

ஜீவாத்மா பரமாத்மாவோடு இணையும் தத்துவத்தை விளக்குவதே சூடிக் கொடுத்த சுடர்கொடி ஆண்டாளின் பக்திபூர்வமான வரலாறு. நாராயணனையே தம் மணாளனாக வரித்துக்கொண்டு ஆண்டாள் திருப்பாவை, நாச்சியார் திருமொழி பாடல்களின் வழியாக சரணாகதி தத்துவத்தை மக்களிடம் கொண்டுசேர்த்தார்.
`மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்' என்று தொடங்கும் பாசுரத்தின் மூலம் தன்னுடைய தோழிகளை துயில் எழுப்பி கண்ணனின்திருப்பாதம் சேவிக்கத் தயாராகச் சொல்லும் உத்தியோடு எழுதப்பட்ட பாடல்களின் அர்த்த கனமோ, வேதத்தில் சொல்லப்படும் கருத்துகளுக்கு ஒப்பானவை.
வைணவ மரபின் சாரமாகப் போற்றப்படும் ஆண்டாள், ரங்கமன்னாருடன் கைகோக்கும் வைபவத்தையே இந்த ஆண்டுக்கான நவராத்திரி கொலுவுக்கான கருப்பொருளாக்கி பார்ப்பவர்களை பக்திப் பரவசமாக்கியிருக்கிறது தெய்விகப் பொருள்களின் விற்பனையகமான தேஜஸ்.
இந்தியாவின் திருவிழாக்கள், எண் ஒன்பதின் சிறப்பு, தசாவதாரம் என பல தலைப்புகளில் ஒவ்வொரு ஆண்டும் வித்தியாசமான நவராத்திரி கொலுக்களை கடந்த 2011-ம் ஆண்டு முதல் வைத்து பக்தர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர் `தேஜஸ்' அமைப்பினர்.