

சாரதா என்றால் சரஸ்வதி என்று பொருள் கொள்ளப்படும். சாரதா என்ற சொல் முழுமையான மற்றும் தெளிவான அறிவைக் குறிக்கிறது. இலையுதிர் காலத்தில் வானம், மேகங்கள் இல்லாமல் மிகவும் தெளிவாக காணப்படும். அந்த சமயத்தில் சந்திரன் மிகவும் பிரகாசமாகத் தோன்றும்.
இதனாலேயே சந்திரன், சரத்சந்திரன் என்று அழைக்கப்படுகிறார். சாரதாம்பாளும் அனைவரது அறியாமையை விலக்கி, தெளிவான மற்றும் முழுமையான ஞானத்தை அளிக்கிறாள். சுப்பிரமணிய புஜங்கம், தேவி புஜங்கம் என்ற வரிசையில், அன்னை சாரதாம்பாள் மீது 8 சுலோகங்களைக் கொண்ட சாரதா புஜங்கத்தை ஆதிசங்கரர் இயற்றியுள்ளார்.
ஸுவக்ஷோஜ கும்பாம் ஸுதா பூர்ணகும்பாம்
ப்ரஸாதா வலம்பாம் ப்ரபுண்யா வலம்பாம்
ஸதாஸ்யேந்து பிம்பாம் ஸதாநோஷ்ட பிம்பாம்
பஜே சாரதாம்பா மஜஸ்ரம் மதம்பாம் (1)
அமுதம் நிரம்பிய கும்பத்தை கையில் ஏந்தியவளாக சாராதாம்பாள் விளங்குகிறாள், அருளாகிய பிடிப்பு (பந்தம்) உடையவளை, புண்ணியம் வாய்க்கப் பெற்றவர்களால் மட்டுமே அறிய முடியும், ‘அனைத்தையும் அளிக்கிறேன்’ என்று புன்சிரிப்புடன் அருள்பாலிக்கும் அன்னை சாரதாம்பாளை வணங்குகிறேன்.
கடாக்ஷே தயார்த்ராம் கரே ஜ்யானமுத்ராம்
கலாபிர் விநித்ராம் கலாபை:ஸுபத்ராம்
புரஸ்த்ரீம் விநித்ராம் புரஸ்துங்க பத்ராம்
பஜே சாரதாம்பா மஜஸ்ரம் மதம்பாம் (2)
கடைக் கண்ணில் கனிவு கொண்டவள் சாரதாம்பாள். கையில் ஞான முத்திரையுடன் அனைவருக்கும் கலை ஞானம் அருள்பவள். நல்ல செயல்களை சிந்திப்பவர்களுக்கு நல்லதை அளிப்பவள். தன்னைச் சுற்றி நல்லவற்றையே சுழல வைக்கும் அன்னை சாரதாம்பாளை வழிபடுகிறேன்.
லலாமாங்க பாலாம் லஸத்கான லோலாம்
ஸ்வபக்தைக பாலாம் யச:ஸ்ரீக போலாம்
கரேத்வக்ஷ மாலாம் கநத்ப்ரத்ன லோலாம்
பஜே சாரதாம்பா மஜஸ்ரம் மதம்பாம் (3)
நெற்றியில் தலைசிறந்த திலகம் உடைய சாரதாம்பாள், நல்ல கீதத்தில் ஈடுபாடு கொண்டவளாக விளங்குகிறாள். தனது அடியார்களை பாதுகாத்து அருளும், அன்னை மிகவும் அழகு பொருந்தியவளாக ஒளிர்கிறாள். கையில் ஜபமாலை வைத்திருக்கிறாள். தெளிவு, பாரம்பரியம், உயர்ந்த வாக்கு ஆகியவற்றைக் கொண்டு அனைவரிடத்தும் அன்பு காட்டும் அன்னை சாரதாம்பாளை போற்றுகிறேன்.
ஸுஸீமந்த வேணீம் த்ருசா நிர்ஜிதைணீம்
ரமத் கீரவாணீம் நமத்வஜ்ர பாணீம்
ஸுதா மந்தராஸ்யாம் முதா சிந்த்ய வேணீம்
பஜே சாரதாம்பா மஜஸ்ரம் மதம்பாம் (4)
நல்ல வகிடும், பின்னலும் உடைய சாரதாம்பாள், மான்களையே விஞ்சும் கண்ணழகை கொண்டுள்ளாள். அழகிய கிளியின் மொழிகளைப் போன்று பேசுபவள். கையில் வஜ்ராயுதம் ஏந்திய இந்திரன் உள்ளிட்டோர் அன்னையை வழிபட்டுள்ளனர். கருணையுடன் கூடிய புன்னகையால் அனைவருக்கும் மகிழ்ச்சியை அளிக்கும் அன்னை சாரதாம்பாளை போற்றி மகிழ்கிறேன்.
