

வைணவ சமய ஆச்சாரியர்களுள் ‘தூப்புல் பிள்ளை’ என்று அழைக்கப்படும் ஸ்ரீமத் வேதாந்த தேசிகர் (வேங்கடநாதன்) மிகவும் குறிப்பிடத்தக்கவர். ராமானுஜரின் சம்பிரதாயங்களைப் பின்பற்றி, தமிழ், சம்ஸ்கிருதம், ப்ராக்ருதம், மணிப்பிரவாள மொழிகளில் 124 நூல்கள் எழுதி வைணவ நெறியைப் பரப்பினார்.
ஒருசமயம் காஞ்சிபுரம் எனும் தலத்தில் உள்ள அத்திகிரி என்று அழைக்கப்படும் வேழமலையில் நான்முகன் அஸ்வமேக யாகம் செய்ததன் பலனாக, திருமால் ‘வரதர்’ எனும் திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இத்தலத்துக்கு அருகே உள்ள திருத்தண்கா (ஸ்ரீதூப்புல்) தலத்தில் அனைத்து சாஸ்திரங்களையும் கற்றுணர்ந்த அனந்தாசாரியார் (அனந்தசூரி) என்ற வைணவர் வசித்து வந்தார். இவர் ரங்கராஜ அப்புள்ளாரின் சகோதரி தோதாரம்பையை மணந்து இனிய இல்லறம் நடத்தி வந்தார்.
நீண்ட நாட்களாக பிள்ளைப் பேறு கிட்டாததால், இத்தம்பதி, பெரிதும் வருந்தினர். அப்போதுஅவர்கள் கனவில் தோன்றிய திருமலை வேங்கடமுடையான், அவர்களை திருமலைக்கு வருமாறு அழைத்தார். அதன்படி அவர்களும் திருமலை சென்று வேங்கடவனை வேண்டுகின்றனர். வேங்கடவனின் அருளால், அனந்தாசாரியார் – தோதாரம்பை தம்பதியின் மகனாக விபவ வருடம் புரட்டாசி மாதம் திருவோண நட்சத்திரத்தில் (1268-ம் ஆண்டு) திருமலை வேங்கடவனின் மணியின் அம்சமாக வேங்கடநாதன் அவதரித்தார்.
ப்யாசம் செய்தனர். அப்புள்ளார் தனது மருமகனை அழைத்துக் கொண்டு தனது ஆச்சாரியர் வாத்ஸ்ய வரதகுரு என்று அழைக்கப்படும் நடாதூர் அம்மாளின் காலட்சேபத்துக்கு (உபன்யாசம்) செல்கிறார். இவர்களைக் கண்டதும் நடாதூர் அம்மாள் தனது உபன்யாசத்தை நிறுத்தி விட்டு இவர்களை நலம் விசாரிக்கிறார். பின்னர், உபன்யாசத்தைத் தொடர முற்பட்டபோது, அவரும் அவரதுசீடர்களும் விட்ட இடம் தெரியாமல் திகைக்கின்றனர். அப்போது வேங்கடநாதன், அவருக்கு அடியெடுத்துக் கொடுக்கிறார்.
வேங்கடநாதனை தன் மடிமீது அமர்த்தி, “இவரே நமது சித்தாந்தத்தை நிலை நிறுத்தும் மகான். இவருக்கு அனைத்து உபதேசங்களையும் நீரே செய்விக்க வேண்டும்” என்று அப்புள்ளாருக்கு கட்டளையிட்டார் நடாதூர் அம்மாள்.
வேங்கடநாதனுக்கு ஏழாம் வயதில் உபநயனம் செய்விக்கப்பட்டது. தனது தந்தையிடம் கல்விபயிலத் தொடங்கிய வேங்கடநாதன், நடாதூர் அம்மாளின் கட்டளைப்படி, வேதாந்த க்ரந்தங்களையும், மந்திரங்கள் மற்றும் சாஸ்திரங்களையும் அப்புள்ளாரிடம் கற்றார். இருபது வயதுக்குள் அனைத்து கலைகளிலும் நிறைந்த பாண்டித்யம் பெற்றார். தக்க பருவத்தில் திருமங்கை எனும் பெண்ணை விவாகம் செய்து கொண்டார்.
