

ஒரே கல்லால் ஆன அபூர்வ ரிஷபாரூடர் சிற்பத்தைக் கொண்ட சிறப்புமிக்க தலமாக, திருலோக்கி சுந்தரேஸ்வர சுவாமி கோயில் விளங்குகிறது. குரு பகவானுக்கு பாப விமோசனம் அளித்த தலமாகவும், திருவிசைப்பா பாடலில் இடம்பெற்று, தேவார வைப்புத் தலங்களில் ஒன்றாகவும் இத்தலம் போற்றப்படுகிறது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருலோக்கி அகிலாண்டேஸ்வரி சமேத சுந்தரேஸ்வர சுவாமி கோயில், முற்காலத்தில் ஏமநல்லூர் என்று அழைக்கப்பட்டது. அப்பர் பெருமான் ‘ஏமநல்லூர்’ என தன் ஷேத்ரக்கோவையில் இவ்வூரை குறிப்பிட்டுள்ளார். ஒருசமயம் குரு பகவான், தான் அறியாது செய்த பாவங்களுக்கு விமோசனம் வேண்டி ஆலய தரிசனத்தை மேற்கொண்டு பல தலங்களை தரிசித்து வந்தார்.
‘மத்தியார்ச்சுனம்’ எனப்படும் திருவிடைமருதூருக்கு வருகை தந்து, அங்குள்ள மகாலிங்க சுவாமியை வழிபட்டார். குருபகவானுக்கு அருள்பாலித்த மகாலிங்க சுவாமி, “எனக்கு கிழக்கு திசையில் அமர்ந்து அருள்பாலித்து வரும் சுந்தரேஸ்வர பெருமானை வழிபட்டால், உம்மை பிடித்த பாவங்கள் விலகி விமோசனம் கிடைக்கும்” எனப் பணித்தார்.
தேவர்களும் பூதகணங்களும் புடை சூழ, குரு பகவானுக்கு ரிஷப வாகனத்தில் எழுந்தருளி சிவபெருமான் காட்சி அருளினார். இக்கோயிலில் உள்ள உமா மகேஸ்வர வடிவம் மிக மிக அற்புதமான சிற்ப வடிவமாகும். கருங்கல்லாலான நந்தியின் மேல் ஒரு பீடத்தில், சிவம் தழுவிய சக்தியாக, சக்தி தழுவிய சிவமாக காட்சியளிக்கும் அரிய கருங்கற் திருமேனியைவேறெங்கும் காணமுடியாத அபூர்வ படைப்பாகும்.
இரு கரங்களில் சூலம், மான் ஏந்தியும், முன் வலது கரம் அபய முத்திரையுடனும், இடது கரம் அம்பிகையை அணைத்தும் அழகு வடிவத்தில் சிவபெருமான் (ஸ்ரீ சுந்தரேஸ்வரர்) வலது காலைத் தொங்கவிட்டு இடது காலை மடக்கி அமர்ந்துள்ளார். ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பிகையும் அவருக்கு ஈடுகொடுத்து இடது காலை மடக்கியும் வலது காலை சாய்த்துத் தொங்கவிட்டும் உடம்பை வளைத்தவாறு ஒய்யாரமாக அமர்ந்துள்ளார்.
மன்மதனுக்கு அருள்: அட்ட வீரட்டத் தலங்களில் ஒன்றான கொற்கை எனப்படும் திருக் குறுக்கை தலத்தில், சிவபெருமானின் நெற்றிக் கண்ணால் எரிக்கப்பட்டான் மன்மதன். அவனது பிழையைப் பொறுத்து, மீண்டும் அவனுக்கு உயிர் அளிக்கும்படி, சிவபெருமானை ரதிதேவி வேண்டினாள். “திருலோக்கி கோயிலில் என்னை வணங்கி வழிபட்டால், உன் கணவன் உயிர்பெற்று வருவான்” என சிவபெருமான் வரமளித்தார். அதன் பொருட்டு வந்த ரதிதேவி, இங்குள்ள இறைவனை வணங்கி வழிபட இறையருளால் மன்மதன் உயிர்பெற்றான்.
தலவிருட்சமாக சரக் கொன்றை மரத்தையும், புகழ் பெற்ற லட்சுமி தீர்த்தத்தையும் உடைய இத்தலத்தில் பிருகு முனிவர், தேவ குருவான பிரஹஸ்பதி, சுகேது ஆகியோர் வழிபாடு செய்துள்ளனர்.
அமைவிடம்: திருவிடைமருதூர் வட்டம் திருப்பனந்தாளில் இருந்து 5 கிமீ தொலைவிலும், மயிலாடுதுறை மற்றும் கும்பகோணத்தில் இருந்து 30 கிமீ தொலைவிலும் உள்ளது திருலோக்கி.