

யமுனா நதி கரையில் அமைந்துள்ள விருந்தாவன் ஸ்ரீ கிருஷ்ணர் பலராமர் கோயில், இஸ்கான் குழுவினரால் கட்டப்பட்ட முதல் கோயிலாகும். இக்கோயிலில் தீபாவளி சமயத்தில் நடத்தப்படும் தாமோதர் லீலா நாட்டிய நாடகம் மிகவும் சிறப்பு பெற்றதாக அறியப்படுகிறது.
உத்தரபிரதேச மாநிலத்தில் யமுனா நதிக்கரையில் இஸ்கான் குழுவினரால் 1975-ம் ஆண்டு விருந்தாவன் ஸ்ரீ கிருஷ்ணர் பலராமர் கோயில் கட்டப்பட்டது. அதே ஆண்டு ஏப்ரல் 20-ம் தேதி நவமி நாளில் இக்கோயில் திறக்கப்பட்டது. அண்ணன் - தம்பிக்கு அவர்கள் பசு மேய்த்த இடத்திலேயே கோயில் அமைந்துள்ளது தனிச்சிறப்பு.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, விருந்தாவன் ஸ்ரீகிருஷ்ணர் - பலராமர் கோயிலில் தாமோதர் லீலா என்ற நாட்டிய நாடகம் நடத்தப்படுகிறது. தாமோதர் என்பது உத்தரபிரதேசம் மாநிலத்தில் ஒரு மாதம் ஆகும். வடநாட்டு கார்த்திக் மாதத்துடன் இந்த மாதம் (அக்டோபர் - நவம்பர்) ஒத்துப் போகும். இந்த மாதம் முழுவதும் கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
தாமோதர் லீலா கொண்டாட்டத்தின்போது ஊர்மக்கள் தினமும் நெய்விளக்கு ஏற்றி, தாமோதர் அஷ்டகம் பாடி விளக்கை ஆரத்தி போன்று கிருஷ்ணருக்கு காட்டி, அவருக்கே அர்ப்பணம் செய்கின்றனர்.
தாமோதர் லீலா: ஒரு முறை தன் உதவியாளர் பெண்மணி வேறு வேலையாக இருப்பதை பார்த்து யசோதா தானே தயிரை எடுத்து வெண்ணெய் கடைகிறார். அப்போது கிருஷ்ணரின் குழந்தை பருவப் பாடல்களை பாடி மகிழ்கிறார். அங்கு பசியுடன் வரும் குழந்தை கிருஷ்ணர், தன்னுடைய தாய் தனக்கு உடனே பசியை போக்க வேண்டும் என நினைக்கிறார். யசோதாவும் குழந்தையின் மன நிலையை அறிந்து, அவரை மடியில் கிடத்திக் கொண்டு பால் ஊட்டுகிறார்.
அப்போது அடுப்பில் வைத்த பால். பொங்கி விடுவேன் என பயமுறுத்துகிறது. உடனே கிருஷ்ணரை இறக்கி விட்டு விட்டு அடுப்பை அணைக்கச் செல்கிறார். இதனால் கிருஷ்ணருக்கு கோபம் வருகிறது. அவரது உதடுகளும் கண்களும் கோபத்தில் சிவக்கின்றன.
ஒரு கல்லை எடுத்து வீசி வெண்ணெய் பானையை உடைக்கிறார். அதிலிருந்து வெண்ணெயை எடுத்து ஓர் ஒதுக்குப்புற இடத்துக்குச் சென்று சாப்பிட தொடங்குகிறார். அடுத்து இருபக்க உரல் மீது சென்று அமர்ந்து கொள்கிறார். இந்த காட்சியை யசோதா பார்க்கிறார். தாய் தன்னைப் பார்த்ததும் அடிப்பாரோ என பயந்து கிருஷ்ணர் ஓடுகிறார்.
‘குறும்பா செய்கிறாய்?’ என மிரட்டிய யசோதா, எந்த உரலில் கிருஷ்ணர் உட்கார்ந்திருந்தாரோ அதிலேயே அவரை கயிற்றால் கட்டிப் போடுகிறார். கிருஷ்ணருக்கு மேலும் கோபம் வருகிறது. இரண்டு அர்ஜுனமரங்கள் அருகருகே இருப்பதை பார்த்து அதன் இடையே சென்று கயிற்றை அறுத்து தப்ப நினைக்கிறார். இண்டு மரங்களுக்கு இடையே சென்றபோது, உரல் மாட்டிக் கொள்கிறது. திகைத்த கிருஷ்ணர் தன் வேகத்தை அதிகப்படுத்தி இழுக்க, அதிசயம் நடந்தது.
கயிறு அறுபடவில்லை. மாறாக அருகருகே நின்றிருந்த இரண்டு அர்ஜுன மரங்களும் விழுந்து விடுகின்றன. உடனே அதில் இருந்து 2 பேர் எழுந்து கிருஷ்ணரை வணங்குகின்றனர்.