ஸுசாந்தாம் ஸுதேஹாம் த்ருகந்தே கசாந்தாம்
லஸத்ஸல்ல தாங்கீ மனந்தா மசிந்த்யாம்
ஸ்மதாம் தாபஸை:ஸர்க பூர்வதிதாம் தாம்
பஜே சாரதாம்பா மஜஸ்ரம் மதம்பாம் (5)
எப்போதும் அமைதியாக வீற்றிருக்கும் சாரதாம்பாள், தேவதைகளுக்கு அருள்பாலிப்பவள். கண் முடியும் இடத்தில் கேசம் நிறைவடைந்து, கொடி போன்ற அங்கத்தை உடையவளாக திகழ்கிறாள். இவ்வளவுதான் என்று அளவிட முடியாதபடியும், இப்படித்தான் என்று கூற முடியாதபடியும் விளங்கும் அன்னையை முனிவர்கள் பக்தியுடன் வழிபடுகின்றனர். பிரம்மதேவர் படைப்புத் தொழிலை தொடங்குவதற்கு முன்னரே உலகம் முழுவதும் வியாபித்திருக்கும் அன்னை சாரதாம்பாளை போற்றி சேவிக்கிறேன்.
குரங்கே துரங்கே ம்ருகேந்த்ரே ககேந்த்ரே
மராலே மதேபே மஹோக்ஷே திரூடாம்
மஹத்யாம் நவம்யாம் ஸதாஸாம ரூபாம்
பஜே சாரதாம்பா மஜஸ்ரம் மதம்பாம் (6)
மான், குதிரை, சிங்கம், கருடன், அன்னப்பறவை, யானை, ரிஷபம் உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் சாரதாம்பாள், மிகவும் உயர்ந்தவளாக அறியப்படுகிறாள். ஒன்பது வடிவங்களை ஏற்ற அன்னை சாம வேத ஸ்வரூபிணியாக விளங்குகிறாள். அனைவரிடத்தும் ஒரேவிதமான அன்பு செலுத்தும் அன்னை சாரதாம்பாளை வணங்குகிறேன்.
ஜ்வலத்காந்தி வஹ்னீம் ஜகன் மோஹனாங்கீம்
பஜே மானசாம்போஜா சுப்ராந்த ப்ருங்கீம்
நிஜஸ்தோத்ர சங்கீத ந்ருத்ய ப்ரபாங்கீம்
பஜே சாரதாம்பா மஜஸ்ரம் மதம்பாம் (7)
சுடர்விடும் நெருப்பின் ஒளிபோல் பிரகாசிக்கும் சாரதாம்பாள், தேனுக்காக, தாமரை மலரை சுற்றிச் சுற்றி வரும் தேனீக்களைப் போல், உலகில் உள்ள அனைவராலும் வணங்கப்படுகிறார். ஒவ்வொருவர் எண்ணத்திலும் அன்னை நிறைந்திருக்கிறாள். இசை மற்றும் நடன அமைப்புக்கு ஏற்றபடி அமைக்கப்பட்ட பாடல்களால் அன்னை சாரதாம்பாளை வணங்கி மகிழ்கிறேன்.
பவாம்போஜ நேத்ராஜ ஸம்பூஜ்ய மாநாம்
லஸன் மந்தஹாஸ ப்ரபாவக்த்ர சின்ஹாம்
சலச் சஞ்சலா சாரு தாடங்க கர்ணாம்
பஜே சாரதாம்பா மஜஸ்ரம் மதம்பாம் (8)
முப்பெரும் தேவர்களான சிவபெருமான், திருமால், பிரம்மதேவரால் பூஜிக்கப்பட்ட சாரதாம்பாள், அழகிய புன்முறுவலை முகத்தின் அடையாளமாகக் கொண்டுள்ளாள். தாயாக இருந்து உலகத்தைக் காத்தருள்கிறாள். அசையும் மின்னலைப் போன்று காட்சியளிக்கும் காதணியை அணிந்த சாரதாம்பாளை பணிந்து வணங்குகிறேன்.