

மலையே மகேசன் என அழைக்கப்படும் அண்ணாமலையானது கிருதா யுகத்தில் அக்னி மலையாகவும், திரேதா யுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் பொன் மலையாகவும், கலியுகத்தில் கல் மலையாகவும் உள்ளது. அண்ணாமலையின் எட்டுத்திக்கிலும் அஷ்டலிங்கங்கள் அமைந்துள்ளன. கிரிவலப் பாதையில் இந்திர லிங்கம், அக்னி லிங்கம், யம லிங்கம், நிருதி லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம் மற்றும் ஈசான்ய லிங்கம் ஆகிய கோயில்கள் உள்ளன. இக்கோயில்களை வழிபட்டால் கிடைக்கும் பலன்களை புராணங்கள் தெரிவிக்கின்றன. அண்ணாமலையை கிரிவலம் செல்லும் பக்தர்கள் பலரும், அஷ்ட லிங்கங்களை தவறாமல் வழிபடுகின்றனர்.
இந்திர லிங்கம்: கிழக்கு திசையில் உள்ளது இந்திர லிங்கம். இதனை தேவர்களின் அரசன் என்ற அழைக்கப்படும் இந்திரன் பிரதிஷ்டை செய்துள்ளார். இதன் தொடர்புடைய கிரகங்களாக சூரியன், சுக்கிரன் உள்ளது. இந்திர லிங்கத்தை வழிபடுவதால் நீண்ட ஆயுள் மற்றும் புகழ் கிடைக்கும்.
அக்னி லிங்கம்: தென்கிழக்கு திசையில் உள்ளது. அக்னியானவர் பிரதிஷ்டை செய்துள்ளார். இதன் தொடர்புடைய கிரகங்களாக சந்திரன் உள்ளது. அக்னி லிங்கத்தை வழிபட்டால் நோய்களில் இருந்தும் பயத்தில் இருந்தும் விடுபடலாம்.
எம லிங்கம்: தெற்கு திசையில் உள்ளது. இந்த லிங்கத்தை எமன் பிரதிஷ்டை செய்துள்ளார். இதற்கும், செவ்வாய் கிரகத்துக்கும் தொடர்பு உள்ளது. எம லிங்கத்தை வழிபட்டால் நீண்ட ஆயுள் பெறலாம்.
நிருதி லிங்கம்: தென் மேற்கு திசையில் உள்ளது. அசுரர்களின் அரசரான நிருதி என்பவர் பிரதிஷ்டை செய்துள்ளார். ராகு கிரகத்துக்கு தொடர்புடையது. நிருதி லிங்கத்தை வழிபடு
வதால் உடல் நலம், செல்வம் மற்றும் புகழ், குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
வருண லிங்கம்: மேற்கு திசையில் உள்ளது. இதனை, வருணன் பிரதிஷ்டை செய்துள்ளார். சனி கிரகத்துக்கு தொடர்புடையது. வருண லிங்கத்தை வழிபட்டால் நோய்களில் இருந்து விடுபடலாம். நீர் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.
வாயு லிங்கம்: வட மேற்கு திசை யில் உள்ளது. இதனை, வாயு பிரதிஷ்டை செய்துள்ளார். கேது கிரகத்துக்கு தொடர்புடையது. வாயு லிங் கத்தை வழிபட்டால் இதயம், மூச்சு குழாய் மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட நோய்களில் இருந்து விடுபடலாம்.
குபேர லிங்கம்: வடக்கு திசையில் உள்ளது. இதனை, குபேரன் பிரதிஷ்டை செய்துள்ளார். குரு கிரகத்துக்கு தொடர்புடையது. குபேரலிங்கத்தை வழிபட்டால் செல்வம் மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழலாம்.
ஈசான்ய லிங்கம்: வட கிழக்கு திசையில் உள்ளது. இதனை, ஈசான்யனன் பிரதிஷ்டை செய்துள்ளார். புதன் கிரகத்துக்கு தொடர்புடையது. ஈசான்ய லிங்கத்தை வழிபட்டால் மன அமைதி பெறலாம்.