

திருநெல்வாயில் என்றும் சிவபுரி என்றும் அழைக்கப்படும் தலத்தில் உள்ள உச்சிநாத சுவாமி கோயில் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலமாகும். கன்வ மகரிஷியால் வழிபடப்பட்ட இத்தலம், சிவபுரி மான்மியம் என்னும் தல வரலாறு பெற்ற தலம் என்ற சிறப்பைப் பெறுகிறது.
திருவேட்களத்தில் தங்கி இருந்த நாட்களில் ஆளுடையப் பிள்ளை சிவபுரிக்கு வந்து வழிபட்டதாக அறியப்படுகிறது. நெல் வயல்களை ஊரின் வாயிலில் கொண்டு விளங்கும் பெருமை கொண்டதால் இவ்வூர் நெல் வாயில் எனப் பெயர் பெற்றது. தற்போது சிவபுரி என்றும் வழங்கப்படுகிறது.
மூன்று வயதிலேயே சீர்காழித் திருத்தலத்தில் குளக்கரையில் அம்மையின் ஞானப்பால் உண்டு தோடுடைய செவியன் என்று பாடத் தொடங்கிய ஞானசம்பந்தப் பெருமான் பின்னர் திருக்கோலக்காவில் பஞ்சாட்சரம் வரையப்பட்ட பொன் தாளம் அருளப்படுகிறார். பல தலங்களுக்குச் சென்று பதிகம் பாடி வரும்போது பட்டீஸ்வரத்தில் முத்து சிவிகையும் முத்து பந்தலும் பெற்று, பல தலத்து இறைவனைப் பாடி திருமறைக்காட்டில் மூடிய கதவை திறந்து, மதுரை சென்று ஆலவாயன் அருளால் கூன்பாண்டியனை நின்ற சீர் நெடுமாறன் ஆக்குகிறார்.
சமணரை அனல் வாதத்திலும் புனல் வாதத்திலும் வென்று இன்னும் பல தலங்கள் சென்று அற்புதம் பல நிகழ்த்தி மயிலாப்பூரில் பூம்பாவையை உயிருடன் எழுப்பி, திருவான்மியூர் முதலிய தலங்களை வணங்கி சீர்காழியை அடைகிறார் திருஞானசம்பந்தர். அவருக்கு அப்போது திருமணத்துக்கு தக்க பருவம் வந்தமையால், அவரது தந்தையாரும் மற்ற பெரியோரும் நம்பியாண்டார் நம்பியின் திருமகளை திருமணம் பேசி நிச்சயிக்கின்றனர். அவர்கள் திருமணம் திருநல்லூர் பெருமணம் (தற்போது ஆச்சாள்புரம்) என்ற தலத்தில் நடந்தது.
திருஞான சம்பந்தரின் திருமணத்தை காண வந்த 12,000 சிவனடியார்கள் சிதம்பரத்திலிருந்து ஆச்சாள்புரம் செல்லும்போது உச்சிக் காலத்தில் உச்சிநாதர் கோயிலுக்கு வர, அந்த அடியார் திருக்கூட்டத்துக்கு கோயில் பணியாள் போல வந்து இறைவனே அமுது அளித்ததாக அறியப்படுகிறது. எனவேதான் சிவபெருமான் உச்சிநாதர் என்றும் மத்யானேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். இக்கோயிலில், குழந்தைகளுக்கு முதல் சோறு ஊட்டினால், காலம் முழுமைக்கும் அந்தக் குழந்தையின் வாழ்வில் உணவுப் பிரச்சினை வராது என்பது ஐதீகம். உச்சிநாதர் கோயில் கிழக்கு நோக்கிய கோயிலாக அமைந்துள்ளது.
எதிரில் நீராழி மண்டபத்துடன் திருக்குளம் உள்ளது. ஐந்து நிலைகளுடன் காட்சி தரும் ராஜகோபுரத்தைக் கடந்து உட்சென்றால் கோஷ்டத்தில் நர்த்தன விநாயகர், தக்ஷிணாமூர்த்தி, லிங்கோத்பவர், அஷ்டபுஜ துர்கை, பிரம்மதேவர், பிரகாரத்தில் சுப்பிரமணியர், பைரவர், பஞ்சலிங்கங்கள், சனி பகவான், சூரியன் - சந்திரன் ஆகியோருக்கு சந்நிதிகள் உள்ளன. ஒரே பிரகார வலம் முடித்து முன்மண்டபம் சென்றால் வலதுபுறம் நவக்கிரக சந்நிதியும் பள்ளியறையும் உள்ளன. துவாரபாலகரை வணங்கி வாயிலைக் கடந்தால் வலதுபுறம் கனகாம்பாள் சந்நிதி உள்ளது.
தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் அம்மையின் பெயரால் இக்கோயில் அழைக்கப்படுகிறது. கனகம் என்றால் தங்கம் என்று ஒரு பொருள் உண்டு. தங்கம் வாங்க முடியாமல் திருமணத் தடை உள்ளவர்கள், இந்த கோயிலில் அருள்பாலிக்கும் கனகாம்பிகையை வழிபட்டால் உடனடியாக திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை.
சபையில் ஆனந்த தாண்டவர் சிவகாமியுடன் தரிசனம் தருகிறார். ‘விருத்தனாகி வெண்ணீறு பூசிய கருத்தனார் கனலாட்டு உகந்தவர் நிருத்தனார் நெல்வாயில் மேவிய ஒருத்தனார் எமது உச்சியாரே’ என்று ஆளுடையப்பிள்ளை பாடிய மூலவர், சுயம்பு லிங்கத் திருமேனியாக உயரமும் பருமனும் குறைந்த அமைப்புடன் உள்ளார்.
சதுரபீடம் சுற்றளவில் சிறியதாக உள்ளது. கிழக்கு நோக்கி சிவபெருமான் அருள்பாலிக்கிறார். சிவபெருமான் அகத்தியருக்கு காட்சி தந்த தலங்களில் இதுவும் ஒன்று. சிவலிங்கத்தின் பின்புறம் சிவபெருமான் - பார்வதி திருமணக் கோலத்தில் அருள்பாலிக்கின்றனர்.
முன்மண்டபத்தில் நந்தியைச் சுற்றியுள்ள முன், பின் இரு தூண்களில் நால்வர் சிற்பங்கள் உள்ளன. தினமும் ஐந்து கால வழிபாடுகள் நடைபெறுகின்றன. வைகாசி விசாகத்தில் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு தனிச்சிறப்பு பெற்றதாக அமைந்துள்ளது. இக்கோயிலில் கொடி மரம் கிடையாது திருவிழாவும் இல்லை.
கருணைச் சனி: பிரகாரத்தில் தனி சந்நிதியில் உள்ள சனி பகவானைப் பற்றிய ஒரு சுவையான கதையும் உள்ளது. திருஞான சம்பந்தருடன் வந்த சிவனடியார் ஒருவருக்கு சனிதசை தொடங்குவதால் அவரை சனிபகவான் பிடிக்க வந்தார். அப்போது தனக்கு பசியாக உள்ளது என்றும், சாப்பிட்டுவிட்டு வருவதாகவும் அவர் சனிபகவானிடம் வேண்ட, அவரும் கருணையுடன் சிவனடியாரை கோயிலுக்குள் அனுப்பினார். திருஞானசம்பந்தரின் திருமணம் முடிந்தவுடன் அடியார்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு, “நல்லூர் பெருமணம்” என்ற பதிகத்தைப் பாடியபடி கோயிலுக்குள் நுழைந்தவுடன், ஈசன் அருளால் கருவறையில் ஒரு ஜோதி தோன்றியது.
அப்போது சம்பந்தப் பெருமான் “காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி” என்னும் பஞ்சாக்ஷரப் பதிகத்தை பாடினார். அடியார்கள் அனைவரையும் அந்த ஜோதியில் கலக்கச் செய்தார். சனிபகவான் பிடிக்க வந்த அன்பரும் அப்படியே சம்பந்தப் பெருமானுடன் சிவலோகம் அடைந்து விடுகிறார். எனவே இன்றும் பிரகாரத்தில் சனி பகவான் சிவனடியாருக்காக காத்திருப்பதாக கூறப்படுகிறது. கருணைச் சனியாக இத்தலத்தில் சனி பகவான் எழுந்தருளியுள்ளார்.
அமைவிடம்: சிதம்பரம் - கவரப்பட்டு சாலையில் 5 கிமீ தூரத்திலுள்ள சிவபுரி என்ற ஊரில் உச்சிநாதர் கோயில் உள்ளது.