

ஆதிசங்கரரால் அருளப் பட்ட சௌந்தரியலஹரியையும் அபிராமிபட்டரால் அருளப்பட்ட அபிராமி அந்தாதி யையும் ஒப்பிட்டு எழுதப்பட்டிருக்கும் நூல். முன்னது நூறு ஸ்லோகங்கள். பின்னது, நூறு பாடல்கள் (பாசுரங்கள்). முன்னவரும் அம்பிகையின் சௌந்தரியத்தை பாடி, அவளின் திருவடியில் ஒவ்வொருவரும் தங்களை அர்ப்பணிக்க வேண்டும் என்கிறார்.
பின்னவரும், அபிராமியின் அழகை, அருளை வர்ணித்து, அவளின் பாதக் கமலங்களில் ஒவ்வொருவரும் சரணடைய வைக்கிறார். உன்னதமான இரண்டு படைப்புகளையும் மிகவும் ஆழமாகவும் நெருக்கமாகவும் அணுகியிருக்கும் வாசிப்பனுபவம், இது போன்ற அரிய புத்தகத்தை எழுதுவதற்கு நூலாசிரியருக்கு உதவியிருக்கிறது.
ஊழிப் பிரளய காலத்தில் சிவனின் தாண்டவத்தில் அனைத்து உயிர்களும் இறக்கின்றன. அமுதத்தை உட் கொண்டவர்களும் இறக்கின்றனர். ஆனால், ஆலகால விஷத்தை உண்ட சிவன் எப்படி எந்த பாதிப்பும் இல்லாமல் இருக்கிறார் என்னும் கேள்வியை ஒரு ஸ்லோகத்தில் சங்கரர் எழுப்புகிறார்.
அதற்கு அபிராமி பட்டரின் `அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை' என்னும் அபிராமி அந்தாதிப் பாடலின் வரியையே பதிலாக்கியிருக்கிறார் சுதா சேஷய்யன். இப்படிப்பட்ட ஒப்புமைகளின் வழியாக அம்பிகையின் கருணை நம்மையும் ஆட்கொள்கிறது - யுகன்
ஆதிசங்கரரும் அபிராமி பட்டரும்; டாக்டர் சுதா சேஷய்யன்; வானதி பதிப்பகம், சென்னை. தொடர்புக்கு: 044-24342810.
லெக்லர் திருச்சபை வரலாறு: மறைந்த வரலாற்று அறிஞரும், சேலம் சி.எஸ்.ஐ. லெக்லர் நினைவு திருச்சபையின் மூத்த உறுப்பினருமான ஜான் தாமஸ் பிரதாப் தமிழில் எழுதிய `சேலம் சிஎஸ்ஐ லெக்லர் நினைவு ஆலய திருச்சபையின் வரலாறு' நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு இது. டாக்டர் அனிதா பிலிப் ஆங்கிலத்தில் எழுதியிருக்கும் நூலை, கூடுதல் தகவல்களுடன் எடிட் செய்திருக்கிறார் சேலம் ஹிஸ்டாரிகல் சொசைட்டியின் பொதுச் செயலாளரான பர்னபாஸ்.
A Brief History of London Mission in Salem & C S I Lechler Memorial Church; J. Barnabas; Salem Historical Society, Mob: 9865976424.
கருத்துக் கருவூலமாக திகழும் நளபுராணம்: இன்னல் வந்துற்ற போதும் கலங்காது, வாழ்வில் மேன்மையை நோக்கி எதிர்நீச்சல் போடுகின்ற உறுதி பெற்ற மனநிலையை நாம் பெற்றிடல் வேண்டும். இந்த தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு, மனித வாழ்வின் உண்மை நிலையை அறிவுறுத்தி, நல்வழி காட்டும் வகையில் அமைந்த நள புராணத்தை படித்தால் பாவ தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். மகாபாரதத்தில் தருமரை ஆறுதல்படுத்த வேத வியாசர் சொன்ன இக்கதை, உலகியல் நெறிகளை தனித் தன்மையோடு மிகவும் அழுத்தமாக படம்பிடித்துக் காட்டும் கருத்துக் கருவூலமாகத் திகழ்கிறது.
