

யோகம், தியானம், தவம், ஞானம் என்பன கடவுளை அறியும் நெறிகள் ஆகும். நமக்கு தவத்தைக் கூட்டி, இறை அனுபூதியை பெறுவதற்கு அஸ்திவாரமாக இருப்பது சரணாகதியுடன் கூடிய மெய்பக்தியே என்பதை நாம் மறத்தல் கூடாது.
‘இறைவன் உலகைப் படைத்து, அதில் உயிர்களையும் படைத்து, அவ்வுயிர்கள் உயிர் வாழத் தேவையான அனைத்தையும் படைத்தார். அவர் எல்லோருக்கும் தாய். அவர் நம்மிடம் எதையும் எதிர்பார்க்கவில்லை. அவரை நாம் தினமும் வழிபட்டு, நன்றியுடன் நினைக்க வேண்டும்’ என்று துறவி ஒருவர் ஆன்மிக சொற்பொழிவு செய்து கொண்டிருந்தார். ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளிக்கு இந்த சொற்பொழிவைக் கேட்டு மனம் உருகியது. கூட்டம் முடிந்ததும் துறவியை அணுகினான்.
“சாமி, நான் வழிபாடு எதுவும் செய்வதில்லை. எனக்கு அதற்கு நேரமேயில்லை. எளிய மக்கள், ஒரு ஜோடி செருப்பு மட்டுமே வைத்திருப்பவர்கள் - இவர்கள் தான் எனது வாடிக்கையாளர்கள். குவியும் செருப்புகளை தைக்கவே எனக்கு நேரம் போதவில்லை. நான் என்ன செய்யமுடியும்?” என்று துறவியிடம் தனது வருத்தத்தை தெரிவித்தான்.
“இவ்வளவு நாட்கள் என்ன செய்து கொண்டிருந்தாய்? என்று துறவி கேட்க, அதற்கு அந்தத் தொழிலாளி தயக்கத்துடன், ‘இறை வழிபாடு என்று மனதுக்குள் எப்போதாவது செய்வேன். கோயிலுக்கு போகிறவர்களை பார்த்து என்னால் இப்படி போக முடியவில்லையே என்று பல நாட்கள் ஏக்கத்துடன் பெருமூச்சு விடுவேன்’ என்றான்.
சிரித்த துறவி, ‘‘நான் மட்டும் கடவுளாக இருந்தால் மற்ற எல்லா வழிபாடுகளையும் விட உன் பெருமூச்சைத்தான் சிறந்த வழிபாடாக எண்ணி ஏற்றுக் கொள்வேன்’’ என்றார். கடவுளின் முடிவும் இப்படித்தான் இருக்கும் என்று அந்த சாமான்ய மனிதனிடம் சொல்லாமல் சொல்லி சென்றார். நோக்கம் ஒன்றே ஆனாலும் பக்தர்களில் பலவகை உண்டு. விரதம், உபவாசம் என்று வருத்திக் கொள்ளும் பக்தர்கள் பலர். பூஜை, பஜனை, தானம், தர்மம் என்று செயல்படும் பக்தர்கள் பலர்.
இப்படி பலவகையான பக்தர்கள் மத்தியில்,ஒவ்வொரு கணமும், உள்ளும், புறமும் இறைவனை பிரார்த்தனை செய்தவன் பிரகலாதன். அசுரர்களின் மன்னனான இரண்ய கசிபு பிரம்மதேவரை நோக்கி தவம் செய்கிறான். அவன் தவத்துக்கு இடையூறு செய்ய இந்திரன் நிறைமாதக் கர்ப்பிணியான இரண்யனின் மனைவியைக் கடத்திச் செல்ல, இது தவறான செயல் என்றுணர்ந்த நாரதர் வழியிலேயே தடுத்து இரணியனின் மனைவியை மீட்டுத் தனது ஆசிரமத்தில் தங்க வைக்கிறார்.
இரண்யன் வரம் பெறப் போவது உறுதி. தேவர்கள் கஷ்டப்படப் போவதும் உறுதி என்றறிந்த நாரதர், இரண்யனின் மனைவிக்கு மகாவிஷ்ணுவின் பெருமைகளை விவரிக்கிறார். ஆனால் இரண்யனின் மனைவியோ களைப்பில் தூங்கி விடுகிறார். அவர் கருவி லிருந்த சிசுவோ தூ ங்காமல், ‘‘உம்..உம்’’ என்று ‘‘உம்’’ கொட்டி அவர் சொன்னவற்றையெல்லாம் கேட்கிறது.
இப்படிக் கருவிலேயே நாரதரால் ஹரிபக்தி ஊட்டப்பட்ட பிரகலாதன் உள்ளும், புறமும் நாராயணனின் நினப்பாகவே மாறிவிட்டான். பக்தி என்னும் வழிபாடு அவனுக்கு மூச்சாகவே மாறிவிட்டது. அவன் மூச்சை உள்ளே இழுக்கும் போதும்,வெளியே விடும் போதும் அவன் மனமும் அதனுடன் இணைந்து நாராயணா..நாராயணா.. என்றே ஜெபிக்கும்.
