

இறைமகனான யேசு கிறிஸ்து எல்லாருக்குமான அன்பை வெளிப்படுத்தியவர். இறை நம்பிக்கையை மக்களின் மனத்தில் வேரூன்றச் செய்யும் அவரின் மலைப் பிரசங்கங்கள் மனதை உருக்கக் கூடியவை மட்டுமல்ல; ஆழமான ஆன்மிக கருத்துகளை மிக எளிமையாகக் கற்பிக்கக் கூடியதுமாகும். அதில் உயர்ந்த ஒழுக்கநெறிகளை அவர் போதித்தார். அதற்காக அவர் உவமைக் கதைகளை அப்போது பயன்படுத்தினார். மேலும் ‘ஜபமேஜெயம்’ அதுவே இறைவனுடன் நம்ம இணைக்கும் வெற்றியின் திறவுகோல் என்பதை பிரசங்கங்களின்போது திரும்பத் திரும்ப ஜெபம் குறித்துப் பேசினார்.
அவரது வழியில் இறைப் பணியைத் தொடர்ந்த இறை அருளாளர்களின் மனத்தில் பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் ஜபத்தின் பெருமையை மக்களிடம் கொண்டுசெல்வதற்கு உலகம் முழுவதும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் பிரார்த்தனை செய்வதற்கான முன்முயற்சியை எடுத்தனர்.
ஆனால், இந்த முயற்சி கடந்த 1904-ம் ஆண்டு முதல் ‘உலகப் பிரார்த்தனை வாரம்’ என செயல்வடிவம் பெற்றது. அது முதல் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஒரு தலைப்பின்கீழ் ‘உலகப் பிரார்த்தனை வாரம்’ ஏறக்குறைய 120 நாடுகளில் நவம்பர் மாதத்தில் கடைபிடிக்கப்படுகிறது.
சென்னை ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றத்தில், ஒய்.எம்.சி.ஏவும் ஒய்.டபிள்யூ.சி.ஏவும் இணைந்து ‘உலகப் பிரார்த்தனை வாரத்தை’ அண்மையில் ‘பள்ளத்தாக்குகள் ஊடாக நகரும் பற்றுறுதி’ என்னும் கருப்பொருளில் நிகழ்த்தின. ஒய்.எம்.சி.ஏவின் கிளைத் தலைவர் சே.சு. அன்பு, ‘நீர், நிலம், நெருப்பு, காற்று ஊடாக நகரும் பற்றுறுதி’ என்னும் தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்.
நிகழ்ச்சிக்கு தலைமையேற்ற தூய மேரி தேவாலயம் - தென்னிந்திய திருச்சபையின் ஆயர் ஆர்.எல். ரிச்சர்ட்சன் தன்னுடைய தலைமையுரையில், “மத்யேயு 5 முதல் 7 அத்தியாயங்கள் வரை மூன்று அத்தியாயங்கள் யேசு கிறிஸ்துவின் முதல் மலைப் பிரசங்கத்தின் மாண்பை விளக்குபவையாக உள்ளன. மலைப்பிரசங்கம் செய்த யேசு, அங்கேயே தங்கிவிடவில்லை. மாறாக, பள்ளத்தாக்குகளிலும் சமவெளிகளிலும் பயணப்பட்டு எல்லோருக்கும் நற்செய்தி அளித்தார்.
நிலப்பரப்பில் மலைகள், சமவெளிகள், பள்ளத்தாக்குகள் என அனைத்தும் உள்ளன. நம் வாழ்க்கையிலும் உயர்வு, தாழ்வு நிலைகள் ஏற்படும். சிரிப்பதற்கு ஒரு காரணம் உண்டு என்றால், அழுவதற்கும் ஒரு காரணம் உண்டு என்பர். அதை நாம் அனுபவித்துதான் ஆகவேண்டும். அந்த வகையில், பள்ளத்தாக்குகள் என்பதும் இறைவன் நமக்கு அளிக்கும் ஓர் அனுபவம்தான். இதுவும் ஒரு விசுவாசப் பயணம்தான்” என்றார் நெகிழ்ச்சியுடன்.