முன்வினை பாவங்கள் தீர்க்கும் காஞ்சிபுரம் புண்ணிய கோட்டீஸ்வரர்

முன்வினை பாவங்கள் தீர்க்கும் காஞ்சிபுரம் புண்ணிய கோட்டீஸ்வரர்
Updated on
3 min read

காஞ்சிபுரத்தில் உள்ள புண்ணிய கோட்டீஸ்வரர் கோயில், முன்வினை பாவங்கள் தீர்க்கும் தலமாக போற்றப்படுகிறது. திருமால் சிவபெருமானை நோக்கி தவமிருந்து வரம் பெற்ற தலம் என்பதால், இத்தலம் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. ஒரு சமயம் திருமால் மேக உரு வம் கொண்டு சிவபெருமானை சுமந்தார். சிவபெருமான் மனமகிழ்ந்து திருமாலுக்கு வரம் அருள்வதாகத் தெரிவித்தார். உடனே திருமால், ஈரேழு உலகங்களையும் பிரம்மதேவரையும் தான் படைக்க வேண்டும் என்றும், அத்தகைய ஆற்றலை தனக்கு அருள வேண்டும் என்றும் சிவபெருமானை வேண்டினார்.

சப்த மோட்ச புரிகளில் ஒன்றாகவும், நகரங்களில் சிறந்ததாகவும் விளங்கும் காஞ்சியம்பதியில் சிவலிங்கம் ஒன்றை நிறுவி, வழிபட்டால் திருமாலின் கோரிக்கை நிறைவேறும் என்று சிவபெருமான் அருளினார். அதன்படி திருமால், காஞ்சி மாநகர் சென்று, தாமரை மலர்கள் பூத்துக் குலுங்கும் தடாகத்தை உருவாக்கி, தினமும் தாமரை மலர்களால் அர்ச்சித்து ஈசனை, ‘வரம் தா வரம் தா’ என்று அழைத்து வழிபட்டார்.

அப்போது ஒரு யானை திருமாலிடம் வந்து, அவருக்கு பணிவிடை செய்வதாகக் கூறியது. திருமாலும் அதற்கு சம்மதம் தெரிவித்தார். யானை தினமும், தடாகத்தில் இறங்கி பூக்களைப் பறித்து, திருமாலுக்கு உதவி புரிந்தது. ஒரு நாள் யானை தடாகத்தில் இறங்கி பூக்களைப் பறித்துக் கொண்டிருந்தபோது, நீரில் இருந்த முதலை, யானையின் காலைப் பற்றியது.

வலி தாங்காமல் யானை துடித்து, ‘ஆதி மூலமே’ என்று திருமாலை அழைத் தது. ஆபத்பாந்தவன், அநாதரட்சகன் என்று போற்றப்படும் பெருமாள் உடனே, கருடன் மீது எழுந்தருளி, முதலை மீது சக்ராயுதத்தை ஏவி, யானையைக் காத்தருளினார். ஒருநாள் சிவபெருமான் உமையா ளுடன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, காஞ்சியம்பதியில் தன்னை வழிபடும் திருமாலுக்கு காட்சி அருளினார்.

மேலும், ‘வரதா வரதா’ என்று அழைத்ததால், இனி வரதராஜன் என்ற பெயருடன் விளங்குவாய். பிரம்மதேவனையும் ஈரேழு உலகங்களையும் படைக்கும் ஆற்றலையும் பெறுவாய். தினமும் தாமரை மலர்களால் என்னை பூஜித்ததால் இனி ‘பத்மநாபன்’ என்றும் அழைக்கப்படுவாய்’ என்று சிவபெருமான் திருவாய் மலர்ந்தார்.

