

பூலோகத்தில் மனிதர்கள் செய்யும் பாவ, தர்மங்களுக்கு ஏற்ப மேலோகத்தில் பலன் உண்டு என்பது இந்து தர்மம். இதற்காக, ஒவ்வொருவரின் பாவ, புண்ணியக் கணக்குகள் எழுதப்பட்டுக் கொண்டே வருகின்றன. எமனின் உதவியாளரான சித்திரகுப்தன்தான் இந்த கணக்குகளை கவனிக்கும் உயர் அதிகாரி. எந்த பாரபட்சமும் இன்றி, ஒவ்வொருவரின் கணக்கிலும் இவரின் பதிவுகள் ஏற்றப்பட்டுக் கொண்டே வருகின்றன. இந்த ‘கணக்காளருக்கு’ தேனிக்கு அருகே தனி கோயில் உள்ளது.
தேனி - போடி சாலையில் 7 கி.மீ. தொலைவில் கோடாங்கிபட்டி அருகே தீர்த்தத் தொட்டி எனும் இடத்தில்தான் சித்திரகுப்தன் அருள்பாலித்து வருகிறார்.
ஸ்தல வரலாறு: ஒருமுறை மனிதர்களின் பாவ, தர்மங்களின் நிலையை எமதர்மனால் உணர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. நரகம், சொர்க்கத்துக்கு அனுப்புவதில் குழப்பம் ஏற்பட்டது. உடனே சிவனிடம் வேண்டினார். அதையடுத்து, பார்வதி வரைந்த சித்திரத்துக்கு சிவன் உயிர் கொடுத்தார். அவரே சித்திரகுப்தனாக எமதர்மனின் நிரந்தர உதவியாளராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
மனிதர்களின் செயல்களை நுட்பமாக உணர்ந்து, பாரபட்சமின்றி குறிப்பு எழுதுவதில் வல்லவர் சித்திரகுப்தன். மேலோகம் செல்லும் ஜீவராசிகளின் பக்கங்களை புரட்டி எமனிடம் பட்டியலிட்டு, நாம் ‘செல்ல வேண்டிய இடத்தை’ தீர்மானிப்பவரும் இவரே. கண்காணிப்பும், தண்டனையும் இருப்பதால்தான் இந்த லோகத்தில் தீங்குகள் குறைகின்றன என்ற நிலையை ஏற்படுத்தியதில் இவருக்கு பெரும்பங்கு உண்டு.
சூரியன் உச்சம் பெறும் சித்திரை மாத முழுநிலவன்று பிறந்தவர் இவர். இதனால் சித்திரை பவுர்ணமி அன்று இவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. இதேபோல், ஒவ்வொரு பவுர்ணமிக்கும் இக்கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெறும். இவருக்கு சர்க்கரைப் பொங்கல், தயிர்சாதம், வெண்பொங்கல் உள்ளிட்டவை நைவேத்தியமாக படைக்கப்படுகின்றன.
சித்திரகுப்தரை தரிசிக்கும்போது, பாவங்கள் உணரப்படுகின்றன. செய்த தவறுக்கு வருந்தி அடுத்தடுத்து நற்செயல்களில் ஈடுபடும்போது, பாதிப்பின் தன்மை குறைகிறது.
நவக்கிரகங்களில் கேதுவுக்கு சித்திரகுப்தன்தான் அதிபதி. எனவே, கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து அதிகம் வழிபடுகின்றனர். ஆடி 18, தமிழ் வருட பிறப்பு, சரஸ்வதி பூஜை, விநாயகர் சதுர்த்தி, தீபாவளி உள்ளிட்ட நாட்களில் காலை 6 முதல் இரவு 8 மணி வரை நடை முழுமையாக திறக்கப்பட்டிருக்கும். மற்ற நாட்களில் காலை 6 முதல் பிற்பகல் 1 மணி வரையும், மாலை 4 முதல் இரவு 7 மணி வரையும் நடை திறக்கப்பட்டிருக்கும்.