

மைசூர் சமஸ்தானத்தில் ஏறத்தாழ 300 ஆண்டுகளுக்கு முன்பு அமைச்சராகப் பணிபுரிந்த லிங்கராயரின் மகனாக ஸ்ரீதர அய்யாவாள் அவதரித்தார். தந்தையின் வழிகாட்டுதலின்படி இளம் வயதிலேயே வேதம், சாஸ்திரம் முதலானவற்றை கற்றுத் தேர்ந்தார். தந்தையின் மறைவுக்குப் பிறகு அரசு வழங்கிய திவான் பதவியை உதறித் தள்ளிவிட்டு தாயுமானவர் போன்று இறைவனின் பேரானந்த நிலையைத் தேடி, பல தலங்களுக்குச் சென்ற பின்னர் திரிசிரபுரத்துக்கு (திருச்சி) வந்தார்.
திருச்சி மாநகரில் மாத்ருபூதேஸ்வரர் கோயில் அருகே தன் மனைவி லட்சுமியுடன் வசித்து வந்தார். அங்கு உஞ்சவிருத்தி எடுத்து எளிமையான முறையில் தன்னுடைய வாழ்க்கையை நடத்திக் கொண்டு, உபன்யாசமும் செய்து வந்தார். பகவான் கிருஷ்ணரைத் துதிக்க ‘ஸ்ரீ கிருஷ்ண த்வாதச மஞ்சரி’ எனும் பெயரில் ஸ்தோத்திரத்தை இயற்றினார்.
ஒருநாள் காவிரி நதியில் நீராடிவிட்டு வீடு திரும்பும் வழியில் ஓர் அந்தணர் தம்பதியின் குழந்தை இறந்ததை அறிந்து, அவர்களின் துயர் போக்க சிவபெருமானை தியானித்து, ‘தாராவளி’ எனும் ஸ்தோத்திர பாடலைப் பாடினார். பாடி முடித்த பின்பு, குழந்தை மீது புனித நீரைத் தெளித்து நெற்றியில் திருநீற்றைப் பூசினார். குழந்தை உடனே உயிர் பிழைத்தது. இச்சம்பவம் காரணமாக இவரது மகிமை ஊர் முழுவதும் பரவத் தொடங்கியது.
நாமசங்கீர்த்தனத்தில் மும்மூர்த்திகளுள் ஒருவரான ஸ்ரீபோதேந்திராள் என்கிற மகானின் தொடர்பு ஏற்படவே, திருச்சியில் இருந்து திருவிச நல்லூரில் தங்க முடிவு செய்தார். அச்சமயத்தில் தஞ்சை பகுதியை ஆண்ட ஷாஹாஜி என்கிற அரசர், ஸ்ரீ அய்யாவாள் திருவிசநல்லூரில் தங்குவதற்கு ஏற்பாடு செய்து கொடுத்தார்.
ஒரு சமயம் ஸ்ரீ அய்யாவாள் வீட்டில் அமாவாசை திதி தினத்தில் சிரார்த்தம் (முன்னோர் / பித்ரு வழிபாடு) செய்ய ஏற்பாடானது. இதற்காக வந்த வைதீக பிராமணர்களுக்கு உணவும் தயாராக இருந்த சமயத்தில், இவரது வீட்டு வாசலில் ஒரு முதியவர் உணவு கேட்டு வந்திருந்தார். உடனே ஸ்ரீ அய்யாவாள், முன்னோர் வழிபாட்டுக்காக தயாரிக்கப்பட்ட பல விதமான உணவு வகைகளை அவருக்கு அளித்தார்.
பொதுவாக இதுபோன்ற சமயத்தில் வைதீக பிராமணர்கள் உணவருந்திய பிறகு, கடைசியாகத்தான் இல்லத்தில் உள்ளவர்கள் உணவருந்துவது வழக்கம். இருப்பினும், இந்த சாஸ்திர விதியை நன்கு அறிந்த ஸ்ரீ அய்யாவாள், பசி என்று ஒருவர் வீட்டுக்கு வந்தபோது உணவு கொடுக்காமல் இருப்பது மனிதநேயம் இல்லை எனக் கருதி, சிரார்த்த நடைமுறைகள் முடிவதற்கு முன்பாகவே முதியவருக்கு உணவளித்தார்.
இவரது செயலை வைதீக பிராமணர்கள் கண்டித்து, சிரார்த்த நடைமுறைகளை செய்ய மறுத்தனர். தன்னுடைய செயலுக்கு என்ன பிராயச்சித்தம் என்று ஸ்ரீ அய்யாவாள் கேட்டபோது, கங்கை நதியில் நீராடிவிட்டு வந்தால் மட்டுமே சாத்தியம் என்று வைதீக பிராமணர்கள் தெரிவித்தனர்.
இதைக் கேட்டு திகைத்த ஸ்ரீ அய்யாவாள், சிவபெருமானையும், கங்காதேவியையும் மனதார வேண்டி, ‘கங்காஷ்டகம்’ என்ற ஸ்லோகத்தைப்பாடினார். உடனே ஸ்ரீதர அய்யாவாளின் வீட்டு கிணற்றில் இருந்து புனித கங்கை நதி பொங்கி வழியத் தொடங்கி, சுற்றுப்புறம் முழுவதும் வெள்ளமாகப் பெருகி ஓடியது.
இவரது மகிமையை உணர்ந்த வைதீக பிராமணர்கள், மன்னிப்பு கேட்டு சிரார்த்த நடைமுறைகளை நடத்திக் கொடுத்தனர். ஸ்ரீதர அய்யாவாளின் தூய பக்தியின் மகிமையை உலகுக்கு உணர்த்த, சிவபெருமான் ஒரு திருவிளையாடலை திருவிசநல்லூரில் நடத்திக் காண்பித்தார்.
இந்த நிகழ்வைப் போற்றும் வண்ணம் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் அமாவாசை திதி தினத்தில் ‘கங்காகர்ஷண மஹோற்சவம்’ (முழுக்கு திருவிழா / சமத்துவ நீராடல்) தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அன்றைய தினம், உள்ளூர், வெளியூர் பக்தர்கள் அதிகாலை முதலே வரிசையாக நின்று ஸ்ரீ அய்யாவாளின் மடத்தின் கிணற்றில் புனித நீராடி இவரை பக்தியுடன் வணங்கிச் செல்வர். இந்த ஆண்டு, 40 ஆயிரம் பக்தர்கள் இவ்விடத்தில் புனித நீராடியதாகத் தெரிகிறது.