பெருமாள், அருகில் உள்ள இடத்தில் கோயில் கொண்டார். அக்கோயிலில் மலை போன்ற ஓரிடத்தில் நின்ற கோலத்தில் அருள்பாலித்தார். தன்னிடம் பக்தி கொண்ட யானையின் நினைவாக அந்த மலைக்கு ‘அத்திகிரி’ என்று பெயர் விளங்க வேண்டும் என்று சிவபெருமானிடம் பெருமாள் வேண்டினார். திருமால் மேக உருவம் கொண்டு ஈசனைத் தாங்கியதால், அக்காலம் ‘மேக வாகன கற்பம்’ என்ற பெயர் பெற்றது.

விஷ்ணு காஞ்சியில் (சின்ன காஞ்சி) புண்ணிய கோடி விமானத்தின் கீழ் வரதராஜரும், சிவ காஞ்சியில் (பெரிய காஞ்சி) ருத்ர கோடி விமானத்தின் கீழ் ஏகாம்பர நாதரும், காமகோடி விமானத்தின் கீழ் காமாட்சி அம்மனும் அருள்பாலிக்கின்றனர். காஞ்சிபுரம் செல்பவர்கள் சிவபெருமான், திருமால், அம்பாள் ஆகியோரை தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம். திருமால் வழிபட்ட சிவபெருமான், அங்கேயே கோயில் கொண்டார்.

அந்த இடத்துக்கு அருகே உள்ள தீர்த்தம், ‘புண்ணிய கோடி தீர்த்தம்’ என்று அழைக்கப்படுகிறது. இக்குளத்தில் நீராடி, சிவபெருமானை வழிபட்டால் அவரது புண்ணியங்கள் கோடியாகப் பெருகும் என்று காஞ்சி புராணம் உரைக்கிறது. இதையடுத்து இவ்விடத்தில் எழுந்தருளிய சிவபெருமான் புண்ணிய கோட்டீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.

குளக்கரை விநாயகரை வணங்கிவிட்டு கோயிலுக்குள் சென்றால், பெரிய மண்டபத்தில் உள்ள 26 தூண்களில் எண்ணற்ற சிற்பங்களைக் காணலாம். ஸ்ரீ புண்ணிய கோட்டீஸ்வரர் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். அம்பிகை புவனப் பூங்கோதை, புவனேஸ்வரி, தர்மசம்வர்த்தனி ஆகிய பெயர்களைத் தாங்கி தனி சந்நிதியில் அருள்பாலிக்கிறார்.

கோயிலுக்குள் தட்சிணாமூர்த்தி, சனி பகவான், நவக்கிரக மூர்த்திகள், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், நடராஜர், சமயக் குரவர் நால்வர், சப்த மாதாக்கள், கணபதி, பைரவர், ஆஞ்சநேயர், நவநீத கிருஷ்ணன் ஆகியோர் அருள் பாலிக்கின்றனர். கருவறையைச் சுற்றியுள்ள பஞ்ச கோட்டங்களில் நின்ற கோலத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, மஹா விஷ்ணு, விஷ்ணு துர்கை, பிரம்மதேவர் சந்நிதிகளை தரிசிக்கலாம். முன்வினைப் பாவங்கள் தீர, செய்த புண்ணியங்கள் கோடி மடங்காகப் பெருக இத்தலத்தில் வழிபட வேண்டும் என்பது ஐதீகம்.

இக்கோயில் 13-ம் நூற்றாண்டில் மூன்றாம் ராஜராஜனால் கட்டப்பட்டதாக அறியப்படுகிறது. பிறகு விஜயநகர அரச பரம்பரையில் வந்த கம்பண்ண உடையார் காலத்தில் திருப்பணிகள் செய்யப்பட்டிருக்கின்றன. கிபி 1913-ம் ஆண்டு முதல் 1926-ம் ஆண்டு வரை ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதத்தில் பிரம்மோற் சவம் நடைபெற்றுள்ளது. 2002-ம் ஆண்டுக்குப் பிறகு 13-05-2024 அன்று குடமுழுக்கு வைபவம் நடைபெற்றுள்ளது.

அமைவிடம்: காஞ்சிபுரம் வரதராஜர் கோயில் அருகே உள்ள செட்டித் தெரு சமீபம் புண்ணிய கோட்டீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in