நன்னெறிகளோடு, இடர்களற்று வாழ நினைப்போர், நளனுடைய கதையை அறிவது மிகவும் அவசியமாகும் என்பதை கருத்தில் கொண்டு, யாவரும் கற்று இன்புற்று பயன்பெறும் வண்ணம் எளிய நடையில் நளனுடைய வரலாற்றை ஆசிரியர் இந்நூலில் கூறியுள்ளார். திருநள்ளாறு தலப் பெருமை, சனீஸ்வர வழிபாட்டின் பெருமை, சனிபகவானின் மகிமைகளும் இந்நூலில் இணைக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பு - கே.சுந்தரராமன்
சனீஸ்வர தோஷங்கள் நீக்கும் நளபுராணம்; புலவர் அ.சா.குருசாமி; நர்மதா பதிப்பகம்; 9840226661
முருக பக்தர்களின் வேதம் - கந்தரநுபூதி: ஓம் என்ற சப்தத்தில் இருந்து உலகம் பிறந்தது என்றும், இப்பிரணவம் அகார, உகார, மகாரங்களால் ஆனது என்றும் அறியப்படுகிறது. இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகியவற்றின் உருவகமே வேலாயுதனின் ஆயுதம் ஆகும். முருக உபாசகர்கள் பலர் வேலை மட்டுமே வைத்து பூஜை செய்கின்றனர். சிலர் முருகன் முன்பு வேலை வைத்து வழிபடுவதுண்டு. யோக மார்க்கங்களைத் தழுவி அதனால் உடலுக்கு துன்பம் அளிப்பதைவிட, உபாசனை செய்து குருநாதன் அளித்த சிவஞான நெறியில் நிற்பதே சிறப்பு. இந்நெறியில் மனம் பண்படுவதோடு சுக, துக்க வாதனைகளும் அற்றுப் போகும்.
துன்பம் என்பதையே காணாமல் மனம் எந்நேரமும் ஆனந்த வயப்பட்டு நிற்கும் என்பது நமக்கு ‘கந்தரநுபூதி’ தந்த அருணகிரியாரின் முடிவான கொள்கை ஆகும். சர்வ மத சமரச மார்க்கமாக விளங்கும் கந்தரநுபூதியை படித்து உணர்ந்து கொண்டால் அருள்நிலையில் மேம்பட்டவர்கள் ஆகலாம் என்பதை மனதில் கொண்டு, கந்தரநுபூதிக்கு எளிய நடையில் விளக்கம் அளித்துள்ளார் ஆசிரியர்.
உருவாகவும் அருவாகவும், அன்பருக்கு உணரும் பொருளாகவும், ஞானமாகிய நறுமணமாகவும், மணத்தின் மூலமாகிய மலராகவும், நவமணியாகவும், மணியின் சுடராகவும், எல்லாவற்றுக்கும் ஆதிப்பொருளாகவும், உயிர்க்கு உயிராகவும், வீடுபேற்றை அடையும் நன்னெறியாகவும், அடையும் வீடுபேறாகவும் விளங்கும் குகப் பெருமான், அனைவருக்கும் குருவாக எழுந்தருளி அனைவரையும் காக்க வேண்டும் என்று வேண்டுகிறார் நூலாசிரியர்.
ஆத்ம ஞானம் அருளும் கந்தரநுபூதி; ஸ்ரீ தேவநாத ஸ்வாமிகள் ; நர்மதா பதிப்பகம் ; 9840226661.
சீரடி சாய்பாபாவின் போதனைகளை விவரிக்கும் மலர்: பகவான் ஸ்ரீ சீரடி சாய்பாபாவின் மகிமைகள், அற்புதங்கள், போதனைகள், பக்தர்களுக்கு காட்சி அருளியது, அவர் தொடர்பான அரிய தகவல்கள் ஆகியவற்றை படங்களுடன் விளக்கும் மலராக ஸ்ரீ சாய் மார்க்கத்தின் தீபாவளி மலர் அமைந்துள்ளது. சிந்தையைக் கவரும் வண்ணம் ஆன்மிக செய்திகளின் பொக்கிஷமாக வெளிவந்துள்ள இம்மலரில், பக்தியின் இனிமையை அனுபவித்த பக்தர்களின் எண்ணப் பகிர்வுகள் இடம் பெற்றுள்ளன.
காந்திஜியை இங்கிலாந்தில் மெஹர் பாபா சந்தித்த நிகழ்வு, ‘உள்ளுணர்வான அழைப்பு கடவுளின் அனுக்கிரஹம்’ என்ற தலைப்பிலான சிறப்பு செய்திகள், ஸ்ரீ ராம நவமி சிறப்பு கட்டுரை ஆகியவற்றை உள்ளடக்கிய இம்மலர், இனிய சிந்தனைகள், உபதேச மொழிகளால் அனைவரையும் மகிழ்விக்கிறது.
ஸ்ரீ சாயி மார்க்கம் தீபாவளி மலர் ; லெஷ்மி நரசிம்மன்; சாயி பிரச்சார சேவா டிரஸ்ட்; தொடர்புக்கு: 98403 25245.