

திருச்சிற்றம்பலம் உடையான் கல்வெட்டு காட்டும் தீப வழிபாடு என திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் வசிக்கும் வரலாற்று ஆய்வாளர் ஆர்.விஜயன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறும்போது, “கார்த்திகை மாதத்தில் மகா தீபம் ஏற்றப்படும் திரு அண்ணாமலையின் உச்சியில் பழமையான தமிழ் எழுத்துகளில் செதுக்கப்பட்ட கல்வெட்டை அடையபுலம் பாண்டியனுடன் சென்று கண்டெடுத்தோம். தொல்பொருள் துறை முன்னாள் இயக்குநர் நடன.காசிநாதன் உதவியுடன், இக்கல்வெட்டை ஆய்வு செய்தபோது, ஆயிரம் ஆண்டுகளை கடந்து மகா தீபம் ஏற்றப்படுவது தெரியவந்தது.
அண்ணாமலை என்றால் உச்சியைக் காண இயலாமல் நெடிது நிற்கும்மலை என்றே பொருள். பிரம்மனுக்கும், திருமாலுக்கும், சிவபெருமான் தனது உருவத்தை ஜோதியாய் நின்று காட்டிய தலம் இது. பகவான் கிருஷ்ணரின் அறிவுரையின்படி அர்ஜுனன் வந்து வணங்கிய தலம் திருவண்ணாமலை ஆகும்.
மலையின் உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றும் பாறையின் வடக்கில் இரு புனித பாதங்களின் அடையாளங்கள் செதுக்கப்பட்டுள்ளதை அனைவரும் அறிவோம். சிவன் வந்து நின்ற இடமாக, இப்பாதச்சுவடுகள் வணங்கப்பட்டு வருகிறது. இப்பாதங்கள் மேற்கு திசையை பார்த்தவாறு அமைந்துள்ளது. இவ்விருபாத அடையாளங்களும், புடைப்பு சிற்பத்தை போன்று கனமாக செதுக்கப்பட்டுள்ளன. இடது பாதத்தைவிட வலது பாதம் சற்று பெரியதாக உள்ளன. இந்த பாதச் சுவடுகளுக்கு அருகில் ஒரு சிறிய கல்வெட்டு உள்ளது கடந்த 2007-ல் கண்டெடுக்கப்பட்டது. இக்கல்வெட்டு அமைந்துள்ள இடம் சதுரமாகவும், வழவழப்பாகவும் செய்த பின்னர், அதன் மீது எழுத்துக்களை செதுக்கி உள்ளனர்.
தீபம் ஏற்றும் காலத்தில் அங்கு சிதறிக் கிடந்த நெய்யும், மண்ணும் கூழாக கலந்திருந்திருக்கும். அந்த இடத்தை சுத்தம் செய்து பார்த்தபோது அங்குள்ள பாறையில் ‘திருச்சிற்றம்பல முடையான் - ஆச்சம்பி' என செதுக்கப்பட்டிருந்ததை காண நேர்ந்தது. அதாவது, இம்மலையே திருச்சிற்றம்பலம் உடையானாகிய சிவனாக கருதி ஆச்சம்பி என்ற அடியார், இக்கல்லெழுத்துகளை பொறித்துள்ளார் என்பதை அறிய முடிகிறது.
இக்கல்வெட்டு 11-ம் நூற்றாண்டில் தமிழ் மொழியில் செதுக்கப்பட்டுள்ளது. அதாவது சுமார் 1,000 ஆண்டுகள் பழமையானதாகும். காஞ்சிபுரத்தை நிலமாகவும், திருவண்ணாமலையை நெருப்பாகவும், திருவானைக்காவலை நீராகவும், சிதம்பரத்தை ஆகாயமாகவும், திருக்காளத்தியை காற்றாகவும் இருந்து சிவபெருமான் பஞ்சபூத தலங்களை ஆள்கிறார். அதில் சிதம்பரம் நடராஜர் சிற்றம்பலவாணன் என்று சிறப்பிக்கப்பட்டவர் ஆவார்.
நடராஜர் கோலத்தில் ஆனந்தத் திருநடனம் புரியும் சிவபெருமானே, அண்ணாமலையானே என்று இம்மலையை வியந்து போற்றும் இக்கல்வெட்டை ஆச்சம்பி என்ற சிவனடியார் செதுக்கியுள்ளார். மலை உச்சியில் இருக்கும் இக்கல்வெட்டு, அங்கு தீபம் ஏற்றும் இடமாக இருந்தன் காரணத்தினாலேயே செதுக்கப்பட்டிருக்கிறது என்ற ஒரு உண்மை இதன் மூலமாக வெளிப்படுகிறது. அண்ணாமலையாரின் திருக்கார்த்திகை தீபமானது சுமார் ஆயிரம் ஆண்டுகளாக அங்கு ஏற்றப்பட்டு வழிபட்டு வந்துள்ளதை நமக்கு தெரிவிக்கும் சான்றாகவும் இக்கல்வெட்டு உள்ளது” என்றார்.