்பு, கல்வி, ஞானம் கிடைக்க வேண்டும் என வேண்டுபவர்கள் இக்கோயிலுக்கு வருகின்றனர்.