இதிகாசங்கள் உணர்த்தும் தர்மம்

இதிகாசங்கள் உணர்த்தும் தர்மம்
Updated on
3 min read

இந்து மதத்தின் இரு பெரும் இதிகாசங்களான ராமாயணம், மகாபாரதத்தில் கூறப்பட்டிருக்கும் தர்மங்களும், நியாயங்களும் வேறு எந்த நுால்களிலும் சொல்லப்பட்டதில்லை. மனித வாழ்வின் அடிப்படையே தர்மம்தான் என்று இரு இதிகாசங்களும் உணர்த்துகின்றன.

இதிகாச, புராணங்களில் வரும் கிளைக் கதைகளும் நீதியையும் தர்மத்தையும் உணர்த்துகின்றன. தீயவற்றை அழித்து தர்மத்தை நிலைநாட்டும் வரைதான் இதிகாச, புராணங்களை மக்கள் அறிந்திருப்பர். அதற்குப் பிறகு நடைபெற்ற சம்பவங்கள் பற்றி தெரிந்து கொள்ள, மக்கள் அதிக ஆர்வம் காட்டுவதில்லை.

மகாபாரதப் போருக்குப் பிறகு பாண்டவர்களின் நிலை, ராவணனை அழித்த பிறகு, ஸ்ரீ ராமபிரானின் நிலை உள்ளிட்டவை தொடர்பாக மக்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அப்படி ஓர் அறியப்படாத சம்பவம்தான் ஸ்ரீ கிருஷ்ணரின் மறைவு.

காந்தாரியின் சாபம்: குருஷேத்திரப் போர் நிறைவு பெற்றது. அதில் கௌரவர்கள் அனைவரும் மாய்ந்தனர். புத்திரர்களை இழந்ததால், அன்னை காந்தாரி, மிகவும் மனம் உடைந்து போயிருந்தாள். காந்தாரிக்கு ஆறுதல் கூற ஸ்ரீ கிருஷ்ணர் சென்றார். கிருஷ்ணர் வந்திருப்பதை அறிந்த காந்தாரி, பொங்கி எழுந்தாள், கிருஷ்ணர் பேசத் தொடங்குவதற்கு முன்னர், காந்தாரியே பேசினாள்.

அந்தப் பேச்சு, பெருங்கோபத்தில் உருவெடுத்த சாபமாகவே இருந்தது. ‘கிருஷ்ணா.. மகாபாரத யுத்தம் வருவதற்கு நீயே காரணம். என் உற்றார், உறவினர் அனைவரும் அழிந்து போக நீயே காரணம். அதேபோல் உன்னாலேயே உன் உற்றார், உறவினர் அனைவரும் அழிந்து போவர்.

இன்னும் 36 ஆண்டுகளுக்குப் பிறகு உனக்கு என்று யாரும் இருக்க மாட்டார்கள். உனது மரணமும் இழிவான முறையில் அமையும்’ என்று காந்தாரி சபித்தாள்.காந்தாரியின் சொல் கேட்டு ஸ்ரீ கிருஷ்ணர் நிதானம் இழக்கவில்லை. புன்முறுவலுடன் மிருதுவான குரலில், “தாங்கள் என் செயலை மிகவும் சுலபமாக்கி விட்டீர்கள். உங்கள் மீது எனக்கு எந்த வருத்தமும் இல்லை. யாதவர்கள் எப்போது அழிவார்கள் என்பது எனக்கு ஏற்கெனவே தெரியும். ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு மடிவார்கள் என்பது விதி. அதுதான் தங்கள் நாவில் இருந்து சாபமாக வெளிப்பட்டுள்ளது” என்றார்.

மகாபாரதப் போர் முடிந்து 36 ஆண்டுகள் ஆனது. ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவைச் சேர்ந்தவர்கள் என்ற எண்ணம், கிருஷ்ணரின் விருஷ்ணி வம்சத்தினருக்கு ஏற்பட்டது. தாங்களே உலகில் மிகவும் உயர்ந்தவர்கள் என்ற செருக்கு ஏற்பட்டது. பலராமரையும், கிருஷ்ணரையும் தவிர மற்றவர்களை அவர்கள் அவமானப்படுத்தினர்.

துவாரகைக்கு வருகை புரிந்த விஸ்வாமித்திரர், துர்வாசர், வசிஷ்டர், நாரதர் முதலான ரிஷிகளும் அவமானப் படுத்தப்பட்டனர். கிருஷ்ணரின் மகன் சம்பாவுக்கு கர்ப்பிணி வேடமிட்டு, அவருக்கு என்ன குழந்தை பிறக்கும்என்று கேட்டனர். இதைக் கண்டு ரிஷிகள் கோபமடைந்தனர்.

