

தேவர்களையும் முனிவர்களையும் பூவுலகில் அனைத்து உயிர்களையும் துயரடைய வைக்கிறான் சூரபத்மன். அவனுடைய தம்பிகளுடன் சேர்ந்து, தேவேந்திரனையும் தோற்கடித்து, தேவலோகத்தையும் கைப்பற்றுகிறான். தேவர்களை, அசுரர்களின் ஏவல் அடிமைகளாக்குகிறான். அவனுடைய தவ வலிமையால் பிரம்மதேவர், மகாவிஷ்ணுவாலும் எதுவும் செய்யமுடியாத நிலை. ஆதியும் அந்தமும் இல்லாத சிவபெருமானோ தவத்தில் மூழ்கியிருக்கிறார். சங்கரனும் சங்கரியும் சேர வேண்டும். அதற்கு சிவபெருமானின் தவம் கலைய வேண்டும். இந்தப் பின்னணியில் தொடங்குகிறது ஷடாக்ஷரம் நாட்டிய நாடகம்.
மன்மதனின் உதவியால் மகேஸ்வரன் மகேஸ்வரி திருமணம் நடக்கிறது. ஆறுமுகனின் பிறப்பு, அவதார நோக்கம், அவரின் திருவிளையாடல்கள் என நாட்டிய நாடகம் பார்க்க வந்த ரசிகர்களை குளிரூட்டப்பட்ட பேருந்தில் உட்காரவைத்து, பழநி, சுவாமிமலை, திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், திருத்தணி, பழமுதிர்ச்சோலைக்கு பக்தி சுற்றுலா அழைத்துச் சென்ற அனுபவத்தை அளித்தது ஷடாக் ஷரம் நாட்டிய நாடகம்.
டிரினிட்டி ஆர்ட்ஸ் ஃபெஸ்டிவலின் நிறைவு நாளில் ஆர்.ஆர்.சபாவில், டாக்டர் ஷீலா உன்னிகிருஷ்ணனின் ஸ்ரீதேவி நிருத்யாலயாவில் நடனம் பயிலும் குழந்தைகள் பாலமுருகனாகவும், வாலிப முருகனாகவும், சிவபெருமானாகவும், நந்திதேவராகவும் பல வேடங்களில் தோன்றி தங்களின் நடனத் திறனை வெளிப்படுத்தினர். குறிப்பாக மயிலாகத் தோன்றிய (அஜனி, சனா) குழந்தைகளின் அசைவுகளும் காலப்பிரமாணத்துடன் கூடிய அடவுகளும் ரசிகர்களின் உள்ளத்தை ஒட்டுமொத்தமாகக் கொள்ளைகொண்டன!
“ஷடாக் ஷரம் என்னும் சம்ஸ்கிருத வார்த்தைக்கு ஆறு அட்சரங்கள் என்று அர்த்தம். ‘சரவணபவ’ என்னும் ஆறு எழுத்துகளின் சேர்க்கையைச் சொல்வதுதான் ஷடாக் ஷரம். அறுபடைவீடுகளை மையப்படுத்தி நாட்டிய நாடகத்தை உருவாக்கியுள்ளோம். இதில் இடம்பெற்றுள்ள பாடல்களை எழுதி இசையமைத்திருப்பவர் மதுரை ஆர். முரளிதரன். அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல்களும் இந்த நாட்டிய நாடகத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
பாடல்களை குல்தீப் எம். பாய் போன்ற பிரபலமான பலரும் பாடியிருக்கின்றனர். இந்த நாட்டிய நாடகத்தில் எங்களின் ஸ்ரீதேவி நிருத்யாலயாவைச் சேர்ந்த 60 குழந்தைகள் பல்வேறு கதாபாத்திரங்களில் தோன்றி நடனமாடியிருக்கின்றனர். அத்தனை பேருமே பெண் குழந்தைகள் என்பது இன்னொரு சிறப்பு” என்றார் டாக்டர் ஷீலா உன்னிகிருஷ்ணன் பெருமிதத்துடன்!