புனித காஞ்சியும் சிருங்கேரி மடமும்

புனித காஞ்சியும் சிருங்கேரி மடமும்
Updated on
2 min read

தமிழ்நாட்டில் இருக்கும் காமாட்சியம்மனுக்கும், கர்நாடக மாநிலத்தில் இருக்கும் சிருங்கேரி மடத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கும் வண்ணம் ஸ்ரீ ஆதிசங்கரர் ஏற்பாடு செய்து வைத்தார். நம்முடைய சனாதன தர்மத்தை பாதுகாக்கவும், தேச ஒற்றுமையை வளர்க்கவும் ஸ்ரீ ஆதிசங்கரர் அன்றே வழிகோலினார்.

நகரங்களுள் சிறந்த நகரம் ‘காஞ்சி’ (கச்சி) என்பதை

‘புஷ்பேஷு ஜாதி புருஷேஷு விஷ்ணு
நாரிஷு ரம்பா நகரேஷு காஞ்சி’

என 4-ம் நூற்றாண்டில் வாழ்ந்த மகாகவி காளிதாஸர் வர்ணித்துள்ளார். சங்க இலக்கியங்களில் பத்துப்பாட்டில் ஒன்றான பெரும்பாணாற்றுப் படையில் கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்கிற புலவர் காஞ்சிபுரம் முற்காலத்தில் காஞ்சி மரங்களால் சூழப்பட்ட பகுதி என்பதை,

‘வெளினுழை மறியாக் குயினுழை பொதும்பர்க்
குறுங்காற் காஞ்சி’ (370 – 375)

என்கிற வரிகளால் சொல்லி இருக்கிறார். இதே போன்று சங்கப் புலவரான கச்சிப்பேட்டு காஞ்சிக் கொற்றனார் காஞ்சி மாநகரை சிறப்பித்து (வர்ணித்து) பாடியுள்ளார். அதேபோன்று மணிமேகலை இலக்கி யத்திலும் காஞ்சியைப் பற்றி கூறப்பட்டுள்ளது. சங்க காலத்தில் இருந்து இன்று வரை காஞ்சி மாநகர், சைவ – வைணவ கோயில்களைக் கொண்ட புண்ணிய ஸ்தலமாக விளங்கிக் கொண்டு வருகிறது.

தொண்டை மண்டலப் பகுதியை ஏறத்தாழ 3-ம் நூற்றாண்டு முதல் 9-ம் நூற்றாண்டு வரை ஆட்சி புரிந்த பல்லவர்கள் காஞ்சிபுரத்தை தலைநகரமாகக் கொண்டு அரசாட்சி புரிந்தனர். இப்பல்லவர்கள் திரையன் மரபில் (திருமாலை முதற்கடவுளாகக் கொண்ட குழுவினர்) வந்தவர்கள் என்பதை பெரும்பாணாற்றுப் படையின் தனிப்பாடலான ‘கங்குலும் நண்பகலும்’ எனத் தொடங்கும் பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மறையது பாடிப் பிச்சைக் கென்றகந் திரிந்து வாழ்வார்
பிறையது கடைமு டிமேற் பெய்வளை யாள் தன் னோடுங்
கறையது கண்டங் கொண்டார் காஞ்சிமா நகர்தன் னுள்ளால்
இறையவர் பாட லாடல் இலங்குமேற் றளிய னாரே (4.1)

என காஞ்சிபுரத்தில் எழுந்தருளி இருக்கும் ஏகாம்பர நாதரைப் பற்றி திருநாவுக்கரசர் திருமுறையில் பாடியுள்ளார். வரலாற்று ஆசிரியரும், சீன பயணியுமான யுவான் சுவாங் (602 – 664) இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட சமயத்தில் காஞ்சிபுரத்துக்கு வருகை தந்ததை பதிவு செய்துள்ளார்.

இப்படி வரலாற்று சிறப்பும், புனித தன்மையும் நிறைந்த பண்டைய கால தென்னிந்தியாவில் சிறந்த ஓர் ஆன்மிக நகரமான காஞ்சி மாநகருக்கு ஸ்ரீ ஆதிசங்கரர் தமது விஜய யாத்திரை சமயத்தில் வருகை புரிந்தபோது காஞ்சி மாநகரை அருள்பாலிக்கும் ஸ்ரீ காமாட்சி அம்மனை சாந்த ஸ்வரூபிணியாக மாற்றி ஸ்ரீசக்கரத்தை (யந்திரம்) பிரதிஷ்டை செய்து நித்ய வைதீக பூஜை முறைகளை ஏற்படுத்தினார்.