சாப விமோசனம்: ஒருசமயம் குபேரனின் மகன்களான, நளகுவன், மணிக்கீரிவன் இருவரும் மதி மயங்கிய நிலையில் நாரதரை கிண்டலடிக்க, அவர் கோபப்பட்டு, ‘இருவரும்பூமியில் அர்ஜுன மரங்களாக வளருங்கள்’ என்று சாபம் இடுகிறார். வருந்திய இருவரும், சாப விமோசனம் குறித்து முனிவரிடம் கேட்க, கிருஷ்ணர் பிறந்துவளரும்போது சாப விமோசனம் அவரால் கிடைக்கும் என அருள்கிறார். கிருஷ்ணரால் சாப விமோசனம் பெற்றஇருவரும் தங்கள் உலகத்துக்குப் புறப்படுகின்றனர்.
இந்தக் கதையே தாமோதர் லீலா என்ற நாட்டிய நாடகமாக நடத்தப்படுகிறது. செல்வச் செழிப்பில் எழுந்த கோயிலாக விருந்தாவன் ஸ்ரீ கிருஷ்ணர் பலராமர் கோயில் விளங்குகிறது. கோயிலின் வடிவமைப்பு மற்றும் கட்டுமானம் தொடர்பாக மிகுந்த சிரத்தை எடுத்து ஸ்ரீ பிரபுபாதர், இக்கோயிலை வெள்ளி பளிங்கு கற்களைப் பயன்படுத்தி கட்டியுள்ளார்.
வளாகத்தின் நுழைவு வாயில் வழியாக உள்ளேசென்றால் வழியெல்லாம் அற்புத ஓவியங்களைக் காணலாம். கருவறையில் வெள்ளை சலவைக்கல்லால் ஆன பலராமரும், கருப்பு சலவைக்கல்லால் ஆன கிருஷ்ணரும் காட்சி அருள்கின்றனர். கிருஷ்ணர் கையில் புல்லாங்குழல் உள்ளது. வடநாட்டு இஸ்கான்கோயிலுக்கே உரிய அலங்காரம், பூ வேலைப்பாடுகளுடன் கோயில் அமைந்துள்ளது.
மூலவருக்கு அருகில் சிறிய பலராமர், கிருஷ்ணர் விக்கிரகங்களைக் காணலாம். வலது புறத்தில் தனிசந்நிதியில் ராதையும் கிருஷ்ணரும் அருள்பாலிக்கின்றனர். சற்று வித்தியாசமான தோற்றத்தில் காணப்படும் ராதை, ராதா ஷ்யாம்சுந்தர் என்று அழைக்கப்படுகிறார். அருகே கோபியர் லலிதா மற்றும் விசாகா உள்ளனர்.
சைதன்ய மகாபிரபு 1486 முதல் 1532 வரை வாழ்ந்தவர். அவரது சகோதரர் நித்தியானந்த பிரபு.இவருக்கு உறுதுணையாக இருந்த 6 கோஸ்வாமிகளின் வழி வந்தவர் ஸ்ரீ பிரபு பாதர். கருவறையின் இடது புறத்தில் கௌரவ நித்தாய் என்று அழைக்கப்படும் நித்தியானந்தாவுடன் சைதன்ய மகாபிரபு, இஸ்கான் நிறுவனர் ஸ்ரீ பிரபுபாதர், அவரது குரு சித்தானந்த சரஸ்வதி அருள்பாலிக்கின்றனர்.
ஆலய தரிசனம் முடித்துவிட்டு மீண்டும் நுழைவாயிலுக்கு வந்தால் அங்கு வெள்ளை பளிங்குக் கல்லால் கட்டப்பட்ட ஸ்ரீ பிரபுபாதரின் சமாதியை தரிசிக்கலாம். கோயிலுக்கு என தனியாககோசாலை உள்ளது. கோயில் வளாகத்துக்குள் உள்ள அருங்காட்சியகத்தில் கிருஷ்ணர் சிலைகள் உட்பட எண்ணற்ற கண்கவர் சிலைகள் காணப்படுகின்றன.
கோயில் கட்டிட பணிகள் முடிந்து, லாரியில் சிற்பங்கள் எடுத்து வரப்பட்டபோது அங்குள்ள விலங்குகள் மற்றும் பறவைகள் நூதன சப்தம் எழுப்பியது குறிப்பிடத்தக்கது. கோயிலின் உள்ளே கருப்பு - வெள்ளை பளிங்கு கற்களால் ஆன முற்றம் பக்தர்களை கவர்ந்திழுக்கிறது. கோயில் முழுவதும் கிருஷ்ண லீலாக்களை சித்தரிக்கும் படங்கள், அற்புத சிலைகள், குவிமாடங்கள், முறுக்கு படிக்கட்டுகள், அலங்கார வளைவுகள், சிறப்பு வேலைப்பாடுகள் காணப்படுகின்றன.
ஜென்மாஷ்டமி தினம், ராதாஷ்டமி தினம், தாமோதர் மாதம் (அக். 18 முதல் நவ. 15 வரை) முழுவதும் கோயில்திருவிழாக் கோலம் பூண்டிருக்கும். கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 4.30 – 12.45, மாலை 4.30 – 8 மணி.
அமைவிடம்: மதுரா ரயில் நிலையத்தில் இருந்து17 கிமீ தொலைவில் உள்ளது.