நடமாடும் தெய்வத்தின் திவ்ய சரிதம்: நாடக வடிவில்

நடமாடும் தெய்வத்தின் திவ்ய சரிதம்: நாடக வடிவில்
Updated on
3 min read

இந்து தர்மத்தை காப்பதற்கான அவதாரமாக காஞ்சி காமகோடி பீடத்தின் 68-வது பீடாதிபதி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் போற்றப்படுகிறார். அனைவருக்கும் நல்வழி காட்டிய மகாஸ்வாமியின் திவ்ய சரிதத்தை ‘தெய்வத்துள் தெய்வம்’ என்ற மேடை நாடகமாக்கி, சென்னை எஸ்.எஸ்.இண்டர்நேஷனல் லைவ் நிறுவனத்தினர் அதில் வெற்றி பெற்றுள்ளனர்.

லாச்சாரம், பண்பாடு, சாஸ்திரங்கள், புராணங்கள் ஆகியவற்றை பாதுகாப்பதற்கு அமைப்புரீதியாக பக்தி உணர்வு அவசியமாகிறது. பக்தர்களின் குறைகளை இறைவனிடம் கொண்டு சேர்க்கும் ஒரு சாதாரண போஸ்ட்மேனாக தன்னை கூறிக் கொள்ளும் மகாஸ்வாமி, கிராமம் கிராமமாக சென்று கோ பூஜை, கஜ பூஜை, உபன்யாசம், ஆலய தரிசனம், இல்லத்தில் இறை வழிபாடு ஆகியவற்றின் அவசியத்தை மக்களுக்கு உணர்த்தினார்.

மகாஸ்வாமியின் அவதாரம் முதல் அவரது கனகாபிஷேகம் வரையிலான வாழ்க்கைச் சம்பவங்கள் பாங்குற தொகுக்கப்பட்டு, மக்கள் முன்னர் நாடக வடிவமாக, இளங்கோ குமணனின் எழுத்து மற்றும் இயக்கத்தில் வழங்கப்பட்டுள்ளன. இந்நாடகம் 2017-ம்ஆண்டு அரங்கேற்றப்பட்டு, தற்போது பொன்விழா கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

காஞ்சி காமகோடி பீடத்தின் 70-வது பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஆசியுடன் நாடகம் தொடங்குகிறது. 1894-ம் ஆண்டு மே மாதம் 20-ம் தேதி சுவாமிநாதனின் அவதாரம், அவரது குழந்தைப் பருவம், ஆற்காடு அமெரிக்கா மிஷன் உயர்நிலைப்பள்ளியில் அவரது பள்ளிப் படிப்பு, ஆசிரியர்களின் வழிகாட்டுதல், முறுக்குப் பாட்டியுடன் விவாதம் என்று நாடகம் நகர்கிறது.

13 வயது சுவாமிநாதனின் ஜாதகத்தைப் பார்த்த ஜோதிடர் உடனடியாக அவர் பாதங்களைப் பற்றிக் கொள்கிறார். அவரது தந்தை ஜோதிடரிடம், “எதற்காக சின்னப் பையனின் பாதங்களைப் பற்றிக் கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்க அதற்கு அவர், “விட வேண்டிய பாதமா இது? அனைவரும் பற்றிக் கொள்ளவேண்டிய பாதம் அல்லவா?” என்கிறார்.1907-ல் பீடாரோஹணம் நடைபெறுகிறது. தொடக்கத்தில் இருந்தே மகாஸ்வாமியின் மகிமைகள் வசனம் மற்றும் காட்சிகளாக விரிவடைகின்றன. பல நிகழ்ச்சிகள் இருவருக்கிடையே நிகழும் உரையாடல்களாக விவரிக்கப்படுகின்றன.

சிறிய வயதில் பீடாதிபதி ஆன மகாஸ்வாமி, சிறந்த நிர்வாகத் திறன் கொண்டவராக இருந்தார். புனித நூல்களைக் கற்றுக் கொள்வது, கற்றறிந்த அறிஞர்களுடன் கலந்துரையாடுவது, வேதம், தேவாரம், இலக்கணம்கற்பது என்று அனைத்திலும் முத்திரை பதிக்கிறார். ஏழை எளிய மக்கள் மீதான அவரதுகருணை, விவசாயி, ஏழைப் பெண் திருமணம், வளையல் காரர் மூலம் வெளிப்படுகிறது.

