

கதிராமங்கலத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் வனதுர்கை, மிருகசீரிஷ நட்சத்திரத்துக்கு அதிதேவதையாக போற்றப்படுகிறாள். வழக்கமாக சிம்மவாகினியாகவோ அல்லது மகிஷனை வதைக்கும் கோலத்துடனோ அருள்பாலிக்கும் துர்காதேவி, இத்தலத்தில் மகாலட்சுமி அம்சமாக தாமரை மலரில் எழுந்தருளியுள்ளது தனிச்சிறப்பு.
மும்பெரும் தேவர்களான சிவபெருமான், பிரம்மதேவர்,திருமால் மற்றும் தேவர்களுக்கு அசுரர்கள் எப்போதும் இன்னல்கள் அளித்து வந்தனர். மேலும், ஈரெழு உலகங்களையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். இதனால் மும்மூர்த்திகளும் தேவர்களும் ஆதிபராசக்தியின் அருள் வேண்டி மிகப் பெரிய யாகம் செய்தனர்.
அந்த யாக குண்டத்தில் தேவி எழுந்தருளி, ‘அஞ்சற்க விரைவில் மகிஷன், சும்பன், நிசும்பன், பண்டன் ஆகியோர் வீழ்த்தப்படுவர்’ என்று கூறி மறைந்தாள். சொல்லியபடியே அன்னை பராசக்தி பூவுலகில் பர்வத சாரலில் இளம் பெண்ணாக சஞ்சரிக்கிறாள். அம்பிகை தேவாதி தேவர்களின் குறையை தீர்த்த பின்னர் அவள் ஏகாந்தியாக சிவமல்லிகா என்ற தலத்தில் தங்கி உலக நலன் கருதி தவம் செய்ய தொடங்கினாள்.அந்த தலமே தற்போது கதிராமங்கலம் என்று அழைக்கப்படுகிறது.
தொடக்க காலத்தில் துர்கை அம்மன் சிலைக்கு மேல் கூரை எதுவும் இல்லாமல் திறந்த வெளியாக இருந்துள்ளது. ஆனால் காலப்போக்கில் அம்மனுக்கு மேல் தனிவிமானம் கட்டப்பட்டுள்ளது. மேலும் வெயிலும், மழையும் அம்மனின் மேல்விழும்படியாக அம்மனின் தலைக்குமேல் ஒருசிறு துவாரம் உள்ளது.இதன் வழியாகத்தான் அம்பாள் தினமும்காசிக்கு சென்றுவருவதாக ஐதீகம். இதனால் இவளுக்கு ஆகாச துர்கை என்றபெயரும் உண்டு.
இந்த அம்மனின் சிலை அகத்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு மிருகண்டு மகரிஷியால் பூஜிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ராகுவுக்கு அதி தேவதைதுர்கை என்பதால் அம்பாளின் திருவுருவம் அப்படியே அமைந்துள்ளது. முன்பக்கம் அம்பாள் உருவத்தை போலவும் பின்பக்கம் பாம்பு படம் எடுத்ததுபோலவும் அமைந்துள்ளது. ஆகம விதிப்படி விநாயகர்சந்நிதி இல்லாமல் எந்த ஒரு கோயிலும் அமைவதில்லை.
ஆனால் இங்கே விநாயகர் அம்பாளுடனே கலந்திருப்பதாக ஐதீகம். இந்த துர்கையை ராகு கால துர்கை என்பர்.இவள் தனது வலது மேற்கரத்தில் பிரத்யேக சக்கரம், இடதுமேற்கரத்தில் அபயம் கூறும் சங்கு,வலது கீழ்க்கரத்தில் அபய வரத ஹஸ்தம், இடது கீழ்க்கரம் மூர்த்தி விகாஸ்தம் (இடுப்பில் கை வைத்த எழிலான பாவனையை கொண்டு) தாமரை பீடத்தில் நின்ற கோலத்தில் அருளுகிறாள்.
ஒரு சமயம் அகத்தியர் அம்மையப்பனின் திருமண கோலத்தை காண வேதாரண்யத்துக்கு செல்லும் வழியில், விந்தியன் என்ற அசுரன் ஆகாயம், பூமி அலாவி நின்று அகத்தியருக்கு வழிவிட மறுத்தான். அகத்தியர் விந்தியனை சம்ஹாரம் செய்ய தனக்கு சக்தி வேண்டும் என அவ்விடத்திலேயே தங்கி இந்த துர்கையை உபாசித்து இந்த அன்னையின் அருளால் விந்தியனை சம்ஹரித்து பின்னர் சிவபெருமானின் திருமண கோலம் காண சென்றார்.
