

தூத்துக்குடி மாவட்டம், செய்துங்க நல்லூரில் உள்ள ஸ்ரீ பதஞ்சலி வியாக்ரபாத ஈஸ்வரர் கோயில், செல்வம் அளித்திடும் குபேர ஸ்தலமாக போற்றப்படுகிறது. இத்தலத்தில் நடைபெறும் மடி நிரப்பும் விழாவில் எண்ணற்ற பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்வது வழக்கம்.
தாமிரபரணி பாய்ந்தோடி வளப்படுத்தும் நதிக்கரையில் அமைந்துள்ள தலமாக செய்துங்கநல்லூர் விளங்குகிறது. இப்பகுதி பல நூற்றாண்டுகளுக்கு முன்பு அடர்ந்த வனப்பகுதியாக செழித்துக் காணப்பட்டது. அப்போது முரப்பநாட்டை தலைநகரமாகக் கொண்டு பூதலவீர உதய மார்த்தாண்டன் என்ற மன்னர், நல்லாட்சி புரிந்து வந்தார். அவரது ஆட்சிக் காலத்தில் பல்வேறு படையெடுப்புகள் நடத்தி வெற்றி கண்டார். இதனால் அவருக்கு செய்துங்கன் என்ற பட்டப் பெயர் சூட்டப்பட்டது.
ஒருசமயம் வேட்டையாடுவதற்கு மன்னர் இந்த வனப்பகுதிக்கு வந்தார். அப்போது வனப்பகுதியின் உள்ளே கூழையாறு எனப்படும் சிற்றோடையில் நீர் சலசலத்து ஓடிக் கொண்டிருந்தது. அந்த ஆற்றுநீரில் மிதந்து வந்த சங்கிலிருந்து பஞ்சாட்சர மந்திரமான ஓம் நமசிவாய என்ற மந்திர ஒலி இடைவிடாமல் ஒலித்துக் கொண்டிருந்தது. அந்த நாத ஓசையில் மயங்கி நின்ற வேளையில், அருகில் இருந்த வெண்தாமரைப் பூக்கள் நிறைந்த குளத்தின் வடகரையில் சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து தவமுனிவர்கள் பதஞ்சலியும், வியாக்ரபாதரும் மனம் ஒன்றி சிவ பூஜை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது அசரீரி ஒன்று ஒலித்தது. அதன்படி, புண்ணிய பூமியான இந்த இடத்தில் சிவாலயம் ஒன்றை கட்டுவதற்கு மன்னருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பரம்பொருளின் திரு வுளப்படி இயற்கை வளம் செழிக்கும் இப்பகுதியில் கோயில் ஒன்றை கட்டி, தானங்கள் பல அளித்தார். பின்னர், தனது பெயரால் செய்துங்கநல்லூர் என்ற பெயரையும் அவ்வூருக்கு சூட்டினார். முன்னதாக, இப்பகுதி திருவரங்க சதுர்வேதி மங்கலம் என்ற பெயரால் அழைக்கப்பட்டு வந்தது. பதஞ்சலியும், வியாக்ரபாதரும் நித்ய பூஜை செய்து வணங்கி வந்ததால் இத்தல பரம்பொருளுக்கு ஸ்ரீ பதஞ்சலி, வியாக்ரபாத ஈஸ்வரர் என்ற காரணப் பெயர் உண்டானது.
சில காலம் இத்தலத்தில் தங்கியிருந்து விட்டு, முனிவர்கள் இருவரும் தில்லை அம்பலவாணரின் திருநடனக் காட்சியைக் காண தில்லைவனம் கிளம்பிச் சென்றனர். இவர்கள் முதலில் சிவபூஜை நடத்தி இத்தலத்தில் வழிபட்ட காரணத்தால் இவ்வூருக்கு ஆதி சிதம்பரம், தென்தில்லை என்ற வேறு பெயர்களும் உண்டு. இரு முனிவர்கள் வழிபட்ட பெருமை கொண்டதால், இன்றும் இங்கு அனைத்து விழாக்களும் தொடங்கப்படுவதற்கு முன்; இவர்களுக்கே முதல் பூஜை செய்யப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.