சாகா வரம் பெற்றிருந்த இரண்யன், தான்தான் கடவுள் என்று அனைவரையும் தன்னையே வணங்க கட்டாயப்படுத்த, மகன் பிரகலாதனோ ஸ்ரீமன் நாராயணனே கடவுள் என்று கூறி அவரையே சரணடைந்து இருந்தான். தந்தையே மகனைக் கொல்ல பலவழிகளில் முயல, ஸ்ரீமன் நாராயணன் இரண்யனை வதம் செய்து, தனது பக்தன் பிரகலாதனை காத்தருளினார்.
பிரகலாதன் மூவுலகையும் ஆண்டு, தனது மரணத்துக்கு பிறகு வைகுண்டத்தை அடைந்தான். “எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். எப்படி எண்ணுகிறாயோ அப்படியே காண்கிறாய்" -இது "பிரகலாத உபாசனை" என்றே சொல்லப்படுகிறது. இத்தகைய உபாசனை ஒன்றே பேரின்பத்தை அளிக்கும் என்று வியாசர், சங்கரர், மத்வர் போன்ற பெரும் முனிவர்கள் கூறுகின்றனர்.
கர்மயோகம் வழி செல்பவர்கள், கர்மவினைகள் நீங்கிய பின்னரே இறைவனை அடைய முடியும். ஞான யோகத்தின் வழி செல்பவர்களும் ஞானநிலை கடந்த பிறகே இறைவனை அடைய முடியும். பக்தி யோகத்தில் நிற்பவரை இறைவனே நேரில் வந்து அழைத்து செல்கிறார். திருப்பாவை அருளிய ஆண்டாளும், திருவெம்பாவை பாடிய மாணிக்கவாசகரும், இன்னும் இவர்களைப் போன்ற இறை பக்தர்களுமே பக்தி யோகத்தில் நிற்பவரை இறைவனே நேரில் வந்து அழைத்து செல்கிறார் என்பதற்கு நல்ல உதாரணம்.
இறைவன்பால் கொண்ட உயர் பக்தியால் தன்காலடி படக்கூடாது என்று தலையாலேயே கைலாயத்தில் நடந்து வருகிறார் காரைக்கால் அம்மையார். ‘‘அப்பா’’ என்று இறைவனை அழைக்கிறார். இறைவனோ அதற்கும் ஒருபடி முன்னே வந்து ‘‘அம்மா’’ என்று அவரை அழைக்கிறார். இறைவனின் திருவடிகளை உண்மையான அன்பு, உறுதியான நம்பிக்கையுடன் பற்றிக் கொண்டால், வாழ்க்கை நம்மை வருத்தி, சோதனைகளை கொடுத்து வீழ்த்தினாலும் கூட உயிர்த்தெழும் வாய்ப்புண்டு.
அனுபவம் மூலமாகத்தான் இறைவனை நாம் உணர முடியும். உலகியல் இன்ப துன்பங்களை உணர்ந்து உண்மையான அமைதியையும்,ஆனந்தத்தையும் பெற, இறைவனை அடையும் வழியை நாடவேண்டும். இத்தகைய மனநிலை உள்ளவர்களுக்கு நம் சித்தர்களும், ஞானிகளும் யோகம், ஞானம் என்ற வழிகளை காட்டுகிறார்கள்.
இந்த வழிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்தாலும் மற்றவை தானே தொடரும். தன்னை அறிந்துகொண்டால்தான் ஆண்டவனை அறியமுடியும். நான் யார்? என்ற கேள்வியால்தான் இறைவன் யார்? என்பதை அறியமுடியும். அதனால் தான் தன்னை முழுதும் அறிந்து கொள்ள விரும்புபவர்களை அஷ்டாங்க யோகங்கள் பழக சொல்கிறார் பதஞ்சலி முனிவர்.
யோக ஞானத்தை பெற வேண்டுமானால் உண்மையான பக்தியும் அசைக்க முடியாத நம்பிக்கையும் வேண்டும். நம்முடைய அறிவைக் கொண்டு ஆராய்ச்சி செய்வதாலோ,ஞான நூல்களைப் படிப்பதாலோ, பணத்தாலோ மட்டுமே யோக ஞானத்தைப் பெற முடியாது. இறைவனிடத்தில் நம்மை முழுமையாக அர்ப்பணித்து, நம்பிக்கையுடனும், உறுதியான இறை சிந்தனையுடனும், விடாமுயற்சியுடனும் உழைக்க வேண்டும். இவை அனைத்துக்கும் அடிப்படையாக இருப்பது மெய்யான பக்தியே.