அகத்தியர் இவ்வனத்தில் தங்கி துர்கையின் அருள் பெற்றதால் இவ்வன்னையை பைந்தமிழ் பாடலால் போற்றிப் புகழ்ந்தார். ‘வாழ்வித்த அன்னை வனதுர்கா’ என போற்றினார். எனவே இத்தலத்தில் உள்ள துர்கைக்கு வன துர்கா என்ற திருநாமம் ஏற்பட்டது. மார்க்கண்டேயனுக்கு 16 வயது ஆனவுடன் தந்தை மிருகண்டு முனிவருக்கு புத்திர சோகம் ஏற்படுகிறது. பல தலங்களை தரிசித்து வந்த இவர் இத்தலத்தில் அன்னை துர்காதேவி மோனதவம் புரியும் காட்சியை கண்டார். உடல் நலனுக்கு தவம் புரியும் அன்னையிடமே தம் மகனின்நலனுக்கு அருள் வேண்டுவோம் என்று தெளிந்து அவரிடம் அபயம் கேட்டு உபாசித்தார்.
அன்னை துர்காவும் மனம் கனிந்து, “முனிவரே உன் புதல்வன் சிரஞ்சீவியாக இருப்பான், அந்தபெருமையை அவன் ஈசனால் மட்டுமே பெற வேண்டும் என்பது விதி. எனவே நீ உன் மகனை திருக்கடவூர் அழைத்துச் சென்று அமிர்தகடேசுவரரை பூசித்து அவரைப் பற்றிக் கொள்ள செய்க. அவர் அருளால் உன் மகன் என்றும் 16 வயதினனாக, சிரஞ்சீவியாக இருப்பான்” எனக் கூறி அருள்பாலித்தாள். இவ்விதமே மார்க்கண்டேயனும் என்றும் சிரஞ்சீவியானான். மனமகிழ்ந்த மிருகண்டு முனிவரும் அன்னையை வாழ்த்திப் போற்றினார்.
இத்தலத்தின் அருகில் கவிச்சக்கரவர்த்தி கம்பர் வாழ்ந்த தேரழுந்தூர் உள்ளது. கல்வியில் சிறந்த கம்பர் இந்த அன்னையை வழிபடாமல் எந்த செயலையும் தொடங்குவதில்லை. ஒருநாள் மழைக் காலத்தில் கம்பர் வீட்டு கூரை சிதைந்தது. கம்பர் அம்பாளை நினைத்து மனம் உருகி அம்மாஉன் அருள் மழை என்றும் என்னைக் காக்கும்! எனக் கூறி படுத்து உறங்கி விட்டார். காலை விழித்தெழுந்து பார்த்தபோது அவர் வீட்டுக்கு நெற்கதிர்களால் கூரை வேயப்பட்டிருந்ததை கண்டு மனம் உருகி கதிர் தேவி, கதிர் வேய்ந்த மங்கல நாயகி எனப் பாடினார். இப்படி கதிர் வேய்ந்த மங்கலமே நாளடைவில் கதிராமங்கலம் என மருவி உள்ளது.
இந்த கோயிலில் மூன்று நிலை, ஐந்து கலசங்களுடன் கூடிய கிழக்கு பார்த்த ராஜகோபுரமும் அம்மனுக்கு மேல் ஒருகலசத்துடன் கூடிய ஏகதள விமானமும் அமைந்துள்ளன. கோயிலுக்கு எதிரில் கோயில் தீர்த்தமான தாமரை தடாகம் உள்ளது. கோயிலுக்கு வடக்கே யாகசாலையும், அன்னதான கூடமும் அமைந்துள்ளது.
அம்மனுக்கு எதிரில்அம்மனின் சிம்ம வாகனம் அமர்ந்த நிலையில் உள்ளது.அம்மனின் கருவறை நுழைவு வாசலுக்கு மேல் சைலபுத்ரி, பிரம்மசாரிணி, சண்டகண்டீ, கூஷ்மாண்டீ, ஸ்கந்தமாதா, சித்திதாயிணி, காத்யாயிணி, காலராத்ரி, மஹாகவுரி ஆகியோரது விக்கிரகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நுழைவு வாசலின் இருபுறமும் துவார பாலகிகள் உள்ளனர்.
அனைத்து கிழமைகளிலும் வரக்கூடிய ராகு காலத்தின் போது இவளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் வனதுர்கைக்கெனஇங்கு மட்டுமே தனி கோயில் அமைந்துள்ளது. அர்ச்சனை செய்யும்போது அம்பாளின் வலது கரத்தில் உள்ளங்கையில் வியர்வை முத்துக்கள் வெளிப்படுவது சிறப்பு. அமைவிடம்: தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து 20 கிமீ தொலைவிலும், மயிலாடுதுறை குத்தாலத்தில்இருந்து 5 கிமீ தொலைவிலும் உள்ளது கதிராமங்கலம்.