

நீர், நெருப்பு, காற்று, வானம், பூமி ஆகிய ஐம்பூதங்களில் நெருப்புக்கான தலமாக இருப்பது இந்த திருவண்ணாமலை தலமாகும். இத்தலத்துக்கு பெயர் பெற்ற இடைக்காட்டு சித்தர் உட்பட பல சித்தர்கள் இன்றும் இங்கு உறைவதாக நம்பும் பக்தர்கள் கிரிவலம் மேற்கொள்கின்றனர். சித்தர்களை வணங்கும் முகமாக கிரிவலம்செல்பவர்கள் கையில் கொத்தாக ஊதுவத்திகளை ஏற்றி எடுத்துக்கொள்கின்றனர். அதன் மணம் மலையையே சுற்றி சூழ்கிறது. பெரும்பாலான பக்தர்கள் காலில் செருப்பு அணிவது இல்லை.
இங்கு உலவும் சித்தர்களின் மீது படும் காற்றானது தங்களது உடலில்பட்டால் தங்களது பல ஜென்ம பாவம் போய்விடும் என நம்புகிறார்கள் பக்தர்கள். எனவே, கிரிவலம் இங்கு மிகவும் பிரபலம். இம்மலைக்குள் இன்றும் ரிஷிகள் பல குழுக்களாக, பாறைகளின் அடியில் உள்ள குகைகளில் உலக நன்மையை வேண்டி யாகம் செய்துகொண்டிருப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.
மலையை வலம் வந்தால், ரிஷிகளையும் வலம் வந்த பலன் கிடைக்கும் என்கிறார்கள். இங்கு மாதந்தோறும் வரும் லட்சக்கணக்கான மக்கள். மலைகள் நிறைந்த அழகிய ஊர் திருவண்ணாமலை. பாறைகள் கொண்ட மலையில் இருந்து இறங்கி வருவது போல் அமைந்துள்ளது பெரிய தெரு. இத்தெருவில் தீபத் திருவிழாவின் பொழுது அண்ணாமலையார் உற்சவராக எழுந்தருளி திருவீதி உலா வருவது கண்கொள்ளா காட்சியாகும்.
மலையடிவாரத்தில் தான் ரமண மகரிஷியின் ஆசிரமம் உள்ளது. இந்த ஆசிரமம் கான மயில் ஆட, அமைதி தவழும் ஆனந்த நிலையம். இந்த ஆசிரமத்தில் உள்ள மரக்கிளைகளில் அமர்ந்துள்ள மயில்கள் ரமணர் வழியில் மோனத்து தியானித்து இருக்கின்றன. நீண்ட தோகைகளை தொங்கவிட்டு, மரக்கிளைக்கு அழகு சேர்க்கின்றன. அவை, மரத்தின் மீது நீண்ட புது வகை பூ போல புது வண்ணம் காட்டுகின்றன.
அருணகிரிநாதர், விருபாஷதேவர், குகைநமச்சிவாயர், குருநமச்சிவாயர், தெய்வசிகாமணி, அருணாசல தேசிகர், மகான் சேஷாத்திரி சுவாமிகள், பகவான் ரமண மகரிஷி, யோகி ராம் சுரத்குமார் ஆகியோர் பக்தர்களை இறை பக்தியில் ஆழ்ந்து பிறவி நோக்கத்தை அறிய செய்தனர். இங்கு அவர்கள் ஜீவ சமாதி அடைந்து இனி வரும் தலைமுறையினரையும் அரூபமாய் பக்தி மார்க்கத்தில் வழி நடத்துகிறார்கள்.
இங்குள்ள கிரிவலப் பாதையில் அஷ்டலிங்கங்களான இந்திர லிங்கம், அக்னி லிங்கம், யமலிங்கம், நிருதி லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம் மற்றும் ஈசான்ய லிங்கம் ஆகியவை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. கிரிவலம் வரும்பொழுது முதன்மை மலைக்கு இணையாக கொஞ்சம் சிறிய மலை ஒன்றும் காணக்கிடைக்கிறது. இதனை சிவ பார்வதி ஆகிய தம்பதி ரூபம் என மக்கள் கொண்டாடுகிறார்கள். இளங்காலை பொழுதில் ஒளிரும் விளிம்புகளுடன் காட்சி அளிக்கும் மலை முகடுகளின் அற்புதக் காட்சி பக்தியில் தோய்ந்த மனத்துக்கு பெரும் சாந்தி.