தனது மருமகனுக்கு மேலும் மேன்மை பெருக, அப்புள்ளார் அவருக்கு கருட மந்திரத்தை உபதேசம்செய்தார். தனக்கு, தனது பாட்டனார் வழியாக வந்தராமானுஜரின் பாதுகைகளையும் வேங்கடநாதனுக்கு கொடுத்தார், பகவத் பாகவத ஆச்சார்ய கைங்கர்யங்களை செய்து வந்த வேங்கடநாதன், பலருக்கும் சாஸ்திரங்களை உபதேசித்துவந்தார்.
அப்புள்ளார் இறைவனடி சேர்ந்த பின்னர், வேங்கடநாதன் திருவஹீந்திரபுரம் சென்று கருடநதியில் நீராடி செங்கமல நாச்சியார் சமேத தேவநாதனை வணங்கினார். அப்போது ஓர் அரச மரத்தடியில் அமர்ந்து கருட மந்திரத்தை உச்சரித்தபோது, கருடன் அவர்முன் தோன்றி, ஹயக்ரீவ மந்திரத்தை உபதேசித்து, ஆராதனை செய்வதற்காக ஒரு ஹயக்ரீவ மூர்த்தியையும் அருளினார்.
ஹயக்ரீவ மந்திரத்தை தினமும் உச்சரித்ததன் பலனாகஹயக்ரீவர், வேங்கடநாதனுக்கு அனைத்து வித்யைகளையும் அருளினார். சிலகாலம் திருவஹீந்திரபுரத்திலேயே தங்கியிருந்து தேவநாதனை மங்களாசாசனம் செய்தபடி பல ஸ்தோத்திரங்களை இயற்றினார், ஹயக்ரீவ ஸ்தோத்திரம், கருட பஞ்சாசத், தேவநாயக பஞ்சாசத்,கோபால விம்சதி, ரகுவீர கத்யம் முதலியவற்றை சம்ஸ்கிருத மொழியில் அருளினார். ப்ராக்ருத மொழியில் அச்யுத சதகம். அருளினார்.
தமிழில் மும்மணிக்கோவை, கந்துப்பா, கழற்பா, அம்மானைபா, ஊசற்பா, ஏசற்பா, நவரத்னமாலை உள்ளிட்ட 9 ஸ்தோத்திரங்களை அருளினார். மேலும் காவிய, நாடக, கத்ய (உரைநடை), ரஹஸ்ய, வேதாந்த, வியாக்கியானம் (விளக்கவுரை), அனுஷ்டான நூல்களை அருளியுள்ளார். மேலும் காஞ்சி திரும்பியதும், வரதராஜப் பெருமாள் குறித்த பல ஸ்தோத்திரங்களையும் தமிழ் பிரபந்தங்களையும் இயற்றினார்.
அவற்றுள் திருச்சின்னமாலை என்ற பிரபந்தத்தை செவியுற்ற வரதர், தன் திருச்சின்னத்தையே பரிசளித்தார். அதன் நினைவாக, இன்றும் வரதர் சந்நிதியில் ஒரே ஒரு திருச்சின்னமே ஒலிக்கப்படுகிறது. மற்றொரு திருச்சின்னம் தூப்புல் தேசிகன் சந்நிதியில் (திருத்தண்கா விளக்கொளி பெருமாள் கோயில்) ஒலிக்கப்படுகிறது.
இமயம் முதல் குமரி வரை திவ்யதேச யாத்திரை மேற்கொண்டு, நதிகள், ஊர்கள் குறித்த விவரங்களையும் நூல்களாக இயற்றினார். தயா சதகம், வைராக்யபஞ்சகம், சுதர்ஸனாஷ்டகம், யதிராஜ சப்ததி, சங்கல்ப சூர்யோதயம் (நாடகம்), யாதவாப்யுதயம் (காவியம்), கருட தண்டகம் (ஸ்லோகம்) உள்ளிட்ட நூல்களை இயற்றினார்.
தனது திருமணத்துக்காக உதவி கேட்டு வந்த ஒருவருக்காக, பெருந்தேவித் தாயார் மீது ‘ஸ்ரீஸ்துதி’ ஸ்லோகம் பாடி தங்க மழையை வரவழைத்து, அவருக்கு உதவினார்.
