

கும்பகோணம் அருகில் உள்ள நாச்சியார்கோவிலில் கல்கருட வழிபாடு மிகவும் சிறப்பு பெற்றதாகக் கூறப்படுகிறது. பாம்புகளில் ஆதிசேஷனுடன் நட்பு கொண்ட கல்கருடனை நினைத்தால் விஷ உயிரினங்களால் ஆபத்து ஏதும் ஏற்படாது என்பது ஐதீகம். கும்பகோணம் அருகில் உள்ள நாச்சியார் கோவிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீநிவாச பெருமாள், கிழக்கு முகமாக நின்றகோலத்தில் அருள்பாலிக்கிறார். அவரது வலப்புறத்தில் தாயார், வஞ்சுளவல்லி என்ற திருநாமத்துடன் எழுந்தருளியுள்ளார். இத்தலத்தில் உள்ள கல் கருட பகவானை வழிபடுவது மிகவும் சிறந்தது.
கோயில் கருவறைக்கு கீழே மகாமண்டபத்தில் வடபால் தெற்கு நோக்கியுள்ள சந்நிதியில் பட்சிராஜன், பெரிய திருவடி, வைநதேயன், புள்ளரசர் என்றெல்லாம் அழைக்கப்படும் கருடன் எழுந்தருளியுள்ளார். சாளக்கிராமச் சிலை வடிவில், வாகன அமைப்பில் நீள் சிறகும், நீள் முடியும், நீண்டு வளர்ந்த திருமேனியும் கொண்டு பெருந்தோளுடன் மிகவும் மிடுக்குடன் வீரத்துடன், எடுப்புடன் கூடிய தோற்றத்துடன் கல் கருடன் எழுந்தருளியுள்ளார்.
இவர் எழுந்தருளியுள்ள இடம் 10 அடி சதுரம் உள்ளது. இவர் வாகன மண்டபத்துக்குப் புறப்பாடு கண்டருளும் காலத்தில் ஸ்ரீ பாதம் தாங்குவோர் மொத்தம் நால்வராகவும் வாரைகள் சேர்த்த பின் மூலை ஒன்றுக்கு நால்வராகவும், (16 பேர்) பின் எண்மர், பதின்மார்களாகவும், படிகளில் இறங்கியருளும்போது கணக்கற்றவர்களும் கூடிக் கொண்டே செல்வதைக் காண கண்கோடி வேண்டும். இத்தலத்தில் கருடன் எழுந்தருளியது பற்றி மற்றோரு வாய்வழிக் கதையும் கூறப்படுகிறது.
ஒரு சிற்பி ஆகம முறைப்படி கருட வடிவம் ஒன்றை செதுக்கி வந்தார். முடிவில் இரு பக்கங்களிலும் சிறகுகளை செதுக்கி பிராணப் பிரதிஷ்டை செய்தார். அப்பொழுது திடீரென்று உயிர் பெற்ற கருடன் வானத்தில் எழும்பி பறந்ததைக் கண்டு அச்சமுற்ற சிற்பி உடனே தன் கையில் இருந்த கல் உளியை எடுத்துக் கருடன் மேல் வீசி எறிந்தார்.
அதனால் அக்கருடன் மூக்கில் அடிபட்டு அதன் பின்பு கலியுக வரதராய், இறங்கி வந்து அமர்ந்தது நாச்சியார் எனும் இத்தலமே ஆகும் என்பது புராண வரலாறு. இவர் காசியபருக்கும் வினதைக்கும் இரண்டாவது குமாரராக அவதரித்தார். இவரது பலத்தையும் பக்தியையும் கண்டு திருமால் இவர் வேண்டுகோளின் படியே இவரை வாகனமாகவும், கொடியின் சின்னமாகவும் ஏற்றுக் கொண்டார். இவரை பற்றிய கருட பஞ்சாஷரி மந்திரம் மிகவும் சிறந்தது.
இவரது பெயர் கொண்ட “கருடோத்காரம்” என்ற பச்சை மரகதம் மிகவும் சிறப்புடையது. அமுதம் கொண்டு வந்து தாயின் அடிமைத்தனத்தை நீக்கியவர். வைகுந்தத்தில் உள்ள அணுக்க தொண்டர்களான நித்திய சூரிகளில் இரண்டாமவர். முற்காலத்தில் நகர அமைப்பில் மக்களுக்கு விஷ பீடை உண்டாகாமல் இருக்க கருடன் பறப்பது போல் நகர் அமைப்பதுண்டு. அதற்கு எடுத்துக்காட்டாக முற்காலத்திய தஞ்சை நகரம் அமைக்கப்பட்டு ‘கருடபுரி’ என்று அழைக்கப்பட்டது.
கல்கருடனுக்கு ஆடி மாதம் சுக்கில பஞ்சமியில் ‘அமுத கலசம்’ என்ற கொழுக்கட்டைப் பணியாரம் செய்து சமர்ப்பித்தால் நினைத்த காரியம் உடனே கை கூடும் என்பது ஐதீகம். இத்தலத்தில் வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் கல் கருடன் தரிசனம் மிகவும் புகழ்பெற்றது. இவரது திருமேனியில் உள்ள சர்ப்பங்களில், பட்டு முதலிய சித்திர வஸ்திரங்களை சமர்ப்பிப்போருக்கு எண்ணிய நலன்கள் கைகூடும். இவரது திருநட்சத்திரம் சுவாதியானதால் அன்று அர்ச்சனை செய்வது மிகவும் உகந்தது.
மார்கழி பெருந் திருவிழாவின் 4-ம் திருநாள் மற்றும் பங்குனிப் பெருந் திருவிழாவின் 4-ம் திருநாளில், கல்கருடன் ஸ்ரீநிவாச பெருமாளுடன் எழுந்தருள்வார். இத்தலத்தில் பெருமாள், தாயார், கல்கருடனை தரிசித்தால் மறு பிறவி இல்லை என்பது ஐதீகம்.
- packiyasri201@gmail.com