‘இவன் ஓர் இரும்பு உலக்கையைப் பெற்றெடுப்பான். அந்த உலக்கையால் கிருஷ்ணரையும், பலராமரையும் தவிர விருஷ்ணி குலம் முழுவதும் இல்லாமல் போகும்’ என்று சாபமிட்டனர். விருஷ்ணிகள் ஓடோடிச் சென்று பலராமர் மற்றும் கிருஷ்ணரிடம் சாபம் குறித்து தெரிவித்தனர். இரும்புத் துண்டை தூள் தூளாக்கி கடலில் போடுமாறு இருவரும் கூறியதும், தங்களுக்கு வந்த ஆபத்து நீங்கியதாக விருஷ்ணிகள் நினைத்தனர்.

ஆனால் கடலுக்குள் வீசப்பட்ட இரும்புத் துகள்கள் அனைத்தும் நாணல்களாக வளர்ந்து, உலக்கைகளாக மாறின. விருஷ்ணிகள் அவற்றை எடுத்து, ஒருவரையொருவர் அடித்துக் கொண்டு மாய்ந்தனர். இந்த தகராறில் கிருஷ்ணரின் மகன்கள், பேரன்கள், சகோதரர்கள் மாண்டு போயினர். காலத்தின் போக்கை அமைதியாக ஸ்ரீ கிருஷ்ணர் பார்த்துக் கொண்டிருந்தார்.

அன்று பகவத் கீதையை அர்ஜுனனுக்கு உபதேசித்த ஸ்ரீ கிருஷ்ணர், தற்போது எதைக் கண்டும் கலங்கவில்லை. கண்ணெதிரே தன் மக்கள் உயிரிழந்து கிடப்பதைப் பார்த்த பலராமர், மிகவும் வருந்திய நிலையில், ‘இனி ஒரு கணமும் உயிர் தரியேன்’ என்று அக்னியில் விழுந்து தன்னை மாய்த்துக் கொண்டார்.

தானும் இந்த உலகைவிட்டு விண்ணுலகை அடையும் நேரம் வந்துவிட்டதை உணர்ந்தார் ஸ்ரீ கிருஷ்ணர். துவாரகையை ஆட்சி புரிந்த கண்ணன் தெய்வமாக இருந்தாலும், பூவுலகில் மானிடராக அவதரித்ததால் முக்தி (மரணம்) என்பதை தவிர்க்க இயலாது.

கிருஷ்ணரின் பாதம் தவிர்த்து ஏனைய இடங்களில் எந்த ஆயுதத்தாலும் பாதிப்பு ஏற்படாது என்ற வரத்தை கிருஷ்ணருக்கு துர்வாச முனிவர் அளித்திருந்தார். ஹிரண்ய நதிக்கரையில், அடர்ந்த புதர்கள் நிறைந்த குரா மரத்தடியில் கால்களை நீட்டி ஸ்ரீ கிருஷ்ணர் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்.

அப்போது ஜரா என்ற வேடன், காட்டு முயல் என்று நினைத்து, கிருஷ்ணரின் வலது பாதத்தில் அம்பை எய்தினான். பின்னர் தன் தவறை உணர்ந்து, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஸ்ரீ கிருஷ்ணரிடம் மன்னிப்பு கோரினான். அப்போது வேடனை நோக்கி ஸ்ரீ கிருஷ்ணர், “வேடனே.. வருந்தவேண்டாம்.

நாம் செய்த பாவங்கள்நம்மை பின்தொடரும். திரேதா யுகத்தில் நான் ராமராக அவதரித்த போது, வாலியை மறைந்திருந்து அம்பு எய்தி கொன்றேன். அப்போது, ‘இதே நிலைமை உனக்கு வரும். எத்தனை காலமானாலும், உன்னை மறைந்திருந்து வீழ்த்துவேன்’ என்று வேதனையுடன் வாலி சாபமிட்டான். அந்த வாலிதான் உன் வடிவில் இந்த யுகத்தில் வேடனாகப் பிறந்து என்னை வீழ்த்தியுள்ளான்.

அன்னை காந்தாரியும் என் மரணம் எப்படி அமையும் என்று அப்போதே சொன்னார்” என்று கூறினார். முனிவர்கள் தொழ, உலகெங்கும் ஜோதி பரவ, ஆகாயம் நோக்கிச் சென்றுதம் உலகை அடைந்தார் ஸ்ரீ கிருஷ்ணர். இந்திரன், அஸ்வினி தேவர்கள், ருத்ரர்கள், வசுக்கள், சித்தர்கள், முனிவர்கள் உள்ளிட்டோர் ஸ்ரீ கிருஷ்ணரின் தாள் பணிந்து அவரை வரவேற்றனர்.

- shaharahsubburaju@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in