

தஞ்சை மாவட்டத்தில் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலுக்கு மிக அருகில் அமைந்துள்ள கோதண்டராமர் கோயில் முக்தி தரும் தலமாக போற்றப்படுகிறது. காரியத் தடை நிவர்த்திக்கும், பிறவிப் பயன் அடையவும், பலவகை பாவங்கள் தீரவும் கோதண்டராமர் அருள்பாலிப்பார்.
வைணவ சம்பிரதாயத்தில் மணமகன் வீட்டாருக்கு துளசி மாடத்தையும் சாளக்கிராமத்தையும் பெண்வீட்டார் அந்தக் காலத்தில் வழங்கி வருவது வழக்கம். சாளக்கிராமம் என்ற கல், திருமாலின் அம்சமாகப் போற்றப்படுகிறது. ஐந்தடி உயரம் கொண்டவராக, சாளக்கிராம மூர்த்த மூலவராக நின்ற கோலத்தில் சீதாபிராட்டி, லட்சுமணர், சுக்ரீவனுடன் கோதண்டராமர் இத்தலத்தில் சேவை சாதிக்கிறார்.
ராமபிரான் வீற்றிருக்கும் கருவறை விமானம் சௌந்தர்ய விமானம் என்று அழைக்கப்படுகிறது. ராஜ கோபுரம், பலி பீடம், திருச்சுற்று, முன்மண்டபம், விமானம், கருவறை போன்ற அமைப்புகளுடன் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. ராமபிரான், சீதாபிராட்டி, லட்சுமணர் உற்சவர் சிலைகள் 1,400 ஆண்டு கால பழமை வாய்ந்ததாக கருதப்படுகின்றன. இவை இங்கிருந்து 25 கிமீ தூரத்தில் உள்ள நீடாமங்கலம் அருகே பூவானூர் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறுவர்.
இத்தலம் கிபி 1739 – 1763-ல் கட்டப்பட்டது. நேபாள மன்னரின் மகளை தஞ்சை மன்னரின் மகனுக்கு நிச்சயம் செய்யப்பட்டது. இரு மன்னர்களும் சம்பந்தி ஆனதால் தஞ்சை மன்னருக்கு ஏராளமான சீர்வரி சைகளை வழங்கினார் நேபாள மன்னர். நேபாள நாட்டில் உள்ள கண்டிகை நதியில் சாளக்கிராமங்கள் நிறைய தோன்றும் என்று கூறுவர். அந்த சீர்வரிசைகளுடன் மிகப்பெரிய சாளக்கிராம கல்லையும் நேபாள மன்னர், தஞ்சை மன்னருக்கு அளித்தார்.
அதன் பின்னர் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர் பிரதாபசிங் நிறைய நிலங்கள், நிதியுதவி அளித்து கோபுரம், திருச்சுற்றுகளுடன் இக்கோயிலைக் கட்டியுள்ளார் என்று வரலாறு தெரிவிக்கிறது. அந்தக் கல்லால் ஆன மூர்த்திகள் கருவறையை அலங்கரிக்கின்றனர்.
மராட்டிய அரசி எழுனாம்பாள் பாஹி சாஹேப் இக்கோயில் பணிகளுக்காக ஒட்டக்குடி, ரிஷியூர், கொட்டையூர், மகிமாலை ஆகிய கிராமங்களில் உள்ள 138 ஏக்கர் நிலங்களை அளித்தார். மேலும் மகாமண்டபம் - துவஜஸ்தம்பம் (கொடிமரம்) செப்புத் தகட்டில் கிபி. 1892-ல் மராட்டிய மன்னன் சிவாஜியின் பட்டத்தரசி காமாட்சியம்பா பாஹி சாஹேப் செய்த திருப்பணிகள் குறித்து எழுதப்பட்டிருப்பதைக் காணலாம்.
திருக்கோயிலுக்கு 12 படிகள் ஏறிச் செல்ல வேண்டும். இது 12 ராசிகளைக் குறிப்பிடுவதாகக் கூறுவர். ராஜ கோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால் தும்பிக்கை ஆழ்வாரை தரிசிக்கலாம். கொடிமரம் வட்டக் கல் மீது அமைந்துள்ளது. அதன் அடிப்பகுதியில் கிழக்குப் பக்கம் சீதை, ராமர், லட்சுமணருடன் அருள்பாலிக்க, தெற்குப் பக்கம் சங்கும், மேற்குப் பக்கம் நாமமும், வடக்குப் பக்கம் சக்கரமும் அமைந்துள்ளன. மண்டபத்தின் உட்புறச்சுவர்களில் கருடாழ்வார், ஆஞ்சநேயர், ஸ்ரீ ராமர் பட்டாபிஷேக ஓவியங்களைக் காணலாம். கொடிமரத்தை ஒட்டிய சந்நிதியில் கருடாழ்வார் அருள்பாலிக்கிறார்.
மாதந்தோறும் நவமி திருநாளிலும், புனர்பூச நட்சத்திர நாளிலும் விசேஷ பூஜைகள் நடைபெறும். வாரந்தோறும் புதன், சனிக்கிழமைகளில் கோதண்டராமருக்கு துளசி மாலை சாற்றி, பக்தர்கள் வணங்குவது வழக்கம். தொடர்ந்து ஒன்பது சனிக்கிழமைகள் அல்லது ஒன்பது புதன்கிழமைகள் வந்து வழிபட்டால், இழந்ததை மீட்கலாம், உத்தியோகம் சிறக்கும், பதவி உயர்வு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
பிரகாரத்தில் சக்கரத்தாழ்வார், ஜயவீர ஆஞ்சநேயர், யோக நரசிம்மர், நிகமாந்த மகாதேசிகன், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், உடையவர் சந்நிதிகளையும், தல விருட்சமான புன்னை மரத்தையும் தரிசிக்கலாம். பிரகார சுற்றுச் சுவர்களில் ராமாயண ஓவியக் காட்சிகளைக் காணலாம். மூலஸ்தானத்தில் வலக்கையில் சரமும் இடக்கையில் கோதண்டமும் திகழ கோதண்டராமர் அருள்பாலிக்கிறார். வலப்புறம் சீதாபிராட்டியும் இடப்புறம் இளைய பெருமாள் லட்சுமணரும் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கின்றனர். அருகே அமர்ந்த நிலையில் ஆஞ்சநேயர் உள்ளார்.
கோயிலில் புன்னை மரத்தடியில் ஸ்ரீராமர் பாதம், பெரிய தேர் இருந்ததற்கு சாட்சியாக தேரடி மண்டபம், மண்டபத்தின் மேல்தளத்தில் லட்சுமி ஹயக்ரீவர் சந்நிதிகளைக் காணலாம். இங்குள்ள மகா சுதர்சனரை வழிபட்டால் நீண்ட ஆயுளும், நீங்காத செல்வமும் பெற்று அனைத்து கோரிக்கைகளும் நிறைவேறும். மேற்கூரையில் பன்னிரண்டு ராசி மண்டலம் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு நேராக தரையில் ராசிக் கட்டங்கள் அந்தந்த ராசிக்குரிய வண்ணங்களுடன் தீட்டப்பட்டுள்ளன. அவரவர் ராசிக்கேற்ற கட்டத்தில் நின்று வேண்டிக் கொண்டால் ராசிரீதியான குறைகள் நீங்கி அனைத்து காரியங்களும் சித்தியாகும் என்பது நம்பிக்கை.
அமைவிடம்: தஞ்சாவூரில் இருந்து 7 கிமீ தொலைவில் உள்ளது.