ஸ்ரீ ஆதிசங்கரர் காலத்துக்குப் பின்பு அவரால் தோற்றுவிக்கப்பட்ட சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தில் அருளாட்சி புரிந்த ஆச்சார்ய சுவாமிகள் யாவரும் ஸ்ரீ காமாட்சியம்மன் மீது மிகுந்த பக்தியை வைத்து, இன்று வரை ஆராதித்து வருகின்றனர், சிருங்கேரி மடத்தின் 28-வது ஆச்சார்யராக இருந்த முதலாம் ஸ்ரீ அபிநவ சச்சிதானந்த பாரதி சுவாமிகள் (1741 – 1767) காஞ்சிபுரத்துக்கு வருகை தந்து அம்மனை தரிசனம் செய்துள்ளார். அந்த சமயத்தில் இப்பிராந்தியத்தை ஆண்ட இஸ்லாமிய அரசரான வாலாஜா நவாப் பெரிதும் உதவியுள்ளார். 30-வது பீடாதிபதியான ஸ்ரீ சச்சிதானந்த பாரதி சுவாமிகள் காஞ்சிபுரத்துக்கு வருகை தந்து ஆலய தரிசனங்களை செய்துள்ளார்.

32-வது பீடாதிபதியான ஸ்ரீ நரசிம்ம பாரதி சுவாமிகள், 1837 – 38-ல் காஞ்சி மாநகருக்கு விஜயம் செய்து ஸ்ரீ காமாட்சியம்மனை தரிசனம் செய்துள்ளார். மீண்டும் 1870-ம் ஆண்டு தன்னுடைய சீடரான ஸ்ரீ சச்சிதானந்த சிவாபிநவ நரசிம்ம பாரதி சுவாமிகளுடன் வருகை தந்துள்ளார். சிருங்கேரி மடத்தின் 35-வது பீடாதிபதியான ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த சுவாமிகள் 1961-ம் ஆண்டு காமாட்சி அம்மனை தரிசனம் செய்துள்ளார். அந்த சமயத்தில் ஆச்சார்ய சுவாமிகள், நவராத்திரி நேரத்தில் தர்பார் நிகழ்வின்போது அணியும் ராஜ உடையுடன் தங்கப் பல்லக்கில் அமர்ந்து அட்ட பல்லக்கு (வீதியின் குறுக்காக பல்லக்கில் செல்வது) சேவை ஊர்வலத்தை நடத்தினார்.

இம்மகான் மீண்டும் 1965-ல் காஞ்சிபுரத்துக்கு விஜயம் செய்து ஸ்ரீ காமாட்சி அம்மன், ஏகாம்பர நாதர், வரதராஜப் பெருமாள் கோயில்களில் சுவாமி தரிசனம் செய்தார். 1977-ம் ஆண்டு தம்முடைய சீடரான (உத்தராதிகாரி) ஸ்ரீ பாரதி தீர்த்த சுவாமிகளுடன் காஞ்சிபுரத்துக்கு வருகை தந்துள்ளார்.

அதே போன்று 1986-ம் ஆண்டு இரு ஆச்சார்ய சுவாமிகளும் காஞ்சிபுரத்துக்கு விஜயம் செய்து இப்பகுதி மக்களுக்கு நல் ஆசீர்வாதத்தை வழங்கியுள்ளனர். சமீபத்தில் இளைய சுவாமிகளான ஸ்ரீ விதுசேகர பாரதி சுவாமிகள் (26-10-2024 முதல் 28-10-2024 வரை) காஞ்சிபுரத்தில் முகாமிட்டு ஸ்ரீ காமாட்சியம்மன் கோயில் உள்ளிட்ட பல கோயில்களுக்கு விஜயம் செய்தார்.

ஸ்ரீ காமாட்சியம்மன் கோயிலில் தொன்றுதொட்டு நவராத்திரி உற்சவ சமயத்தில் நவாவரண பூஜை, சுவாசினி பூஜை, சந்தர்ப்பணை போன்றவை சிருங்கேரி மடத்தின் சார்பாக இன்று வரை நடத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. காஞ்சிபுரம் சாலைத் தெருவில் அமைந்துள்ள சிருங்கேரி மடம் சமீப காலத்தில் புதுப்பிக்கப்பட்டது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in