மேலும், திருமணத்தின்போது வரதட்சணை வாங்கக் கூடாது, பணம் வாங்கிக் கொண்டு வாக்களிக்கக் கூடாது, பட்டுப் புடவை கட்டிக் கொள்ள வேண்டாம், இந்தியாவில் படித்துவிட்டு வெளிநாட்டில் பணிபுரிவதை தவிர்க்க வேண்டும், பிற மதங்களை மதிக்க வேண்டும், அரசியலில் தூய்மை வேண்டும், ஒண்ணுமில்லைன்னு சொல்றதுலதான் எல்லாமே அடங்கி இருக்கு என்றும் மக்களுக்கு அறிவுறுத்துகிறார்.

நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பக்தர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கிறார். இந்து மதத்தின் வரலாறு மற்றும் மேன்மை, உண்மையான பகுத்தறிவு, ஆன்மிகத்தின் அவசியம், கல்வியின் முக்கியத்துவம், நாட்டுப் பற்றின் உயர்வு, மதமாற்றம் குறித்த தெளிவு, தேர்தல், ஜனநாயகம் மற்றும் அகிம்சை பற்றியும் இந்த நடமாடும் தெய்வத்தின் குரல் ஒலிக்கிறது. வேத கோஷங்கள் மற்றும் மேள தாளங்கள் முழங்க ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆகியோர் மகாஸ்வாமிக்கு கனகாபிஷேகம் செய்யும் காட்சியுடன் நாடகம் இனிதே நிறைவு பெறுகிறது.

ஒவ்வொரு காட்சியும் அழகாக அமைக்கப்பட்டுள்ளது. பால சுவாமிக்கும் முறுக்குப்பாட்டிக்கும் இடையேயான சம்பாஷணைகள், மகாஸ்வாமி வேற்று மதத்தினருடன் உரையாடுவது, அனைவரையும் அரவணைத்துச் செல்லும் லாவகம் ஆகிய காட்சிகள் கண்களில் நீர் வரவழைக்கின்றன. தோட்டாதரணியின் அரங்க அமைப்பு, மாண்டலின்யு.ராஜேஷின் இசை, பெரம்பூர் குமாரின் ஒப்பனை ஆகியன நாடகத்துக்கு மெருகூட்டுகின்றன.

ஒவ்வொரு நடிகரும் தன் கதாபாத்திரத்தை உணர்ந்து அதன்படி வாழ்ந்துள்ளனர். கதாபாத்திரங்களின் தேர்வு, அவர்களின்உடை ஆகியவற்றில் இயக்குநர் அதிக கவனம் செலுத்தியுள்ளது பாராட்டுக்குரியது. இயக்குநர் இளங்கோ குமணன், சுவாமிநாதனின் ஆசிரியராக வருவது கனகச்சிதம்.

மகாஸ்வாமியின் வெவ்வேறு வயதுகளில் தீரஜ் மோகன் (13 முதல் 52 வயது வரை), இ.எம்.எஸ்.முரளி (53 முதல் 71 வயது வரை), வாசுதேவன் (72 முதல் 100 வயது வரை) நடித்துள்ளனர். வாசுதேவன் மகாஸ்வாமியின் கதாபாத்திரத்தை உருவ அமைப்பிலும், நடிப்பிலும் அப்படியே பிரதிபலிக்கிறார்.

ஒவ்வொரு காட்சியிலும் மகாஸ்வாமியின் வருகையை அறிவிக்கும் விதமாக சாமா ராக பின்னணியில் ‘ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர’ ஒலிப்பது தெய்வீக சூழலை மேம்படுத்துகிறது. 156 நடிகர்களை ஒன்றிணைத்து மகாஸ்வாமி உணர்த்திய பக்தி, எளிமை, நேர்மை ஆகியவற்றை வலியுறுத்தும் பெரியநாடகத்தை வழங்கிய இயக்குநருக்கு பாராட்டுகள். அவருக்கு உறுதுணையாக இருக்கும் தயாரிப்பாளர்கள் முரளிதரன், அனந்த கிருஷ்ணன், ராஜேந்திரன் ஆகியோரின் பங்களிப்பு அளப்பரியது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in