

மதுரை மாவட்டம், தென்கரையில் உள்ள ஸ்ரீ மூலநாதர் கோயில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்று அம்சங்களையும் கொண்ட தலமாக விளங்குகிறது. கிருதுமால் நதியின் தென்கரையில் அமையப் பெற்றதால், இவ்வூர் தென்கரை என்று அழைக்கப்படுகிறது.
முற்காலப் பாண்டியர், சோழர், பிற்காலப் பாண்டியர், நாயக்கர் என பல்வேறு மன்னர்களின் ஆட்சியில் (கிபி7-ம் நூற்றாண்டில் இருந்து 17-ம் நூற்றாண்டு வரை) மதுரை மாவட்டத்தில் நீர் மேலாண்மை செழிக்கவும், ஆன்மிகம்தழைக்கவும் அரிய பெரிய திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தென்கரையைப் பற்றிய புராண வரலாற்றை, ‘பில்வாரண்ய மகாத்மியம்’ என்ற நூல் மூலம் அறியலாம்.
நந்திதேவரின் சீடரான மூலன் தென்கரைக்கு வந்து தவம் புரிந்து சிவபெருமானின் தரிசனம் கண்டார். மாலாங்கன் என்ற அரசகுமாரன் தில்லையம்பதியில் அரன் ஆனந்தக் கூத்தாட, கோயிலும், ஆயிரங்கால் மண்டபமும் அமைத்தான். இங்குள்ள சிவகங்கை தீர்த்தத்தில் நீராடியதால், அவனைப் பீடித்தநோயில் இருந்து அவன் விடுபட்டான்.சோழன் தலைக்கொண்ட கோவீரபாண்டியனுக்கு ஏற்பட்ட நோயும் இங்குள்ள தீர்த்தக் குளத்தில் நீராடியபின் விலகியது. இந்த மன்னனே கி.பி.946-ல் சிவபெருமானுக்கும், திருமாலுக்கும் 2 கற்கோயில்களை இங்கு கட்டி வைத்தான்.
திருமாலுக்கு எடுக்கப்பட்ட கோயில் வீரகேரள விண்ணகரம் என்ற பெயரில் புகழ் மிகுந்து விளங்கியதை இங்குள்ள மாமன்னன் ராஜராஜசோழனின் கல்வெட்டால் அறிய முடிகிறது. அதே வேளையில் மூலநாத சுவாமி கோயில் வெவ்வேறு காலகட்டங்களில் பல திருப்பணிகளைக் கண்டு வளர்ச்சியடைந்தது. குறிப்பிடத்தக்க அம்சமாக அன்னை அகிலாண்டேஸ்வரி இத்தல தீர்த்தக் குள பொற்றாமரையில் கன்னியாகத் தவம் செய்து மூலநாதரை கரம் பிடித்தார்.
இந்த புராண சம்பவத்தால் சுபகாரியங்களை இக்கோயிலில் வைத்துநடத்துவதை சுற்று வட்டார மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். வில்வவன ஷேத்திரத்தில் கோயில் கட்டப்பட்டதால் தொன்று தொட்டு இங்கு வில்வமே தல விருட்சமாக உள்ளது. இங்கு அருள்பாலிக்கும் மூலநாதரிடம் சனகாதி முனிவர்கள் சைவ ஆகமநெறிகள் மற்றும் தத்துவங்களை கற்கும்பொருட்டு இத்தலத்தில் வந்து தங்கியிருந்தனர். அதனால், இத்தலத்துக்கு சனகாபுரி என்றொரு பெயரும் உண்டு.
ஒரு சமயம் கயிலைமலையில் சிவபெருமானுடன் வீற்றிருந்த உமையம்மை அவரைப் பார்த்து, “பூலோகத்தில் மனிதர்கள் பலரும் வேத நெறிகளில் சொல்லப்பட்ட நியமங்களை மறந்து தன்னிச்சைப்படி மனம்போன போக்கில் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் நற்பேற்றை அடையும் பொருட்டு கர்மா முதலான சன்மார்க்கங்களை அவர்களுக்கு எடுத்துச் சொல்லி அவர்கள் நற்கதி அடையும் வழிக்கு கொண்டு வர பூவுலகுக்கு ஒருவரை அனுப்பி வைக்க வேண்டும்’ என்றாள்.
தேவியின் இந்த வேண்டுகோளை ஏற்ற இறைவன் நந்திதேவரை அழைத்து, “உன் சீடனான மூலனைபூவுலகுக்கு அனுப்பி வைப்பாயாக’ என்றார். நந்திதேவரும் அவ்வாறே செய்தார். உடனே மூலனும் பூலோகத்துக்கு கிளம்பி பில்வாரண்யத்தை அடைந்தார். அங்கு மாடு மேய்ப்பவன் ஒருவன் பாம்பால் தீண்டப்பட்டு உயிரிழந்து கிடப்பதைக் கண்டார். மூலனும் அவனது உடலில் தன் உயிரைப் புகுத்தி அவ்வனத்தில் அவனது உருவில் மாடுகளை மேய்த்து வாழ்க்கை நடத்தி வந்தார்.
