

குழந்தை மீது தாய், தந்தைக்கு இருக்கும் இயல்பான அன்பைத் தாண்டி, அவ்வுலகுக்குத் தேவையானவற்றை அளிப்பவராகவும், தன்னைத் தானே உணர வைப்பவராகவும் குருநாதர் இருக்கிறார் என்பதை சாஸ்திரங்கள் உரைக்கின்றன. தத்துவார்த்த விஷயங்களை தெரிந்து கொள்வதற்காக, குரு சேவை அவசியமாகிறது.
இதனால்தான் நமக்கென்று ஒரு குரு பரம்பரையை ஏற்படுத்தி, அந்தந்த காலம் முதலே நம்முடைய மடம், நம்முடைய குருநாதர், நம்முடைய குலதெய்வம் என்று வழிவழியாக போற்றி வருகிறோம். பூர்வீகம், குலதெய்வம், குலகுரு ஆகிய மூவர் பற்றிய தகவல்களை அடுத்த தலைமுறைக்கு சொல்லி வைக்க வேண்டிய கடமை ஒவ்வொருவருக்கும் இருக்கிறது என்பதை ஆசிரியர் இந்த நூலில் தெளிவாக விளக்கியுள்ளார்.
குருநாதருடன் இருந்து, தான்கற்றதையும், தம் அனுபவங்களையும் நினைவிற்கொண்டு, பக்தியோடு பதிவு செய்துள்ளார். பெற்றோர் தங்களுக்கு சொல்லிக் கொடுத்த குலதெய்வம், குருநாதர் ஆகியோரை மனதில் இருந்தி, எந்நேரமும் வணங்கி, மந்திரங்களும் பாடல்களும் கற்று, நல்வழியில் சென்றதை ஆசிரியர் நினைவுகூர்கிறார்.
நடமாடும் தெய்வமாம், ஜகத்குருக்கள், ஒருவருக்கு தந்தையாக, தாயாக, குருநாதராக, பல நேரங்களில் நண்பர், மந்திரி, நல் ஆசான், மருத்துவர் என்று பல்வேறு பரிமாணங்களில் உடன் இருந்து காத்துவருகின்றனர். அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்பது போல ஜகத்குருக்களின் அருளை எழுத, அவர்களின் அருளும், குலதெய்வத்தின் கருணையும், பெற்றொரின் ஆசியும் காரணம் என்று நூலை நிறைவுசெய்கிறார் ஆசிரியர்.
மாதா + பிதா + தெய்வம் = குரு;
முனைவர் தென்காசி கணேசன்; குவிகம் பதிப்பகம்;
99 சௌபாக்யா காலனி, அண்ணா மெயின் ரோடு, கே.கே.நகர், சென்னை – 78;
தொடர்புக்கு: 9442525191, 8939604745.
சரணாகதி உணர்த்தும் பாசுரங்கள்: எங்கும் வியாபித்து நீக்கமற நிறைந்திருப்பவனாக விளங்கும் இறைவன், உயிர்களிடம் அபரிமிதமான அருள் உள்ளம் கொண்டவன். உலக உயிர்கள், (ஜீவாத்மா) இவ்வுலக வாழ்வின் நிலையாமையை உணர்ந்து, நிலைத்த பொருளை (பரமாத்மா) அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில், இறைவன், தன்னுடைய பரிவாரங்களாகிய ஆதிசேஷன், கருடன், சேனை, சங்கு, சக்கரம் போன்றவற்றை, இவ்வுலகில் ஆழ்வார்களாக, மாமனிதர்களாக, காவிரி, பாலாறு, வைகை, தாமிரபரணி நதி தீரங்களில் அவதரிக்கச் செய்தான்.
இறைவன் மீது கொண்ட பக்தியால், அவன் திருநாமங்களைச் சொல்லுவதால், அவனைத் தஞ்சம் அடையலாம் என்று ஆழ்வார்கள் தங்கள் பாசுரங்கள் மூலம் தெரிவிக்கின்றனர். அவனை சரண் புகுவதால், அவனது பேரருளைப் பெற்று, இம்மையில் இன்பத்தையும், மறுமையில் மோட்சத்தையும் அடைய முடியும் என்பதை நிலைநாட்டினர். மேலும் எம்பெருமானின் பெருமைகளை உணர்ந்து, அவன் உறைந்துள்ள திவ்ய தேசங்களை சேவித்து, அங்கு அவனை மங்களாசாசனம் செய்து பாடி, முக்தி அடையும் வழிகளை பக்தர்களுக்கு எடுத்துக் காட்டினர்.
கோயில்களில் முக்கிய திருவிழா சமயங்களில் வேத பாராயணத்துடன் தமிழ் மறையாம் நாலாயிரம் பாசுரங்களையும் பாடி வருவது காலம் காலமாக நடைபெற்று வருகிறது. ஆழ்வார்கள் அருளிச் செய்த நாலாயிர திவ்ய பிரபந்தங்களை, இந்த அவசர யுகத்தில் பலருக்கும் நாள்தோறும் சேவிக்க இயலவில்லை என்பதை கருத்தில் கொண்டு, தினம் ஒரு பாசுரம் வீதம், ஆண்டு முழுவதும் 365 பாசுரங்களை படித்து பயன்பெறும் விதத்தில், ஆசிரியர் முக்கியமான பாசுரங்களைத் தேர்ந்தெடுத்து, அதற்கு தெளிவுரையும் வழங்கியுள்ளார்.
நாளும் ஒரு நாலாயிரம்;
மாருதிதாசன்
(மா.சீதாராமன்);
நர்மதா பதிப்பகம்;
10, நானா தெரு, பாண்டி பஜார் அருகில், தி.நகர், சென்னை 600017; தொடர்புக்கு:
9840226661, 9840932566.