

உலகில் ஒப்பற்ற வழிகாட்டியாக விளங்கும் மகாபாரதம் மிகச் சுவையான, விறுவிறுப்பான கதை, சம்பவக் கோர்வைகளையும், மனிதன் மிக உயர்ந்த வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டிய தர்ம உபதேசங்களையும் கொண்டுள்ளது. மகாபாரதம் எனும் நூல் ஒரு லட்சத்து இருபத்தையாயிரம் சுலோகங்களைக் கொண்டது.
இதில் கூறப்படாத விஷயங்களே இல்லை எனலாம். நியாயமான கோபத்துடன் குடும்பம், மக்கள், அக்கம் பக்கத்தினர், சமூகம், தேசத்தை பாதுகாக்க வேண்டும், சிந்தனையற்ற அவமதிப்பு, சிறு சிறு சண்டைகள் தவிர்க்கப்பட வேண்டும். கடமையைச் செய்; பலனை எதிர்பார்க்க வேண்டாம். ஆணவத்தை கைவிட வேண்டும். முடிவைப் பற்றிய எண்ணம், கடமையை செய்வதில் இருக்கும் நம்கவனத்தை பாதிக்கும் போன்ற நற்சிந்தனைகளை போதிக்கும் நல் ஆசானாக மகாபாரதம் விளங்குகிறது.
மகாபாரதத்தை முழுவதையும் வாசித்து, அதில் உள்ள நற்கருத்துகளை அறிந்து கொள்வதற்கு நமக்கு மிகவும் பொறுமை வேண்டும். அந்த சிரமத்தை நமக்கு அளிக்காமல், மிகவும் எளிய உரையில், விரிவாக, விளக்கமாக மூத்த வழக்கறிஞர் முனைவர் டி.எஸ்.ராமஸ்வாமி இந்த நூலை எழுதியுள்ளார். ஸ்ரீ வேத வியாசர் அருளிய மகாபாரதம் எளிய சுருக்கம், தூது சென்றவன் ஏற்றம், சோக நிவர்த்தி சாஸ்திரம், மகாபாரதமும் இந்திய அரசியல் சட்டமும் அடிப்படைக் கடமைகள் என்று 4 பகுதிகளாக இந்நூல் பிரிக்கப்பட்டுள்ளது. வேத வியாசர் அருளிய மகாபாரதத்தின் கதை போக்கும், நடையும் கொஞ்சமும் மாறாமல் அப்படியே ஒவ்வொரு வாக்கியங்களாக செதுக்கி இந்நூலை உருவாக்கியுள்ளார் ஆசிரியர்.
ஆன்மிக விஷயங்கள், மகாபாரதம் என பெயர் காரணம், கருடனின் சிறப்பு மற்றும் பெருமை, கர்ணன் சிறப்பு, திரௌபதியின் துகிலுரி சம்பவம், கர்ணன் மரணம் என அனைத்தும் இந்த நூலில் சிறப்பாக விளக்கப்பட்டுள்ளன. நீண்ட காலமாக வழக்கறிஞராக பணி புரிந்த காரணத்தால், அரசியலமைப்பு சட்டம் என்னும் கண்ணாடி வாயிலாக மகாபாரதத்தை அலசியுள்ளார். அடிப்படை கடமைகள் என்ற கோட்பாடு மகாபாரதத்தில் எவ்வாறு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் எடுத்துச் சொல்லப்பட்டது என்பதோடு நில்லாமல் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் சேர்க்கப்பட வேண்டிய அடிப்படை கடமைகள், எவைஎன்பதையும் காரணங்களுடன் கோடிட்டுள்ளார்.
ஒவ்வொரு நாளும் சோகத்துக்கான ஆயிரம் காரணங்களும், பயத்துக்கான நூறு காரணங்களும் மூடனை அடையும். பண்டிதனை அடையாது. ஞானத்தால் மனோதத்துவத்தை விவரிக்க வேண்டும் என்று, மகாபாரதம் முழுவதும் பல உயர்ந்த சிந்தனைகள், தர்ம உபதேசம் நிறைந்த உடையாடல்கள் உள்ளன. அவற்றில் பல, அக்காலத்துக்கும், இக்காலத்துக்கும் பொருத்தமானவை.
அவை, நம் விருப்பங்களை கட்டுக்குள் வைத்து, அறியாமையை போக்க உதவும். சட்ட விதிகள் என்ற முறையில் இருந்து தர்ம விதிகள் என்ற கோட்பாட்டுக்கு சமூகம் மாறும்போது நல்லிணக்கமும், அமைதியும் தீதில்லா வளர்ச்சியும் ஏற்படும் என்ற ஓர் உன்னத கருத்தை இந்த நூல் மூலம் ஆசிரியர் நமக்கு வலியுறுத்தியுள்ளார். எவ்வளவுதான் நூல்கள் வந்திருந்தாலும், இந்த பொக்கிஷம் வானத்தில் ஒளி வீசும் மாபெரும் சூரியனைப் போல் ஒளி வீசிக் கொண்டு நம்மை மேம்படுத்தும் வழிகாட்டியாகத் திகழ்கிறது.
மகாபாரதம் எளிய சுருக்கம்;
முனைவர் டி.எஸ்.ராமஸ்வாமி;
ஆர்.என்.ஆர் பிரிண்டர்ஸ் & பப்ளிஷர்ஸ்;
தொடர்புக்கு: 9444453270, 9789017327.