தாருகாவனத்தில் ஒரு சமயம் ஆதிசேஷன் மேல் அனந்தசயனம் கொண்டபடி மகாவிஷ்ணு ஈஸ்வரனின் ஆனந்த தாண்டவ காட்சியில் மனம் லயித்திருந்தார். அப்போது விஷ்ணுக்கு ஏற்பட்ட அளவில்லா ஆனந்தத்தால் ஆதிசேஷனுக்கு கூடுதலான அழுத்தம் உண்டானது. இந்த திடீர் மாற்றத்துக்கான காரணத்தை விஷ்ணுவிடமே ஆதிசேஷன் கேட்டு அறிந்து கொண்டது. உடனே தனக்கும் அந்த ஆனந்த பரவசக் காட்சி தரிசனப் பேறு கிட்டுவதற்கு வழி யாது என கேள்வி எழுப்பியது.
அதற்கு பதில் உரைத்த விஷ்ணு, பூலோகத்தில் மானிடராய் பிறந்தால் அக்காட்சியைக் காணலாம் என்றார். இந்த திருநடன காட்சியை காண்பதற்காகவே அத்ரி மகரிஷி, அனுசூயா தேவியின் இரண்டாம் மகனாக இம்மண்ணில் பிறந்தார் ஸ்ரீபதஞ்சலி. ஆதிசேஷனின் அவதாரமான இவரே யோக சூத்திரங்களின் தந்தை என அனைவராலும் போற்றப்படுகிறார். இவரைப் போலவே, மாசில்லா மலர்களைப் பறித்து சிவபூஜை செய்வதற்கென்றே புலிநகம், புலிக்கால்களை ஈசன் அருளால் பெற்றவர் வியாக்ரபாதர்.
இந்த இரு தவமுனிவர்களும் தாமிரபரணி நதி தீரத்தில் கூழையாற்றுப் பகுதியில் தங்கி சிவபூஜை செய்து வந்த வேளையில்தான் மன்னரை சந்தித்தனர். மன்னர் கட்டிய கோயிலில், தினமும் ஆறுகால பூஜை சிறப்பாக நடைபெறுகிறது. பௌர்ணமி தோறும் சிவகாமி அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெறும்.
குறிப்பாக, ஆடிப் பூர வளைகாப்பு விழாவின்போது சுமங்கலிப் பெண்கள் பெருமளவில் பங்கேற்பது வழக்கம். மழலை வரம் வேண்டுவோர் இங்கு நடைபெறும் மடிநிரப்பும் பூஜையில் நம்பிக்கையோடு கலந்து கொள்கின்றனர். வைகாசி விசாகத்தில் முருகனுக்கு பால்குட ஊர்வலம் வெகு பிரசித்தம். ஆனி மாதம் ஆஷாட நவராத்திரியை முன்னிட்டு வாராகி அம்மனுக்கு பத்து நாள் விழா நடைபெறும். கந்த சஷ்டி விழா ஏழு நாட்களும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
கார்த்திகை சோமவாரம்தோறும் 108 சங்காபிஷேக வழிபாடு நடைபெற்று, திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்படும். மார்கழியில் திருவாதிரைத் திருநாள் பத்துநாள் உற்சவமாக கொண்டாடப்படுகிறது. அது சமயம் தில்லைக் கூத்தர் திருவீதி எழுந்தருளும்போது திருச்செந்தூரை நினைவுபடுத்தும் விதமாக சிவப்பு சாத்தி, வெள்ளை சாத்தி, பச்சை சாத்தி என அம்பலவாணர் சர்வ அலங்காரத்தில் எழுந்தருள்வதைக் காணலாம். மகா சிவராத்திரி நான்கு கால பூஜைகளிலும் சுற்று வட்டார மக்கள் திரளாக பங்கேற்பர்.
திருவாதிரையில் பஞ்சமூர்த்தி புறப்பாடு, ஐப்பசியில் திருக்கல்யாணம், வெள்ளிக்கிழமை தோறும் கோபூஜை, அட்சய திருதியை தினத்தில் 27 பசுக்களை வைத்து பூஜை, தேய்பிறை அஷ்டமிதோறும் யாகம் வளர்த்து வழிபாடு, வைகாசி உத்திரட்டாதி நன்னாளில் வருஷாபிஷேகம், ஒவ்வொரு ஆங்கில மாதமும் கடைசி வியாழன் அன்று சிவனடியார்கள் திரளாகப் பங்கேற்கும் மாணிக்கவாசகப் பெருமான் தந்தருளிய திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி என ஆண்டு முழுவதும் பல்வேறு விழாக்கள் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.