திருவத்யயன உற்சவத்தை முன்பு போல் ஏற்பாடு செய்து ஸ்ரீரங்கநாயகி தாயாரையும், ஸ்ரீரங்கநாதரையும் வணங்கியபோது, ரங்கநாதர் வேங்கடநாதனுக்கு ‘வேதாந்தாச்சார்யர்’ என்ற பட்டத்தையும் ரங்கநாச்சியார் ‘ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ரர்’ என்ற பட்டத்தையும் அளித்தனர். மேலும் பல காலம் அங்கு இருந்து பல நூல்களுக்கு வியாக்கியானங்களை இயற்றினார். இதனால் மகிழ்ச்சி அடைந்த சுதர்ஸனசூரி முதலிய பெரியோர், இவருக்கு ‘கவிதார்க்கிக சிம்மம்’ என்ற பட்டத்தை அளித்தனர்.
திருவஹீந்திரபுரத்தில் தனது சீடர்களுக்கு வேதாந்த விஷயங்களை உபதேசித்துக் கொண்டிருந்தபோது, ஒருவர் இவரிடம் வந்து கோணலான கற்களைக் கொடுத்து கிணறு அமைக்க வேண்டினார். வேங்கடநாதன் சற்றும் தளராமல் மிக நேர்த்தியாக ஒரு கிணற்றைக் கட்டி முடித்தார். இன்றும் அந்தக் கிணற்றை தேசிகன் மாளிகையில் காணலாம்.
வைணவ பண்டிதர் ஒருவர், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சந்நிதியில், ஓரிரவில் ஓராயிரம் ஸ்லோகம் இயற்றுபவரே கவிதார்க்கிக சிம்மம் என்று கூறி வேங்கடநாதனை வாதப்போருக்கு அழைத்தார். அதன்படி ஓரிரவில் திருவரங்கன் பாதுகைகளின் மேன்மையைப் பற்றி ‘பாதுகா சஹஸ்ரம்’ என்ற பெயரில் 1,008 ஸ்லோகங்களை இயற்றினார் வேங்கடநாதன். வாதத்துக்கு அழைத்தவர் 300 ஸ்லோகங்களை மட்டுமே இயற்றி, வேங்கடநாதனிடம் சரண் புகுந்தார்.
அனைவருக்கும் புரியும்படியாக ராமானுஜ சித்தாந்தத்தை ‘ஸ்ரீமத் ரஹஸ்ய த்ரய ஸாரம்’ என்ற நூல் வடிவில் கொண்டுவந்தார். ஆழ்வார்களின் அவதார நாள், ஊர், அவர்கள் இயற்றிய பிரபந்தங்களின் விவரங்களை வரிசைப்படுத்தி ‘ப்ரபந்த சாரம்’ என்ற நூலையும் அருளிச் செய்தார்.
சுவாமி தேசிகரின் குமாரர் வரதாச்சாரியரும் சிறந்த மேதாவியாகத் திகழ்ந்தார். வரதாச்சாரியர், பேரருளாள ஜீயர், வெண்ணெய்கூத்த ஜீயர், ப்ரபாகர ஜீயர், விஞ்சிமூர் ராமானுஜாச்சாரியார், பிள்ளை லோகாச்சார்யார் ஆகியோர் சுவாமி தேசிகரின் சீடர்களாவர்.
தம்முடைய விக்கிரஹத்தை தானே செய்ய விரும்பியதால், ஒரு சிற்பியை அழைத்து, அந்த விக்கிரகத்தை வைக்க ஒரு பீடத்தை செய்யச் சொன்னார். சுவாமி தேசிகரின் கனவில் தோன்றி, ரங்கநாதரின் கட்டளைப்படி, வலதுகையில் ஞான முத்திரையும் இடது கையில் ஸ்ரீகோசமும் (நூல்) இருக்கும்படியாக விக்கிரகத்தை அமைத்தார். சிற்பி செய்த பீடத்தில் குறையிருந்ததால், சுவாமி தேசிகரே அதை செய்து முடித்தார். இந்த விக்கிரகத்தையும் திருவஹீந்திரபுரத்தில் சேவிக்கலாம்.
தன்னுடைய 27-ம் வயதில் வைணவ குரு என்ற நிலையை அடைந்த சுவாமி தேசிகர், நிறைவில் தன் குமாரருடன் திருவரங்கம் வந்தடைந்தார். தனது 101-வது வயதில் சௌம்ய ஆண்டு (1369), கார்த்திகை மாதம் பௌர்ணமி தினத்தில் ஆச்சாரியன் திருவடி அடைந்தார்.