மாடு மேய்த்து சிலகாலம் தன் வாழ்வை நடத்திய மூலன் பின்னர் வில்வ வனத்தில் ஓர் இடத்தில் அமர்ந்து கடும் தவம் செய்யத் தொடங்கினார். மூலனின் தவத்தை சோதிக்க எண்ணிய சிவபெருமான், அவர் முன்பு மனித உருவில் தோன்றி யாசகம் கேட்டார். தான் இல்லறத்தான் இல்லை என்பதால்தன்னால் உணவளிக்க இயலாது என்றுமூலன் கூறுகிறார்.
அதை ஏற்க மறுத்த சிவபெருமான், வேறு எங்காவது யாசகம் பெற்று, தனக்கு உணவளிக்க வேண்டும் என்று மூலனை வற்புறுத்துகிறார். அதன்படி மூலன் ஊருக்குள் சென்று யாசகம் கேட்கச் செல்கிறார். யாசகம் பெற்று தனது இருப்பிடம் வந்து பார்த்தால், அங்கு யாசகம் கேட்டவரைக் காணவில்லை. மிகுந்த வருத்தத்துடன் மீண்டும் தியானத்தில் அமர்கிறார் மூலன். அப்போது தன்னிடம் யாசகம் கேட்டு வந்தது சிவபெருமான் என்பதை உணர்ந்தார்.
அந்த சமயத்தில் அவரது பாதச் சுவடுகளைக் காண்கிறார். அவற்றைப் பின் தொடர்ந்தார். வெகுதூரம் கடந்த பின் நிறைவாக தில்லைவனத்தில் அத்திருவடிகள் இரண்டும் சேரக் கண்டார். அங்கேயே தங்கி இறைவனைக் காணும்வரையில் தவம் புரிவதாக உறுதி கொள்கிறார். மூலனின் தவத்தின் தன்மையை சூரியன், வருணன், வாயு ஆகியோர் சோதிக்கவும் செய்தனர். என்றாலும் மூலன் தன் தவத்திலிருந்து சிறிதும் மனம் தளரவில்லை.
ஈசன் இதைக் கண்டு மூலனைச் சுற்றி மண்ணால் குகை ஒன்றை உருவாக்கினார். அதனுள் அமர்ந்தபடி மூலன் பல காலம் தவம் புரிந்தார். நிறைவில் சிவபெருமான் உமையம்மையுடன் ரிஷபத்தில் எழுந்தருளி மூலனுக்கு காட்சி அருளினார். மேலும் அவரது தவத்தை மெச்சி, அவரை தன் துவாரபாலகராக ஆக்கப் போகும் பேற்றைஅருளினார். அப்போது சிவபெருமான்மூலனைப் பார்த்து, “பக்தனே.. தேவியின் விருப்பத்தை நிறைவேற்றும் விதமாக பூலோகத்தில் பில்வாரண்யத்தில் இருந்து, உன்னைத் தேடி வரும் மக்களுக்கு நல்வழி காட்டுவாயாக” என்று திருவாய் மலர்ந்தார்.
ஈசனின் திருவுள்ளப்படி, மூலன் தினமும் ஈசனை வழிபட்டு வந்தார். இவ்வாறு, ஆதியில் மூலன் இத்தல ஈசனை வணங்கி நற்கதி அடைந்ததால் இத்தல மூலவருக்கு ஸ்ரீமூலநாதர் என்ற காரணப் பெயர் உண்டானது. சில காலம் அங்கு தங்கியிருந்த மூலன் மீண்டும் கயிலைமலைக்குச் சென்றார்.
ஒருசமயம் ஆணவம் கொண்ட விந்தியமலை, சூரியன், சந்திரன் ஆகியஇருவரின் வழிகளை தடை செய்யும் அளவுக்கு உயர்ந்து நின்றது. இதுதொடர்பாக தேவர்கள், முனிவர்கள் அனைவரும் அகத்திய முனிவரிடம் முறையிட்டனர். அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கிய அகத்தியர், விந்தியமலையை அமிழ்த்தி இயல்பு நிலைக்கு திரும்பச் செய்தார். தமிழின் மேன்மைகளை முழுமையாக உலகுக்கு உணர்த்தும் பேறு, தனக்கு கிடைக்க வேண்டும் என்று அகத்திய முனிவர் ஸ்ரீமூலநாதரிடம் வேண்ட, அவரும் அவ்வாறே அருளினார்.
கந்தர்வர்களுக்கு அரசரான சித்ராங்கதன் இத்தலத்தில் வழிபாடு செய்ததாக அறியப்படுகிறது. பல்வேறு சிறப்புகளைக் கொண்ட இத்தலத்தில் வழிபாடு செய்தால், அனைத்து மனக்குறைகளும் தீரும் என்று கூறப்படுகிறது.
அமைவிடம்: மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து சோழவந்தானுக்கு அடிக்கடி பேருந்துகள் உள்ளன. பயண தூரம் 22கிமீ. சோழவந்தானில் இறங்கி ஒரு பர்லாங் நடந்து சென்றால் தென்கரை கோயிலை சென்றடையலாம்.